இலங்கையில் இந்த வாரம் வெளியாகவுள்ள சிங்கள பத்திரிகையின் சுவரொட்டிகளை ஒட்டிய இரண்டு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு சுவரொட்டிகளையும் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை பத்தரமுல்ல கொஸ்வத்த பிரதேசத்தில் “ராஜபக்சர்கள் சரண்டர்” என எழுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ஆதரவாளரான கடுவெல நகர சபையின் உறுப்பினர் மேலும் மூவருடன் WP 644287 என்ற இலக்கமுடைய மோட்டார் வாகனத்தில் வந்து தங்களின் அரசியல் பலத்தை காட்டி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“நாட்டை காப்பாற்றிய தலைவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்ட இடமளிக்க மாட்டோம். நாளைய தினத்திற்கு முன்னர் ஒட்டப்பட்டிருக்கும் அனைத்து சுவரொட்டிகளும் அகற்றப்பட்டிருக்க வேண்டும்”
“அதிக காலம் நீங்கள் எல்லோரும் ஆடுவதற்கு இடமளிக்க மாட்டோம்” என கூறியதோடு ஊடகவியலாளர்களை தாக்குவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் உறுப்பினர் உட்பட குழுவினர் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர்.
ராஜபக்ச ஆட்சியின் கீழ் நாட்டில் ராஜபக்ச ஆதரவாளர்கள் செயற்பட்டதனை போன்று இவர் செயற்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. tw