வைரவிழா காணும் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி..!

அட்டாளைச்சேனை மன்சூர்-
ர்வதேச ரீதியில் கீர்த்தி பெற்று மிளிரும், அட்டாளைச்சேனை (ஷர்க்கியா) கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி 60 ஆண்டு நிறைவு வைரவிழா கொண்டாடவுள்ளது. வரலாற்று முக்கியத்துவமிக்க வைரவிழா மற்றும் 08வது மௌலவி பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் 06ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை தேசிய கல்வியிற் கல்லூரி கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடைபெறுகின்றது

கல்லூரியின் ஆளுணர் சபைத் தலைவர் பேராசிரியர் அச்சி எம் இஷாக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கடந்த 2006 முதல் 2015 ஆண்டு காலப்பகுதியில் மௌலவி கற்கைநெறியைப் பூர்த்தி செய்த உலமாக்கள், ஹாபிழ்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கல்லூரியின் பழைய மாணவர்களான பேராசிரியர்கள், கலாநிதிகள், முன்னாள் அதிபர்கள், ஆளுனர் சபை நிர்வாகிகள் ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

கல்லூரியின் 60 ஆண்டுகால வரலாற்றைச் சித்தரிக்கும் விஷேட நினைவு மலரும் வெளியிடப்படவுள்ளது. மர்ஹூம்கள் அல்லாமா அப்துழ்ழா ஹஸரத், அல்ஹாஜ் பஸீல் ஏ மஜீத், சேகுஷ்ஷர்கி உமரலியார் ஹஸ்ரத், அல்ஹாஜ் பத்றுத்தின் மௌலானா, புரவலர் அப்துர் ரஹ்மான் ஆலிம், அல்ஹாஜ் முகம்மத் மௌலவி அரங்குகளில் விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

கல்லூரியின் தோற்றம்:

முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் கிழக்கு மண்ணில் அறபுக் கல்லூரியொன்று இல்லாமை இலங்கை வாழ் உலமாக்களிடையே பெரும் குறையாய் இருந்தது. காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக்கல்லூரியில் சுமார் 25 வருடங்கள் போதனாசிரியராகக் கடமையாற்றிய உஸ்தாத் மௌலானா மௌலவி அல்லாமா ஏ.பி. அப்துல்லா ஹஸரத் அவர்கள் இக்கவலையைச் சுமந்தவராக 1954.09.10 இல் அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு வருகை தந்தார்.

அறபுக் கல்லூரியின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்திய அப்துல்லா ஹஸரத் அதற்காக அல்லும் பகலும் உழைத்தார். அன்னாரது தூண்டுதல், அரும்பணிகளினால் விழிப்படைந்த பிரதேச மக்கள், கிழக்கிலங்கையின் பல்வேறு பிரதேசங்களுக்கும் இச்செய்தியைத்; தெரியப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் அல்ஹாஜ் எம்.எம். இப்றாஹிம் அவர்களது தலைமையில் 1954.11.07ம் திகதி அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் மாபெரும் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

அம்மாநாட்டிற்கு பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பெரியார்கள், மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் அதிகளவில் வருகை தந்திருந்தனர். பெரியார் அல்லாமா அப்துல்லா ஆலிம் ஸாகிப் அவர்கள் ''முஸ்லிம்களின் சன்மார்க்க முன்னேற்றத்துக்கு அறபுக் கலாசாலையின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பில் ஆணித்தரமான சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார். அம்மாநாட்டில் மேலும் பல முக்கியஸ்தர்கள் உரையாற்றினர்.

