பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கையின் தென் மாகாணத்த்தில் காலி மாவட்டத்தில் ஹிரிம்புர குறுக்கு வீதியில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி 18 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில் தனது 5வது மௌலவி, ஹாபிழ் பட்டமளிப்பு விழா கடந்த 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஓ.பத்ஹுர் ரஹ்மான் பஹ்ஜி தலைமையில் இடம்பெற்ற மேற்படி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சவூதி அரேபிய நாட்டின் சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் காலித் இப்னு ஸாலிஹ் அத்தாவூத் கலந்து கொண்டார்.
இதன் போது அதிதிகளினால் 2011ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு காலப்பகுதிகளில் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இஸ்லாமிய ஷரீஆ கல்வியை பூர்த்தி செய்த 49 மாணவர்கள் மௌலவி பட்டம் பெற்றதோடு, அல்குர்ஆண் மனனம் செய்த 20 மாணவர்கள் அல்-ஹாபிழ் பட்டமும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி அஷ்ஷேய்க் காலித் இப்னு ஸாலிஹ் அத்தாவூத் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரிக்கு இதுவரையில் வழங்கிய சேவைகளை நினைவு கூறும் வகையில் கல்லூரி நிறுவாகத்தினால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இதனை இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஓ.பத்ஹுர் ரஹ்மான் பஹ்ஜி வழங்கி கௌரவித்தார்.
இங்கு நிகழ்வின் சிறப்புரையை சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி அஷ்ஷேய்க் காலித் இப்னு ஸாலிஹ் அத்தாவூத் அறபு மொழியில் நிகழ்த்தினார். இதனை தமிழ் மொழியில் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் பஹ்ஜி மொழிபெயர்ப்பு செய்தார்.
மேற்படி பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரியினால் பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் விழாவில் ,உலமாக்கள், புத்திஜீவிகள், இஸ்லாமிய நிறுவனங்களின் தலைவர்கள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட அவர்களின் குடும்பத்தினர், இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்ற பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பட்டமளிப்பு விழாவில் இலங்கையிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் வெலிகம, நிந்தவூர், மன்னார், ஓட்டமாவடி, கம்பிரிகஸ்வௌ, மாத்தளை, பூலோச்சேனை, இரத்தினபுரி, வேவல்தெனிய, நுரைச்சோலை, வாழைச்சேனை, மாவனல்ல, கெப்பிடிகொல்லாவ, காத்தான்குடி, தர்காடவுன், பேருவலை, புத்தளம், அகுரனை, முந்தல், பாணந்துரை, அக்கரைப்பற்று, நான்கல்ல, காலி, நீர்கொழும்பு, திகன, ஹபுகஸ்தலாவ, ஹொரவபொதான, கொழும்பூ, கலகெதர, கிந்தொட்ட, யடியன் தொட்ட, கொச்சிக்கடை, ஹெட்டிபொல, கல்ஹின்ன, தம்பால, கொழும்பு போன்ற பிரதேங்களைச் சேர்ந்த காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி மாணவர்கள் 49 பேர் மௌலவி பட்டமும், 20 பேர் அல்-ஹாபிழ் பட்டமும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.