எப்.முபாரக்-
இலங்கைத் தமிழரசுக் கட்சியானது தமிழ் மக்களுக்கு மாத்திரம் உருவாக்கப்பட்டதல்ல. தமிழ் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அதனாலேயே, தந்தை செல்வா தொடக்கம் இரா.சம்பந்தன் வரை இன்றும் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச சபைச் செயலாளர் ஜமால்தீன் நஜாத் எழுதிய 'எட்டாவது நாடாளுமன்றத் தேர்தலும் மக்களும் தீர்ப்பும் ஒரு பார்வை' எனும் நூல் வெளியீட்டு விழா, அந்நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இன்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுப்போடும் ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றோம்.
இச்சந்தர்ப்பத்தை பொதுமக்களாகிய நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மறைந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஏ.எல்.மஜீத் தமிழ் முஸ்லிம் என்று பாராது சேவையாற்றியவர் அதனால்தான் அவர் இன்றும் திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அத்தோடு இலங்கை தமிழரசி கட்சியில் முஸ்லிம்கள் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களா இருந்திருக்கின்றார்.அத்தோடு எமது கட்சி தலைமை இன்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளோடு நெருக்கமான உறவினை பேணிவருகின்றது என்பதை ஞாபகமூட்ட விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்' என்றார்.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.