ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியின் அதிகாரங்கள் சிலவற்றை குறைத்து அவ்வதிகாரங்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் அதிருப்தி தெரிவித்து கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் கையொப்பமிட்ட அரசியல் உயர் பீட உறுப்பினர்கள் சிலர் தாம் அறியாமல் தவறுதலாக கையொப்பமிட்டு விட்டதாக சத்தியக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சத்தியக் கடிதங்கள் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஹக்கீமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அதிருப்தி கடிதத்தில் 19 அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர்.
இவர்களில் தற்போது உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள மௌலவி ஏ.எல்.எம்.கலீலும் மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸும் அடங்குவர்.
கடிதத்தில் கையொப்பமிட்ட 19 பேரில்11 பேர் தாம் கடிதத்தில் தவறாக கையொப்பமிட்டுவிட்டதாகவும் தலைவருக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபடவில்லை எனவும் சத்தியக் கடதாசிகள் மூலம் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதவி வழி மூத்த உறுப்பினர் ஒருவரை 'விடிவெள்ளி' தொடர்பு கொண்டு வினவியபோது அவர் இதனை உறுதி செய்தார்.
சத்தியக்கடதாசி சமர்ப்பித்துள்ள 11 உயர்பீட உறுப்பினர்களும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை நேரில் சந்தித்து தாம் சதி முயற்சியில் ஈடுபடவில்லை எனவும் தவறாக வழி நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டத்தை கூட்டி கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் பற்றி ஆராயப்படும் எனவும் கூட்டம் எப்போது நடாத்தப்படும் என தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
ஊடகங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று கட்சியின் செயலாளர் மற்றும் தவிசாளர் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் கொள்கை ரீதியான பிரச்சினைகள் அல்லவெனவும் தேசியபட்டியல் எம்.பி. பதவி தொடர்பாக உருவாகியுள்ள பிரச்சினைகள் எனவும் அவர் தெரிவித்தார்.
vidivelli