சுஐப் எம் காசிம், அஷ்ரப் ஏ.சமத் –
பேராதிக்க மனோநிலைகள் எமது நாட்டின் ஒற்றுமைக்கு பேரிடியாக உள்ளதை கடந்த கால, நிகழ்கால சம்பவங்கள் துலாம்பரமாக எடுத்துக்காட்டி நிற்கின்றன. பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நமது நாட்டில் எழுதப்படாத சில கோட்பாடுகளையும் ஏற்க முடியாத பல நியாயங்களையும் சிறுபான்மையினர் மீது திணித்து அதனை ஏற்றுக்கொள்ள வைப்பதே கடும்போக்குடைய பௌத்த தேரர்களின் சிந்தனையாக உள்ளது.
'தேசப்பற்று' எனும் போர்வைக்குள் சிறுபான்மையினரை கொத்திக் குதறும் கோட்பாடு பௌத்த தேரர்களிடம் குடிகொண்டிருப்பதை அவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. நாட்டின் இருப்பு, இறைமை, இயற்கைவளம், சுயாதிபத்தியம் என்பவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவதே உண்மையான தேசப்பற்று என கருதப்பட்டாலும் சில தேரர்கள் பௌத்த மக்களை மட்டும் பாதுகாப்பதுடன் சிறுபான்மையினரை எச்சரித்து, நச்சரித்து அடக்குவதையே தேசப்பற்றென கருதுகின்றனர். இவ்வாறான தேரர்களின் மனோ நிலையில் ஒட்டுமொத்த பெரும்பான்மையின சகோதர சிங்கள இனம் இல்லை என்று அடித்துக் கூறலாம். அவ்வாறிருந்தால் பௌத்த கோட்பாட்டை முன்னிலைப்படுத்தி, முன்னிறுத்தி போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையும் ஜனாதிபதியாகியிருப்பார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் உச்சளவிலான பௌத்த வாதத்தை அவர் தனது தேர்தல் பிரசார ஆயுதமாக பயன்படுத்தினார். எனினும் அவர் தோல்வியையே சந்தித்தார்.
1998 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவரும் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத் தலைவருமான மர்ஹூம் அஷ்ரபுடன் தீகவாபி விவகாரம் தொடர்பில் சோம தேரர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர் மீது சேறு பூசினார். அதே போன்று தற்போது வில்பத்து விவகாரம் தொடர்பில் பேரினவாத சிந்தனையுள்ள இனவாதிகள் அமைச்சர் றிசாட் மீது தொடர்ச்சியாக பழிகளைச் சுமத்தி அபாண்டங்களை பரப்பி வருகின்றனர். இவை முஸ்லிம்கள் மீதான கடும்போக்காளர்களின் பேராதிக்க மனோ நிலையாகும்.
அம்பாறை மாவட்ட தீகவாபியினை புனரமைத்து பொன்னன்வெளி வயல்களை முஸ்லிம்களுக்கு தாரை வார்ப்பதாக மர்ஹூம் அஷ்ரப் மீது அபாண்டப் பழிகளை சுமத்திய சோம தேரருடன் 1998 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் டி.என்.எல் தனியார் தொலைக்காட்சியில் அஷ்ரப் விவாதம் புரிந்து முஸ்லிம் சமூகத்தின் மீதான அபாண்டங்களைப் போக்கினார்;. தனது வாதத் திறமையால் உண்மைகளை வெளிப்படுத்தி மாற்றின மக்களையும் கவர்ந்திழுத்தார். மர்ஹூம் அஷ்ரப், சோம தேரருடன் விவாதத்துக்கு ஆயத்தமாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் முஸ்லிம் எம்.பிக்களையும் சந்தித்து தனது நிலைப்பாட்டை எடுத்துக் கூறிய போது பெரும்பாலான முஸ்லிம் எம்.பிக்கள் தேரருடன் அஷ்ரப் விவாதத்துக்குச் செல்வதை விரும்பியிருக்கவில்லை. காரணம், பௌத்த தேரர் ஒருவருடன் விவாதம் புரியும் போது சிங்கள மொழிப்பிரயோகத்தில் ஏற்படும் தவறுகள் மர்ஹூம் அஷ்ரபையும் முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும் என கருத்து வெளியிட்டனர். எனினும் மர்ஹூம் அஷ்ரப் அல்லாஹ்வை முன்னிறுத்தி உண்மைகளைத் தெளிவுபடுத்தி சமூகத்துக்குப் பாரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
அதே போன்று நாளை 28.12.2015 இரவு 10:00 மணிக்கு 'ஹிரு' தொலைக்காட்சியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆனந்த சாகர தேரருடன் விவாதம் புரிகிறார். வில்பத்து விவகாரத்தில் பேரினவாத சக்திகளால் மிகவும் மோசமாக தூஷிக்கப்பட்ட றிசாட் பதியுதீன் தனது பொறுமை எல்லைமீறிப் போனதால் உண்மையை நிலைநாட்டி தனது சமூகத்தை அபாண்டங்களில் இருந்து நிரபராதியாக்குவதற்காக ஆனந்த சாகர தேரருடன் பகிரங்க விவாதம் ஒன்றில் நாளை சந்திக்கின்றார். பொதுபல சேனா இயக்கம், கடும்போக்கு பேரினவாத இயக்கங்கள், இனவாதச் சூழலியலாளர்கள் றிசாட் பதியுதீன் மீது சொல்லெறிகளையும் வசை வம்புகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்ததையடுத்து றிசாட் பதியுதீன் தமது சமூகத்தின் நியாயங்களையும் இந்த விவகாரம் தொடர்பிலான உண்மை நிலைகளையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திலும் ஊடகவியலாளர் மாநாட்டிலும், அமைச்சரவையிலும் தெளிவு படுத்திய போதும் பேரினவாதிகள் அடங்கியபாடில்லை.
