சிறைச்சாலைகளில் நிலவி வரும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக வயது முதிர்ந்த கைதிகளை விடுதலை செய்வது குறித்து சிறைச்சாலை திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட காலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் வயோதிப கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலை தவிர்க்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பொது மன்னிப்பின் அடிப்படையில் வயது முதிர்ந்த கைதிகளை விடுதலை செய்ய திட்டமொன்றை வகுப்பது குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பத்தாயிரம் கைதிகள் இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வயது முதிர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வயது முதிர்ந்த கைதிகள் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
உடல் உள வீரியமற்ற வயோதிப கைதிகளை விடுதலை செய்வதனால் சமூகத்திற்கு தீங்கு ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிக்கடி நோய்வாய்ப்படும் வயோதிப கைதிகளுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கவும் சிகிச்சை அளிக்கவும் பெருந்தொகைப் பணம் செலவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வயோதிப கைதிகளுக்கு விடுதலை வழங்குவது சரியானதே என்ற நிலைப்பாட்டில் சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் இருக்கின்றார்கள் எனவும், விரைவில் இது குறித்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தெளிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.