ஐ.ஏ.காதிர்கான்-
இலங்கையில் ஐ எஸ் மற்றும் ஆயுதம் தாங்கிய தீவிரவாதம் இருப்பதாக சொல்லும் பொதுபலசேனாவின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டால் அதற்காக பொதுபலசேனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையில் அதனை ஆய்வு செய்யும்படியும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க உலமா கட்சியும் தயார் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது.
இலங்கை முஸ்லிம்களிடையே ஆயுத தீவிரவாதம் உள்ளதாக கடந்த பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. பல வருடங்களுக்கு முன் தற்போதைய அமைச்சர் சம்பிக்க ரணவக்கயாவினாலும் இவ்வாறு ஊடகங்கள் மூலம் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவராலும் இவற்றை நிரூபிக்க முடியவில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இயங்கிய பொது பல சேனா இக்குற்றச்சாட்டை பாரிய அளவில் முன்னெடுத்தது.
அத்தகைய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் அவற்றை நிரூபிக்க முடியுமா என்றும் உலமா கட்சி அப்போது சவால் விட்டதோடு விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகளையம் கண்டு பிடித்த இலங்கை இராணுவத்துக்கு முஸ்லிம் ஆயுத தாரிகளை கண்டு பிடிப்பது சிரமமா என்றும் கேட்டிருந்தோம்.
ஆனாலும் ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தால் அது உண்மை போன்று தோற்றமளிக்கும் என்பதற்கிணங்க நாட்டில் இனவாதத்தை உசுப்பி அதில் குளிர் காயும் நோக்கத்துடன் பொது பல சேனா இக்குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் முன் வைத்தது. கடைசியில் நாட்டை புலிகளிடமிருந்து மீட்டுத்தந்து சுதந்திரம் பெற்றுத்தந்த மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம்களிடமிருந்து பிரித்து அவரை தோல்வியடையச்செய்வதற்கு மட்டுமே பொதுபல சேனாவினால் முடிந்ததே தவிர இன்று வரை முஸ்லிம்கள் மீதான ஆயுத தீவிரவாத குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
இலங்கையில் ஐ எஸ்ஸோ, முஸ்லிம் ஆயுத தீவிரவாமோ இல்லை என்பது பொலிஸ் மாஅதிபர் மற்றும் இராணுவ அதிகாரிகள் கூறியும் அதனை ஏற்காமல் இது பற்றி ஜனாதிபதியிடம் பொது பல சேனா முறையிடுகிறார்கள் என்றால் இவர்கள் பொலிசையும் ராணுவத்தையும் அவமதிக்கிறார்கள் என்றே அர்த்தம்.
ஆனாலும் இந்த நாடு ஜனநாயக நாடு என்ற வகையில் யார் மீதும் யாரும் குற்றம் சாட்ட இடமுண்டு என்ற வகையிலும் ஜனாதிபதியிடம் பொதுபல சேனாவின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமற்றவை என நிரூபிக்கப்படு;ம் பட்சத்தில் அவ்வியக்கம் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிகந்தனையுடன் இவற்றை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியை உலமா கட்சி கேட்டுக்கொள்வதுடன் இத்தகைய ஆய்வின் போது ஒரு தரப்பாக கலந்து அரசுக்கு ஒத்துழைக்க உலமா கட்சியும் தயார் என்பதை கௌரவ ஜனாதிபதிக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
Dr. Mubarak Abdul Majeed Moulavi
Leader,
Muslim Olama Party