கடந்த வாரம் விகாரமஹா தேவி பூங்காவுக்கு முன்னால் ஆனந்த சாகர தேரரின் தலைமையில் குழுமிய பேரினவாத இயக்கங்கள் அப்பாவி இளைஞர்களையும் யுவதிகளையும் தங்கள் போராட்டத்துக்குள் உள்ளீர்த்து வடபுல முஸ்லிம் அகதிகளையும் அவர்களின் பிரதிநிதியான றிசாட் பதியுதீனையும் மிகவும் மோசமான முறையில் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டித்தீர்த்தனர். றிசாட் வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்களை குடியேற்றுவதாகவும் அந்தக் காட்டைப் பயன்படுத்தி போதை வஸ்து வியாபாரம் செய்வதாகவும் வில்பத்துக் காட்டை அழிப்பதன் மூலம் தேசத்தின் வளங்களை சூறையாடுவதாகவும் ஆனந்த சாகர தேரர் விஷக்கனல்களை கக்கினார்.
அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் நாளை தொலைக்காட்சியில் விவாதம் புரியும் ஆனந்த சாகர தேரர் யார்? அவர் பொளத்த சிங்கள சபாவின் செயலாளர். போர் முடிந்து முஸ்லிம்கள் தமது பூர்வீகப் பிரதேசமான மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலைக்குழி, சிலாபத்துறை போன்ற பிரதேசங்களில் குடியேறிய போது மறிச்சுக்கட்டிக்குச் சென்ற ஆனந்த சாகர தேரர் அந்த மக்களை அச்சுறுத்தி வெளியேற்றியவர். அத்துடன் அந்த பிரதேசத்தில் அரச மரத்தையும் நாட்டியவர்.
வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கே ஆக்கிரமித்துள்ளதாகவும் அதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீனே மூல காரணம் எனவும் போலி அறிக்கைகளைத் தயாரித்து இனவாத சூழலியலாளர்களின் கருத்துக்களையும் அந்த அறிக்கைக்குள் உள்வாங்கி 57 பக்கங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தவர்.
வடபுல முஸ்லிம் சமூகத்தின் மீதும் அமைச்சர் றிசாட் மீதும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஆனந்த சாகர தேரர் நாளை அமைச்சருடன் விவாதம் புரிவதற்கு 'ஹிரு' தொலைக்காட்சியை மாத்திரமே தேர்ந்தெடுத்துள்ளமை மற்றுமொரு அவரது தந்திரோபாயமாகும். இந்த விவாதத்தை நடாத்துவற்கு 4 தொலைக்காட்சிகள் முன்வந்த போதும் முஸ்லிம் சமூகத்தையே குறிவைத்துத் தாக்கும் 'ஹிரு' தொலைக்காட்சியை அவர் தேர்ந்தெடுத்து தனது வாதத்தின் பலவீனத்தை மறைத்துக் கொள்ளலாம் என நினைக்கின்றார் போலும். தனது செல்லப்பிள்ளையான 'ஹிரு' இந்த விவாதத்தில் தனது கருத்துக்களுக்கு பலம் சேர்க்கும் என நம்புகின்றார் போலும்.
எது எப்படியிருந்த போதும் உண்மை ஒரு நாளும் அழிவதில்லை. அமைச்சர் றிசாட் பதியுதீன் நாளைய விவாதத்தில் வில்பத்துக்காட்டை முஸ்லிம்கள் ஓரங்குலமேனும் அபகரிக்கவில்லை என்பதையும் இது தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்பதையும் இறைவனின்; துணைகொண்டு நிரூபித்து முஸ்லிம் சமூகத்துக்கான உரிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுப்பார் என்பது திட்டவட்டமான உண்மையாகும்.