அதன்பினனர்; மாநாட்டுக்குச் சமுகமளித்த அனைவரும் பெரியாரின் வேண்டுகோளை ஏகமனதாக அங்கீகரித்தனர். இதன்போது சம்மாந்துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.எம். மீராலெப்பை அவர்கள் 'இவ்வாறான பல திட்டங்கள் நமது கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படாது மறைந்து விட்டன. ஆகையினால் நாளைய தினமே நிரந்தர கட்டிடத்துக்கான அத்திவாரம் இடப்படுவதுடன், தற்காலிகக் கட்டிடமும் அமைக்கப்பட்டு மத்ரசாவும் ஆரம்பிக்கப்பட வேண்டும்' என்ற விடயத்தை அச்சபையின் முன்னே வேண்டிக் கொண்டார்.

கட்டிடம் அமைவிடம்:

அரபுக் கல்லூரி கட்டிடம் அமைப்பதற்குரிய நிலம் பற்றிய விவாதம் எழுந்த போது, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அல்ஹாஜ் என்.எம். ஜமாலுத்தீன் மௌலானா அவர்களும், அல்ஹாஜ் எஸ்.ரீ. அஹமட்லெப்பை கிராம விதானையார் அவர்களும் அரை ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டுகளை இக்கல்லூரிக் கட்டிட நிர்மாணத்திற்காக நன்கொடையாக வழங்க முன்வந்தனர். அறபுக் கலாசாலைக்கென உருவாக்கப்பட்ட செயற்குழுவினர் உடன் கூடி ஆலோசனைகளைப் பரிசீலித்தனர். அதனைத் தொடர்ந்து அயல் கிராமமான அக்கரைப்பற்று பிரதேசவாழ் மக்களின் பேருதவியுடன், நிரந்தரக் கட்டிடத்தை அமைப்பதெனவும், பின்னர், கிழக்கின் ஏனைய பிரதேசங்களிலுள்ள மக்களிடம் கல்லூரி பராமரிப்பை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டின் தீர்மானப்படி உடனடியாக நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீலாத்விழா தினமாகிய 1954.11.08ம் திகதியன்று நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் தலைவரான அல்ஹாஜ் எம்.எம். இப்றாஹிம் (எம்.பி) அவர்களது தலைமையில் சம்மாந்துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.எம். மீராலெப்பை அவர்களால் நிரந்தரக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

சில மாதங்களின் பின்னர்; நாடறிந்த கல்விமானும், முஸ்லிம்களின் முதுபெரும் சிவில் சேவை அதிகாரியுமான செனற்றர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களால் நிர்மாணப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன. அன்று முதல் கட்டிட அமைப்பு வேலைகள் தங்குதடையின்றி நடைபெற்றது.

தற்காலிகக் கட்டிடமும் இரவோடு இரவாக அமைக்கப்பட்டு 1954.11.08 அன்றே அல்லாமா ஏ.பி. அப்துல்லா ஆலிம் அவர்களை அதிபராகக் கொண்டு கற்பித்தல் பணிகள் ஆரம்பமாகின. தற்காலிகக் கட்டிடம் அட்டாளைச்சேனை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களால் நிர்மாணித்து வழங்கப்பட்டது.

கல்லூரி ஸ்தாபகர் பிரிவு:

இவ்வாறான சந்தர்ப்பத்திலயே, இக்கல்விக் கூடத்தின் அமைப்பாளரும், ஆரம்ப அதிபருமான பேரறிஞர் அல்லாமா ஏ.பி. அப்துல்லா ஆலிம் அவர்கள் 1955.11.09ம் திகதி எங்களை விட்டுப் பிரிந்து மறுவுலக வாழ்க்கைக்கான பயணத்தை ஆரம்பித்தார். இச்சம்பவம் அனைவரையும் மிகுந்த துயருக்கும், கவலைக்கும் உட்படுத்தியது. எனினும், அன்னாரின் இலட்சியக் கனவை நனவாக்குவதே நாம் அவருக்குச் செய்யும் பாரிய நன்றிக் கடனாகும் என்ற உணர்வுடன் ஆளுனர் சபை துரிதமாகக் கவனம் செலுத்தத் தொடங்கியது.

