பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்து பெற்றோர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் - உதுமாலெப்பை MPC

சலீம் றமீஸ்-
மது பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பெற்றோர்கள் கவனம் செலுத்துவதனால்தான்; பெறுபேறுகள் சாதனைகளாகவும், நாம் பெருமை அடையக் கூடியதாகவும் அமைந்து விடுகின்றன - கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை

நமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்து விட்டதன்பின் பாடசாலை சூழலில் அதிபர், ஆசிரியர்களின் வழி காட்டலில் கல்வி செயற்பாடுகளில் நமது பிள்ளைகள் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலை முடிந்த பின்பு வீட்டுச் சூழலில் நமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகள் குறித்து பெற்றோர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். 

குறிப்பாக அதிபர், ஆசிரியர்களுடன் நமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பாக விபரங்களை அறிந்து பிள்ளைகளின் சிறந்த கல்வி வளர்ச்சியில் அக்கரை செலுத்துவதன் ஊடாகவே பெறுபேறுகள் சாதனைகளாகவும், நாம் பெருமை அடையக் கூடியதாகவும் அமையும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலயத்தின் புதிய 1ம் தர மாணவர்களின் 'ஆசிபெறும் ஆனந்த விழா' நிகழ்வு அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்....

அன்றைய காலத்தில் நாம் வீட்டுச் சூழலிலும், குடும்பச் சூழலிலும் சுதந்திரமாக வாழ்ந்து வந்த வேளையில் திடீர் என பெற்றோர்கள் பாடசாலைக்கு முதலாவதாக செல்லும் செய்தியினை எங்களிடம் சொல்லும் போது அச்சமான சூழ்நிலையில்தான் பாடசாலைக்குள் ஆரம்ப கல்விக்காக சேர்க்கப்பட்டோம். 

இன்று அந்த விடயம் கல்வி அமைச்சினால் சிறந்ததாக மாற்றப்பட்டுள்ளது. நமது மார்க்க அறிஞர்களின் பிரார்த்தனையும், அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள், மாணவர்களின் ஆசிர்வாதத்தோடும் தரம் 01க்கு மாணவர்கள் இணைத்து கொள்ளும் முறை மாற்றப்பட்டுள்ளது குறித்து நாம் மகிழ்ச்சி அடையக் கூடியதாக உள்ளது.

அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் முடிவுகளில் அட்டாளைச்சேனையில் இருந்து வைத்திய துறையிலும், பொறியியல் துறையிலும் சாதனை படைக்க முடியாமல் போயுள்ளது. பல சாதனையாளர்களை உருவாக்கிய நமது பிரதேசத்தில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது குறித்து நாம் எல்லோரும் கவலைப்படுகின்றோம். 

கல்வி வளர்ச்சியில் நன்கு திட்டமிட்ட முறையில் பல ஆண்டுகள் அர்ப்பணிப்போடு செயல்படும் போதுதான் நமது பிள்ளைகளின் பெறுபேறுகள் சிறந்ததாக அமையும், நமது தாய்ப்பாடசாலையான அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கடந்த 05 வருடங்களுக்கு முன் அதிபர் வெற்றிடம் ஏற்பட்டது. அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அட்டாளைச்சேனை கல்வி கோட்டத்தைச் சேர்ந்த மூத்த அதிபர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து சிறந்த ஆளுமையுள்ள ஒரு அதிபரை தெரிவு செய்தனர். 

புதிய அதிபரும் தமது கடமையை பொறுப்பேற்றார். இதனை சகிக்க முடியாத சிலர் தங்களின் சுய நலனுக்காக மாணவர்களை பிழையாக வழி நடாத்தி ஆளுமையுள்ள அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இதனால் கடமையேற்ற புதிய அதிபர் கல்வி காரியாலயத்திற்கு இடமாற்றம்; செய்யப்பட்டார். தங்களுடைய சுயநலனுக்காக புதிய அதிபர் ஒருவரை நியமனம் செய்தனர். நியமிக்கப்பட்ட புதிய அதிபரும் தன்னாள் அதிபராக தொடர்ந்தும் சேவையாற்ற முடியாதுள்ளது எனக் கூறி முன்கூட்டியே அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்று சென்றார். 

நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் நீண்ட கால திட்டத்தினை சிந்திக்காமல், குறுகிய மனப்பாங்கோடு செயல்பட்ட சிலரின் தீய நடவடிக்கைகளின் அறுவடைகளைத்தான் இன்று நாம் அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டுள்ளது. நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருந்து சுயநல நோக்கில் செயற்பட்டவர்களை இப்போது நமது மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

மக்கள் பிரதி நிதிகள் பாடசாலைகளுக்கு தேவையான பௌதீக வளங்கள், ஆசிரியர் பற்றாக் குறை போன்ற விடயங்களில் அக்கரை காட்டி உதவி புரியலாம். பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் கல்வி உயரதிகாரிகளும், அதிபர்களும், ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் செயல்படும் போதுதான் நமது மாணவர்களின் பெறுபேறுகள் சாதனைகளாகவும், நாம் பெருமை அடையக் கூடியதாகவும் அமைந்து விடுகின்றன.

அல் - அர்ஹம் வித்தியாலய அதிபராக நீண்ட காலமாக கடமை புரிந்த எம்.ஏ.அன்சார் ஆளுமையுள்ளவராக செயற்பட்டதனால் கல்வி வளர்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. அவர் சுய விருப்பத்தின் பேரில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். அட்டாளைச்சேனையின் முக்கிய பாடசாலையில் ஒன்றான அறபா வித்தியாலயத்தின் கல்வியை வளர்த்தெடுப்பதில் நம் அனைவருக்கும் பொறுப்புள்ளது. 

அதனால்தான் அதிபரின் வேண்டுகோளை ஏற்று அறபா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று செல்வதற்கு அல் - அர்ஹம் வித்தியாலய பாடசாலை சமூகம் தங்களின் விருப்பத்தை தெரிவித்தது. இந்த நிலையில் அல்- அர்ஹம் வித்தியாலயத்தின் சிறந்த ஆசிரியர்களை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஆரம்ப செயற்பாடாக ஒரு ஆசிரியரை இடமாற்றம் செய்தனர். 

அந்த விடயத்தில் நாங்கள் தலையிட்டு குறிப்பிட்ட ஆசிரியரின் இடமாற்றத்தை நிறுத்தியுள்ளோம். அல் - அர்ஹம் வித்தியாலய மாணவர்களை வேறு பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கான முயற்சிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த விடயத்தில் பெற்றோர்கள், பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அவதானமாக இருக்க வேண்டும்.

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் கடந்த வருடம் 97 மாணவர்கள் இடை விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் குறிப்பாக கடற்கரைப் பிரதேசங்களை சேர்ந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஏழை மக்கள் வாழும் பிரதேசங்களில் கல்வி நிலை வீழ்ச்சி அடையாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் இணைந்து செயல்பட்டு நமது பிரதேச கல்வி வளர்ச்சியில் அதிக அக்கரை செலுத்தி மாணவர்களின் கல்வித் தரம் சிறந்து விளங்குவதற்கான வசதி, வாய்ப்புக்களை நாம் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும். 

நமது பெற்றோர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் சீரான உறவுகளைப் பேணி செயல்பட வேண்டும். நமது பிள்ளைகளின் கல்வியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ஆசிரியர்களை நாம் என்றும் மறந்து விடமுடியாது. இந்த விடயத்தில் நமது பிரதேச பெற்றோர்கள் கவனயீனமாக செயல்படுவார்கள் என்றால் இன்னும் பல வருடங்களுக்குப் பின் இதன் அறுவடைகளை நினைத்து வருந்த வேண்டிய நிலமை நமது மக்களுக்கு ஏற்படும். 

அல் அர்ஹம் வித்தியாலய பாடசாலை சமூகம் எதிர்காலத்தில் பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய புதிய நிலமை உருவாகி உள்ளது. நமது பிரதேச கல்வித்துறைக்கு கடந்த காலங்களில் முடிந்தளவு பணிபுரிந்து வருகின்றோம். நமது கல்வி விடயங்களில் எப்போதும் பக்க பலமாக இருந்து உதவி புரிவேன் எனவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அக்கறைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம், உதவிப் பணிப்பாளரும், அல் - இபாதா கலாசார மன்றத்தின் தலைவருமான யு.எம்.நியாஸி மௌலவி, ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சகுர்டீன், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஏ.அன்சார் உட்பட கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -