ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் அழைப்பை ஏற்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது திருகோணமலை மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி மற்றும் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படவுள்ளதுடன் எதிர்வரும் 19ம்திகதி பாலமுனையில் இடம்பெறவுள்ள கட்சியின் தேசிய மாநாடு குறித்து திருகோணமலைமாவட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களையும்; ஆதரவாளர்களையும் சந்திக்கவுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், திருகோணமலை நகரம், இறக்கக்கண்டி, குச்சவெளி, புல்மோட்டை, தம்பலகாமம், கந்தளாய் மற்றும் கிண்ணியா போன்ற பிரதேசங்களுக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையிலான குழுவினர் காலை 9.00 மணிமுதல் நேரடியாக விஜயம் செய்யவுள்ளதாக பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.