ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பெருந்தொகையானவர்கள் இந்நாட்டின் ஆறு பிரதேசங்களில் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததனால், இத்தகையவர்களைக் கைது செய்வதில் பாரிய தடைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளதாக இன்றைய சிங்கள வாராந்த சஞ்சிகையொன்று அறிவித்துள்ளது.
இந்த நாட்டில் குடியிருக்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் 30 இற்கும் மேற்பட்டோர் தற்பொழுது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக புலனாய்வுத் துறையினர் கடந்த சில நாட்களாக மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கலேவெல பிரதேசத்திலிருந்து சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் இணைந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டிருந்தார்.
ஐ.எஸ். அமைப்பு குறித்து இந்த நாட்டில் கண்டறிவதற்கு முறையான விசாரணை ஏற்பாடுகள் இல்லாதிருப்பது, எதிர்வரும் காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு பாரிய சவாலாக அமையும் என போர் தடுப்பு தொடர்பான விசேட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் நிலை காணப்படுகின்றது. எனவே, இந்த அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கோ அல்லது பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கோ பொறுப்பளிக்கப்பட வேண்டும் என பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசேட பொலிஸ் அதிகாரியொருவர் இது தொடர்பில் விசாரித்த போது கருத்துத் தெரிவித்ததாக அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
புலனாய்வுத் துறைத் தகவல்களின் படி, கொலன்னாவ, சாலமுல்ல, தெஹிவலை, குருணாகல மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய பிரதேசங்களில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் உள்ளனர். ஐ.எஸ். ஆதரவாளர்கள் இலங்கைக்குள் இருப்பதாக அரச புலனாய்வுத் துறையினால் கடந்த வாரம் விமர்சன அறிக்கையொன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நாட்டில் சிரியாவிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இலங்கை ஆதரவாளர்கள் 45 பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவித்துள்ளன.