தலைவர் அல்ஹாஜ் எம்.எம். இப்றாஹீம் (எம்பி), பொதுச் செயலாளர் மௌலவி அல்ஹாஜ் பீ. உமர் அலியார் ஆலிம், பொருளாளர் அல்ஹாஜ் கே.எம். மீராசஹிப் (வ.வி) உறுப்பினர்களான எம்.எஸ்.எம். முஸ்தபா உடையார், ஏ.எம். முத்து மீராலெப்பை, ஏ.பீ. அப்துல் ஹமீது, எஸ்.பீ. முகைதீன் பாவாப் போடியார், ஏ.எம். இஸ்மாயில் (போஸ்ட் மாஸ்டர்), ஏ.எம்.பக்கீர் முகைதீன், எஸ்.வி.வி. அப்துர் றஹீம் ஹாஜியார் ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

அதிபர் அவர்களின் மறைவை அடுத்து கல்லூரிக்கு அதிபர் ஒருவர் கிடைக்கும் வரை அப்துல்லா ஹஸரத் அவர்களின் மூன்றாவது புதல்வர் மௌலவி ஏ.அப்துர் றஹ்மான்(பஹ்ஜி) அவர்கள் பதில் அதிபராகப் பதவியேற்றார். கல்லூரி ஆளுனர் சபைத் தலைவர் அல்ஹாஜ் முதலியார் எம்.எம் இப்றாஹீம் எம்பி அவர்களின் மறைவு 1956ம் ஆண்டின் முதல் பகுதியில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, உப தலைவர் எம்.எஸ்.எம். முஸ்தபா உடையார் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சிறிது காலத்தின் பின்னர் அல்ஹாஜ் எம்.எப். அப்துல் மஜீத் பொறியியலாளர் அவர்கள் தலைவராக பொறுப்பேற்றார். 1956.09.16ல் கல்லூரிக்கு மஹரகம கபூரிய்யா அறபுக் கல்லூரியில் போதனாசிரியராகப் பணிபுரிந்த, தமிழ் நாடு அதிராம் பட்டினத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் மௌலானா மௌலவி கே.கே. அபூபக்கர் ஹஸரத் நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டார்;.

புதிய அதிபரின் வருகையைத் தொடர்ந்து கல்லூரியின் மாணவர் தொகை 22ஆக அதிகரித்தது. இவர்களில் வெளியூர் மாணவர்களும் அடங்குவர். ஹஸரத் அவர்களின் தன்னலங்கருதாத சமூகப் பணி கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் வரலாற்றில்; ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது எனலாம்.

பிராந்திய மக்களின் அர்ப்பணிப்;பு, உதவியினால் அலங்கார முகப்புடனான நிரந்தரக் கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு 1956.11.18ல் அகில இலங்கை சோனகர் சங்க ஆயுட்காலத் தலைவரும், முஸ்லிம்களின் அரசியல் தலைவரும், கல்விமானுமாகிய, நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் சேர் றாசிக் பரீட் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அரசாங்கப் பதிவு:

நாட்டின் அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர் டபிள்யு தகநாயக அவர்கள் 1957.06.06ல் அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கல்லூரிக்கு வருகை தந்த போது, இக்கல்லூரிக்கும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். கல்லூரியைக் கல்வி அமைச்சில் பதிவு செய்வது சம்மந்தமாகக் கோரிக்கை விடப்பட்ட போது, அதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தார். அதன்படி,1957.10.17ல் கல்லூரி கல்வி அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்றது. அப்போதைய நிந்தவூர் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி நீதி அமைச்சருமான எம்.எம். முஸ்தபா எம்பி அவர்களின் பங்களிப்பு இவ்விடயத்தில் மகத்தானதாகும்.

மாதாந்தச் சந்தாக்கள் மூலமும், கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட நெற்கானிகளின் வருவாய் மூலமும் கல்லூரிப் பராமரிப்புக்கள் நடைபெற்று வந்தன. வெளியூர் மாணவர்கள் அட்டாளைச்சேனைப் பிரமுகர்களின் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு வந்தனர். ஆண்டு தோறும் மாணவர் தொகை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் நிரந்தர விடுதி அமைக்கப்படுவது அவசியமானது. 1960ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்; விடுதியும் அமைக்கப்பட்டது.

முதலாவது பட்டமளிப்பு விழா:

அதிபர் அபூபக்கர் ஹஸரத் அவர்களின் வழிகாட்டலில் மாணவர்கள் பெற்ற கல்விப் போதனைகள் அவர்களை மௌலவி தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தயாராகும் அளவுக்கு தரம் பெற்றிருந்தது. வேறு மத்ரஸாக்களில் இருந்து படிப்பை இடை நிறுத்திய மாணவர்களும் பரிசீலனையின் பின் அக்கால கட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 1958 ஆகஸ்டில் நடைபெற்ற மௌலவி தராதரப் பத்திரப் பரீட்சையில் 16 மாணவர்கள் சித்தி பெற்றனர். இவர்களுக்கான பட்டமளிப்பு விழா 1963.11.10ல் மிக விமர்சையாக நடைபெற்றது. இதுவே இக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவாகும். இலங்கை முஸ்லிம்களின் கல்விமானும் முதல் சிவில் சேவை அதிகாரியுமான கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மௌலவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

1962ல் ஹஸரத் அபூபக்கர் அவர்களின் பதவி விலகலைத் தொடர்ந்து கஹட்டோவிட்டயைப் பிறப்பிடமாகவும், காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஹஸரத் எம்.ஐ. அப்துஸ் ஸமத் (பஹ்ஜி) அவர்கள் அதிபர் பதவியேற்றார்;. மாணவர் ஒழுக்கக் கோவை தயாரிக்கப்பட்டு சிறப்பான வழிநடாத்தலில் இக்கல்லூரியை அவர் வளர்ச்சியடையச் செய்தார்.

குறுகிய காலத்தில் அன்னார் பதவி விலகவே, நிந்தவூர் எஸ்.எல்.எம். இஸ்மாயில் ஆலிம், அட்டாளைச்சேனை ஈ.எம். இஸ்மாயில் ஆலிம், நிந்தவூர் எம்.எல். முகைதீன் பாவா ஆலிம் ஆகிய பெரியார்கள் அதிபர் பதவியை வகித்தனர். தத்தமது சேவைக் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணி புரிந்து கல்லூரியின் கல்வி வளர்ச்சியிலும் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை அடைவதிலும் மகத்தான சேவையாற்றினர். இவர்களைத் தொடர்ந்து செய்குஷ் ஷர்கி உமரலியார் ஹசரத் அதிபராக நியமனம் பெற்றார்;.

1970ம் ஆண்டு; இறுதிப் பகுதியில் அதிபர் பதவியேற்ற ஹசரத் உமரலியார் அவர்கள் 1986 வரை சுமார் 16 வருடங்கள் இக்கல்லூரியின் அதிபராகப் பணிபுரிந்;தார். அன்னாரின் பதவிக் காலம் இக்கல்லூரியின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது. கல்லூரியை அட்டாளைச்சேனையில் ஸ்தாபிப்பதில் அல்லாமா அப்துல்லா ஹசரத் அவர்களோடு வலக்கரமாக இருந்து செயற்பட்டு அதிபர் பதவியை ஏற்கும் வரை கல்லூரி ஆளுனர் சபைச் செயலாளராக 16 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளமை வரலாறாகும்.

