நீண்டநாள் விசாரணை கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் அரசியல் கைதிகள்தான் - அமைச்சர் மனோ

ஊடகப்பிரிவு-
ட்டம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எங்களை பொறுத்தவரையில் சிறைகூடங்களில் விசாரணை கைதிகளாக நீண்ட வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு இருப்போர் அரசியல் கைதிகள்தான். சட்டப்படி அவர்கள் செய்து இருப்பது குற்றமாக இருக்கலாம். ஆனால், அந்த குற்றங்கள் செய்யப்படுவதற்கான அடிப்படையானது, அரசியலே என்பது சிறு குழந்தையும் அறியும். 

அதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை செய்தோர், கொள்ளை அடித்தோர், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டோர் பற்றி நாம் இங்கே பேசவில்லை. மேலும் குறிப்பிட்ட இந்த குற்றங்களை புரியாமலேயே, வெறும் சந்தேகத்தின் அடிப்ப்படையிலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். எனவே இங்கே எல்லாமே அரசியல்தான். எனவே யார் என்ன சொன்னாலும், இவர்கள் அரசியல் கைதிகள்தான்.

இப்படி அரசியல் குற்றம் புரிந்த பலர் வடக்கிலும், தெற்கிலும் இருகின்றார்கள். பாரிய குற்றங்கள் புரிந்தார்கள் என்ற பலத்த சந்தேகங்களுக்கு உள்ளாக்கப்பட பலரும் நாடு முழுக்க இருகின்றார்கள். இவர்களில் பலர் தெற்கிலும், வடக்கிலும் வாழும் மக்களின் சார்பாக பாராளுமன்றத்திலும் இருக்கின்றாகள். 

எனவே இன்றைய தமிழ் அரசியல் கைதிகளை பிணையிலோ, மன்னிப்பிலோ விடுவிக்க அரசியலை தவிர, வேறு தடையேதும் கிடையாது என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். 

அரசியல் கைதிகள் தொடர்பான சமூக அமைப்புகள், அமைச்சர் மனோ கணேசனை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியுள்ளன. இந்த உரையாடலில் அமைச்சர் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

அரசியல் கைதிகள் விவகாரம் எமது அடிப்படை பிரச்சினைகளில் ஒன்று ஆகும். இது தீர்க்கப்படாவிட்டால் இந்த நாட்டில் நல்லெண்ணம் ஏற்படுத்த முடியாது. எனக்கு இது ஒரு புதிய விஷயம் இல்லை. இதுபற்றி எனக்கு ஆழமாக தெரியும். இதுபற்றி நாம் ஏற்கனவே அரசாங்க தலைமைக்குள் உரையாடியுள்ளோம். இன்று ஒரு தீர்வுக்கான சூழல் உருவாகியுள்ளது. அதை பயன்படுத்தி இந்த பிரச்சினையை நான் ஜனாதிபதியின் கவனத்துக்கு இன்னும் சில தினங்களில் மீண்டும் கொண்டு வரவுள்ளேன்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முயற்சிகளை செய்யும்போது அது தொடர்பில் ஒரு அமைச்சரவை அமைச்சரான எனக்கும் அறிவித்து, கலந்தாலோசித்தால் அது இந்த பிரச்சினைக்கு தீர்வை எட்ட மிகவும் உதவும் என்பது எனது நிலைப்பாடு. அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கின்ற தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளே இருந்தபடியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியே இருந்தபடியும் முயற்சிகளை செய்யலாம். 

புதிய பாராளுமன்றம் கூடிய முதல் நாளே தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எம்பி அவர்கள் தமிழ் எம்பிக்களை ஒருங்கிணைத்து ஒரு பாராளுமன்ற குழுவை அமைப்போம் என்று யோசனை சொன்னார். 

அதை நான் உடனேயே ஆமோதித்தேன். ஆனால், அதன்பிறகு அதுபற்றிய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. இத்தகைய ஒரு தமிழ் எம்பீக்கள் குழு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் பிரேரித்து எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இந்த குழு அமையுமானால் அதில் நாம் அரசியல் கைதிகள் உட்பட நாடு முழுக்க வாழும் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகளை பேசலாம். இந்த குழு, முஸ்லிம் எம்பீக்களுடனும் பேசலாம். ஜேவீபியுடனும் பேசலாம். ஏனைய முற்போக்கு எம்பீக்களுடனும், கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு பேசலாம்.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தங்களுக்கு இருக்கின்றதாக கருதப்படும் பிரத்தியேக தொடர்பு வழியால் பிரச்சினைகளை தாங்களே பேசி தீர்க்கலாம் என்று முடிவு செய்து இருக்குமானால், அது அவர்களது உரிமை. பொது பிரச்சனைகளை தீர்க்க தேசிய நல்லெண்ண விவகார பொறுப்பை கொண்டுள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சரான எனது ஒத்துழைப்பு தேவையில்லை என்ற கூட்டமைப்பு முடிவு செய்யலாம். அந்த உரிமையில் நான் தலையிடுவது நாகரீகமில்லை.

எது எப்படி இருப்பினும் வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நான் இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் பேசவுள்ளேன். இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதியால் மட்டுமே முடியும். அதேபோல் விசாரணை கைதிகளுக்கு பிணை வழங்க, வழக்கு தொடுனர் திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கவும் அவருக்கு முடியும். 

இவர்கள் அரசியல் கைதிகள் என்றால், இந்த விவகாரம் தொடர்பான விடுவிப்பு அல்லது பிணை என்ற முடிவுகளும், அரசியல் முடிவுகளாகத்தானே இருக்க முடியும்? ஆகவேதான் நாம் அரசியல்ரீதியாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட்ட அனைத்து தரப்பினரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -