யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் மீளாய்வு மனு குறித்த தீர்ப்பை எதிர்வரும் 14ம் திகதி அறிவிக்கவுள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யந்துட்டுவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, கடுவளை நீதிமன்றத்தால் யோசித்த ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைத்தமை மற்றும் அவரது பிணை நிராகரிக்கப்பட்டமை என்பன சட்டத்துக்கு முரணானது என, குறிப்பிட்டார்.
எனவே அந்த முடிவை மீளாய்வு செய்து, யோசித்தவுக்கு பிணை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த அரச தரப்பு வழக்கறிஞர், கடுவளை நீதிமன்றத்தின் முடிவு சட்டத்துக்கு முரணானது அல்ல எனவும், எனவே மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்குமாறும் கூறினார்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யந்துட்டுவ, குறித்த மீளாய்வு மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 14ம் திகதி அறிவிக்கவுள்ளதாக, குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை, குறிப்பிடத்தக்கது.