பௌதீக வளங்கள் குன்றி, இடவசதி பற்றாக் குறை ஏற்பட்டிருந்த காலத்தில் அவைகளை அபிவிருத்தி செய்வதிலும் கல்வித் தரத்தை உயர்த்துவதிலும் உமரலியார் ஹசரத் அயராது பாடுபட்டார்;. மார்க்கக் கல்வியோடு உலகக் கல்வியிலும் மாணவர்கள் கூடிய கரிசனை கொள்ள அன்னார் வழியமைத்துக் கொடுத்தார். 1972ம் ஆண்டு முதல் அல்-ஆலிம் இறுதிப் பரீட்சைக்கும் மாணவர்கள் தோற்ற ஆவன செய்தார்;.

அப்போதைய போக்குவரத்து அமைச்சரும் றாபிதாவின் இலங்கைப் பிரதிநிதியுமான அல்ஹாஜ் எம்.எச். முஹம்மத் அவர்கள் மூலம் றாபிதாவின் நிதி உதவியையும் ஒத்துழைப்பையும் பெற்று இடப்பற்றாக் குறையைப் போக்க இரு மாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டது. விடுதி வசதி, வகுப்பறைகள், நூலகம் என்பன அமையப் பெற்று கல்லூரி வளம்பெற்றது எனலாம். அவர்களது இறுதிக் காலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 100ஆகவும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 10ஆகவும் அதிகரித்தது.

பல மாணவர்கள் எகிப்து அல்-அஸ்ஹர், மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகம், பாக்கிஸ்தான் இஸ்லாமியப் பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் உயர்கல்வி பெற்று இன்றும் மிளிர்வது குறிப்பிடத்தக்கதாகும். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையில் உப தலைவர்களுள் ஒருவராகவும் பல வருடங்கள் பணியாற்றிய அன்னார், 1984ம் ஆண்டு கல்லூரி பழைய மாணவர்களால் செய்குஷ் ஷர்க்கிய்யா எனும் பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் அதிபர் பதவியைப் பொறுப்பேற்ற பொலன்நறுவையைச் சேர்ந்த அல்ஹாஜ் மௌலவி எஸ்.எச். அபுல்ஹசன் (ஷர்கி,மதனீ) அவர்களின் காலத்தில் மாணவர்களின் ஆத்மீக உணர்வு வளர்ச்சி கண்டது. மாணவர்கள் சீருடை விடயத்தில் அக்கறை செலுத்தப்பட்டது. வெண்ணிற ஆடையே சீருடையாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது. பழைய மாணவர்களில் முதலாவது அதிபராகக் கடமையாற்றிய பெருமை இவருக்கே உரியது.

அபுல் ஹசன் மௌலவி அவர்களின் பதவி விலகலைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கலைத்துறை முதுமாணிப் பட்டதாரியும் இலக்கியத் துறையில் மதீனாப் பல்கலைக்கழத்தில் சிறப்புப் பட்டதாரியுமான, சாய்ந்தமருதைச் சேர்ந்த மௌலவி எஸ்.எச். ஆதம் பாவா (ஷர்கி, மதனீ) அதிபராகப் பதவியேற்றார். இவருடைய காலத்தில் கல்வித் தரம் மேலும் உயர்வடைந்தது. நூலகர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாணவர்கள் நூலகத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கு வழிகோலினார்.

1989, 1990 காலப்பகுதியில் பயங்கரவாதச் செய்பாடுகள் கிழக்கை முழுமையாக ஆட்கொண்டதனால் அதன் தாக்கம் கல்லூரியிலும் பிரதிபலித்தது. பருவகால விடுமுறைகள் தவிர வேறு நீண்ட கால முறைகளும் இக்காலப்பகுதியில் வழங்கப்பட்டதனால் கல்விப் போதனை இடையிடையே தடைப்பட்டது. 1991இல் மௌலவி அல்ஹாஜ் ஆதம் பாவா அவர்களின் பதவி விலகலைத் தொடர்ந்து, இடைக்கால அதிபராக கல்லூரி முன்னாள் போதனாசிரியர்களுள் ஒருவரான மௌலவி அல்ஹாஜ் ஏ.எல்.எம். ஹாசிம் (கபூரி) அவர்கள் பணிபுரிந்தார்.

