அபு_அலா, ஏல்.எல்.எம்.நபார்டீன் -
தேசிய புற்றுநோய் ஒழிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இலங்கையில் வருடமொன்றுக்கு சுமார் 2500 பெண்கள் மார்பகப் புற்று நோயினால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இன்று காலை (09) இடம்பெற்ற உயரதிகாரிகளுடனான சந்திப்பின்போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
எனது மாகாணத்திலுள்ள பெண்கள் இச்சிகிச்சைப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தயக்கமும், வெட்கமும் அடைகின்றனர். இது இருக்கும்வரை எமது உடலிலுள்ள நோய்களை கடைசிவரையும் கண்டறிய முடியாது. நோய்க்கு வெட்கமும் தெரியாது. தயக்கமும் தெரியாது. எமது உடம்பிலுள்ள நோய் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமே தவிற ஒருபோதும் நோயினை குறைவடைய விடாது.
இன்று பலபேர் வெட்கத்தின் மூலம் இவ்வாறான உடற்பரிசோதனைகளை மேற்கொள்ளாமலும் இதில் சிலபேர் கடைசி நேரத்தில் தங்களின் நோய்கள் பெறிதாக்கிய பின்னர் சிகிச்சையினை பெறச் செல்கின்றனர். இதனால் வருடமொன்றுக்கு 500 இற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழக்கும் நிலைமைக்கு ஆளாகி வருகின்றனர்.
இவ்வாறான கொடிய நோயிலிருந்து எமது மக்களை பாதுகாக்கவேண்டும். அதற்கு எவ்வாறான வழிமுறைகளை நாம் கையாளலாம். என்ன திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் முன்வைக்கலாம் என்ற கருத்தினையும் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அதிகாரிகளுக்கு முன்வைத்தார்.
இந்த கொடிய நோயிலிருந்து எமது மக்களை பாதுகாப்பதாக இருந்தால் அவர்களை மாதத்தில் ஒரு முறையாவது இப்பரிசோதனைக்கு உட்படுத்தும் வைத்திய சிகிச்சையினை நாம் முன்னெடுக்க சகல வழிமுறைகளையும் இன்றிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் அதற்கான சகல திட்டங்களையும் நான் முன்னெடுக்கவுள்ளேன் என்றார்.