கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் கௌரவ. ஷிப்லி பாறூக் அவர்களின் 2015ம் ஆண்டிற்கான மாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை இன, மத பேதமின்றி வழங்கினார்.
இந்நிகழ்வானது காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 16.02.2016ஆந்திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் கௌரவ. ஷிப்லி பாறூக் அவர்களும், கௌரவ அதிதிகளாக ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கைப் பரப்பு செயலாளர் அல்ஹாஜ். U.L.M.N. முபீன் (BA), முன்னால் நகர பிதா அல்ஹாஜ் மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் A.C.A. அப்கர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. வெலகெதர, காத்தான்குடி நகரசபை செயலாளர் திரு. J. சர்வேஸ்வரன், மட்டக்களப்பு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர், சமூக சேவைகள் அலுவலகர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் உற்பட பல அதிகாரிகளும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். ,
இந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் கௌரவ. ஷிப்லி பாறுக் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது வாழ்க்கையினை நடாத்திக்கொண்டிருக்கும் வருமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வு எழுச்சி பெறுவற்காக அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி அதனூடாக அவர்களது வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் அதன் அடிப்படையில் வாழ்வாதார உதவிகளாக இருபத்தொரு இலட்சம் பெறுமதியில் 58 தையல் இயந்திரங்கள், 18 இடியப்பம் அவிப்பதற்கான பொருட்கள், 19 துவிச்சக்கரவண்டிகள், 06 பாய்பின்னுதலுக்கான பொருட்கள் மற்றும் 11 சிறு கைத்தொழில் உற்பத்தி பொருட்கள் போன்ற வாழ்வாதார உதவிகளை 112 குடும்பங்களுக்கு இன்று வழங்கியிருக்கின்றோம்.
எங்களிடம் ஆயிரக்கணக்கான வாழ்வாதார உதவிக்கான வேண்டுகோள்கள் வந்து குவிகின்றன ஆனால் அவை அனைத்தையும் எம்மால் வழங்க முடியாமல் இருக்கின்றது காரணம் என்னவெனில் மாகாண சபையின் நிதி ஓதிக்கீட்டின் பிரகாரம் நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 100, 120 பயனாளிகளை தெரிவுசெய்து அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு சந்தர்பம் கிடைகின்றது.
நாங்கள் பயனாளிகளை தெரிவு செய்கின்ற பொழுது அரசியல் ரீதியாகவோ, உறவு பந்தங்கள் என்றோ, பாராமல் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு எவ்விதமான பாகுபாடுகளுமின்றி அணனத்து தரப்பினர்களும் பயனடைய வேண்டும் என சேவை அடிப்படையில் பிரதேச செயலகங்களூடாக தெரிவுசெய்யப்பட்டு அனைவருக்கும் இன்று வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் இங்கு உரையாற்றிய அவர் மக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடி சென்று குறைகளை கேட்கும் வீதிக்கு ஒருநாள் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக இன பாகுபாடு இன்றி தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் 4 நடமாடும் நிகழ்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக நடாத்தி அதில் பல குறைகளை நிவர்த்தி செய்துள்ளோம், இவ்வாறாக கடந்தவாரம் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட மாவிலங்குதுறை கிராமத்தில் நிகழ்ச்சியினை நடாத்தினோம் அங்கு அம் மக்களின் நிலைமைகளை பார்த்த பொழுது, யுத்த காலங்களில் முஸ்லிம் கிராமங்களை விட மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் கிராமமாக மாவிலங்குதுறை காணப்படுகின்றது.
அவர்களுக்கான பல குறைபாடுகள் நிவர்த்தி செய்து வைத்துள்ளோம் எனவே இவ்வாறாக பல நிகழ்ச்சிகளை நாடத்தி மக்களது குறைகளை ஓரளவேனும் நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் முயற்சித்து கொண்டிருக்கின்றோம். என தனதுரையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் கௌரவ. ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.