மௌலவி கே.எல்.முஹம்மது அலி (பஹ்ஜி) அவர்கள் (சின்னாலிம்) 1991 நவம்பரில் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்டார். இக்கல்லூரியின் நாற்பதாண்டு நிறைவு விழாவை மிக விமர்சையாகக் கொண்டாட வேண்டும் என்ற வேணவாவோடு செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென தனது 73வது வயதில் அன்னார் மரணத்தைத் தழுவினார்.

மௌலவி அல்ஹாஜ் ஏ.சி. முஹம்மது பாக்கவி கல்லூரிக் கட்டமைப்பை திட்டமிட்டு முன்னேற்றுவதில் சிறந்த முகாமையாளராகத் திகழ்ந்தார். அவரது காலத்தில் மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிலும் சிறந்து விளங்கினர். இவருடைய பதிவிக்காலத்தில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளோடு விழாக்களும் நூல் வெளியீடுகளும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மௌலவி அல்ஹாஜ் எம்.எம். அப்துல் லெத்தீப் (பஹ்ஜி) அவர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இக்கல்லூரியின் விரிவுரையாளராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து மௌலவி அல்ஹாஜ் ஏ. முஹம்மது (பஹ்ஜி) கல்லூரி ஸ்தாபகரின் மூத்த புதல்வர் 2004.10.04ல் அதிபராகப் பொறுப்பேற்றார். அன்னாரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் நான்கு மாடிக் கட்டிடம் அமைக்கப்பட்டு பௌதீக வளம் பெற்று இக்கல்லூரி இன்று புதுப் பொலிவுடன் திகழ்வது மகிழ்ச்சிக்குரியது.

பின்னர் மௌலவி அல்ஹாஜ் ஏ.எல்.எம். ஹாசிம் (கபூரி), மௌலவி அல்ஹாஜ் எம்.எம். அப்துல் லெத்தீப் (பஹ்ஜி) ஆகியோர் சிறிது காலம் அதிபர்களாகக் கடமையாற்றிய பின்னர் அல்ஹாஜ் மௌலவி ஏ.ஜி. ஹாமித் ஸதக்கா (பஹ்ஜி) 2015.10.07ம் திகதி முதல் அதிபராகப் பணியாற்றி வருகின்றார். நிந்தவூர், மௌலவி அல்ஹாஜ் எஸ்.எல்.எம். இஸ்மாயீல் (பஹ்ஜி),மௌலவி அல்ஹாஜ் எம்.எல். முகையதீன்பாவா (பஹ்ஜி), அட்டாளைச்சேனை மௌலவி அல்ஹாஜ் ஈ.எல்.எம். இஸ்மாயீல் (பஹ்ஜி) ஆகியோரது அதிபர் பதவிகளும் நன்றியுடன் நினைவு கூரத்தக்கதாகும்.

கூட்டிணைப்பு;

முன்னாள் சபாநாயகர் அல்ஹாஜ் எம்.ஏ. பாக்கீர் மாக்கார் விடுத்த வேண்டுகோளின் பேரில், இக்கல்லூரியைப் பாராளுமண்றத்தில் கூட்டிணைப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளையில், பாராளுமன்றம் கலைந்தது. பின்னர் அன்னாரின் புதல்வரும் அப்போதைய வீடமைப்பு ராஜாங்க அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 1992ஆம் ஆண்டு நவம்பரில் இக்கல்லூரி கூட்டிணைப்புச் செய்யப்பட்டது.

