முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் போராட்டமொன்றை நடாத்த உள்ள நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு எந்தவொரு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருக்கும் அனுமதியளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்திற்கும் சுதந்திரக் கட்சிக்கும் தொடர்பு கிடையாது எனவும், கூட்டத்தில் எவரும் பங்கேற்கக் கூடாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவு குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராபஜக்ஷ உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணான வகையில் ஊடகங்களில் ஹீரோக்களைப் போன்று அறிக்கை விடும் நபர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் எனவும் சுதந்திரக் கட்சி ஓர் சத்திரமன்று எனவும், அவரவர் நினைத்த மாதிரி நடந்து கொள்ள முடியாது எனவும் கட்சியின் ஒழுக்க விதிகள் அனைவருக்கும் பொதுவானது என்றும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.