சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த 10 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இரண்டு மணிநேரம் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
தெலிஜ்ஜவில இலக்கம் 49 என்ற இலக்கத்தில் இருக்கும் ரணகிறி ஸ்டேட் என்ற இடத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
அன்றைய தினம் குறித்த இடத்தில் தர்ம உபதேசம் மற்றும் தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் மதியம் 12.45 அளவில் மகிந்த ராஜபக்ச அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து 30 நிமிடங்களுக்கு பின்னர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அந்த இடத்திற்கு சென்றுள்ளார். மதிய உணவுக்கு பிறகு இருவரும் அங்குள்ள அறையொன்றில் 2 மணி நேரத்திற்கும் மேல் இரகசியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
எந்த விடயங்கள் குறித்து பேசப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அறிந்து இந்த பேச்சுவார்த்தை நடந்ததா? அல்லது பேச்சுவார்த்தையின் பின்னர் இருவருக்கும் தெளிவுபடுத்தப்பட்டதா என்ற விபரங்களும் வெளியாகவில்லை.
எது எப்படியிருந்த போதிலும் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் குறித்த விசாரணைகளில் தப்பிக்க எதனை பிடித்தாவது தொங்கி கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மகிந்த ராஜபக்ச, ராஜித சேனாரத்ன ஏதேனும் பேரம் பேச்சில் ஈடுபட்டு இணக்கத்திற்கு வர தயாராகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.