புதிய மாணவர் அனுமதியின் போது, தகுதியான முழு மாணவர்களையும் இணைத்துக் கொள்ளும் அளவு வளங்கள் நிறைவில்லாது காணப்பட்டது. இதன்காரணமாக கற்கையை நிறைவுசெய்து வெளியேறும் மாணவர்களின் தொகைக்கே புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவ்வேளையில், சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல்-ஸாமில் குழுமத்தின் உதவி கிடைத்தது. புதிய நான்கு மாடிக் கட்டிடப்பணி ஆரம்பிக்கப்பட்டது. அல்-குர்ஆன் மனனப் பிரிவு (ஹிப்ழு), கணனிப் பிரிவு, சிரேஷ்ட மாணவர் விடுதி, காரியாலயம், நூலகம் என்பன நவீனமுறையில் அமைக்கப்பட்டுள்ளன.

கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் தற்காலச் சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நவீன மயப்படுத்தப்பட்டு, சிறந்த விரிவுரையாளர்களாலும், கல்வியாளர்களின் வழிகாட்டலிலும் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்;பட்டு வருகின்றன. இவ்வாண்டு அதிகமானவர்கள் எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு வெளிநாட்டு இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களிலும், உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் தேசிய கல்விக் கல்லூரிகளிலும் உயர்கல்வி பெறும் வாய்பினைப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

கல்லூரி மாணவர்கள், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தினதும் பரீட்சைத் திணைக்களத்தினதும் அனுமதிக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கமைவாக அல்-ஆலிம் பகுதி-1 பகுதி-2 தர்மாச்சாரியார், அஹதிய்யா, க.பொ.த. சாதாரணதரம், உயர்தரம் பரீட்சைகளுக்குத் தோற்றிவருகின்றனர். மேலும் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை கற்பித்தல் அனுபவமும் திறமையும் நம்பிக்கையும் நிறைந்த உலமாப் பெருமக்களால் அமைந்த பரீட்சைக்குழுவினரால் மௌலவி இறுதிப் பரீட்சை நடாத்தப்பட்டு தராதரப்பத்திரம் வழங்கப்பட்டு வருகின்றது. 

இக்கல்லூரியின் எழுச்சியிலும் வளர்ச்சியிலும் அப்போது இருந்த பழைய மாணவர்கள் சங்கத் தலைவர்களும், செயலாளர்களும், பொருளாளர்களும் செயற்குழு உறுப்பினர்களும் காத்திரமான சேவையாற்றி வந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும். அவர்களது பணி தொடரவேண்டும்.

இக்கலாபீடத்தினது அவசரத் தேவைகள்.

கல்லூரியின் பழைய கட்டிடங்கள் சுமார் அறுபது வருடங்கள் பழமையானதாக உள்ளதனால், மாற்றீடாக புதிய கட்டிடங்கள் அமைக்கப்படவேண்டிய அவசியமேற்பட்டுள்ளது. நான்கு மாடிக்கட்டிடத்திற்கு மேல்கூரை அமைக்கப்பட வேண்டிய அவசியமுள்ளது. வகுப்பறைக்கும் ஆராதனை மண்டபத்திற்குமான தளபாடத் தேவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

கணனிப்பிரிவு நவீனத்துவம் பெறுவதோடு, நூலகத்திற்கான தளபாடங்களும் நூற்களும் பெறப்படவேண்டும். வாகனங்கள், மின் பிறப்பாக்கி, அனைத்து மாடிகளையும் ஒரேபார்வையில் கண்காணிக்கும்; ஊஊவுஏ வசதி என்பனவும் கல்லூரியின் அவசியத் தேவைகளாக உள்ளன.

கல்லூரியின் பழைய மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகத்தில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுவிளங்கும் இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களான கெய்ரோ அல் அஷ்ஹர், மதீனா, பாகிஸ்தான், கட்டார் இஸ்லாமியப் பல்கலைக்கழகங்கள் என்பனவற்றில் பணியாற்றி கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ளவர்கள் இக்கல்லூரி மூலம் நன்மையடைந்து, சர்வதேச ரீதியில் புகழ்பரப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சன்மார்க்கப்பணியில் அறுபது ஆண்டுககளை நிறைவுசெய்துள்ள இக்கல்லூரி தொடர்ந்தும் புகழ்பரப்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -