இக்பால் அலி-
உண்மையிலேயே இன்று இலங்கையில் இன ஒருமைப்பாடு பற்றி பரவலாக்கப்பட்டு வருவதை நாங்கள் எல்லோரும் அறிவோம். அதேவேளை கடந்த காலத்தில் இனங்களுக்கிடையே ஒற்றுமையில்லாத தன்மையையும் அறிவோம். ஏனைய சமூகத்தவர்கள் எம்மை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடிய சூழல்கள் இருந்தன. இன்று அந்த நிலைமாறி இன உறவு கட்டி எழுப்பப்பட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம்.
இதற்காக எமது நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை கட்டி எழுப்பதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். விசேட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவின் தலைமையில் இந்த வேலைத் திட்டம் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. எனவே அந்தவகையில் நாங்களும் ஏனைய சமூகங்களுடன் ஒன்றுபட்டு பரஸ்பர நல்லெண்ணத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். எம். ஹலீம் தெரிவித்தார்.
தெல்தோட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்யா அமைப்பின் தலைவர் முனீர் சாதிக் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் 50 இலட்சம் ருபா செலவில் மக்தப் குர்ஆன் மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மத்ரஸதுல் உலூமிய்யா கட்டிடத் திறப்பு 29-03-2016 நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் அங்கு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
இங்கு அமையப்பெற்றுள்ள குர்ஆன் மத்ரஸா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆரம்பத்தில் சில காலம் பள்ளிவாசலாகவும் சில காலம் பள்ளிக் கூடமாகவும் சில காலம் அஹதிய்யாப் பாடசாலையாகவும், சில காலம் வைத்தியசாலையாகவும், சில காலம் சனசமூகச நிலையமாகவும் என ஒவ்வொரு காலப் பகுதிகளில் சமூகத்தின் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டன. மிகவும் பழமைவாய்ந்த கட்டிடமாக காணப்பட்ட இந்தக் கட்டடம் சுமார் 50 இலட்சம் ரூபா செலவில் குவைட்டினால் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைப்பதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன்.
இது உண்மையிலேயே எமது சமூகத்தின் தேவை கருதி இப்பிராந்தியத்திலுள்ள சிறார்களுக்காக குர்ஆன் மார்க்கக் கல்வியை கற்கக் கூடிய வகையில் இக் கட்டிடம் புதுப்பொழிவுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
குவைட் நாட்டின் மர்ஹும் டொக்டர் அப்துர் ரஹ்மான் குடுபத்தினரால் இந்தக் கட்டிடம் மிகவும் அழகான முறையில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கின்றனர். இச் சந்தர்ப்பத்தில் அந்நாருக்கும் அந்நாரது குடுபத்த்திற்கும் நாம் எல்லோரும் பிரார்த்தனை புரிய கடமைப்பட்டுள்ளோம் என்பதோடு அவர்களுக்கு என்னுடைய உள்ளார்ந்த பிரார்த்தனையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு ஊரில் பள்ளிவாசல், பாடசாலை, மக்தப் ஆகியன அமையப்பெறுவது என்பது எம்மைப் பொறுத்தவரையில் எமது சமூகத்தின் கண்ணாடியாகும். எமது கிராமத்தில் கல்வியாலாளர்கள், சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உருவாகுவதற்கு இது முக்கிய அவசியமாகும். தற்போது இந்தக் கிராமம் எல்லா வளங்களும் நிரம்பப் பெற்ற பகுதியாகக் காணப்படுவதையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
நான் கடந்த காலங்களில் மாகாண சபையின் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் எமது முஸ்லிம் மக்கள் வாழும் இடங்களைக் கவனத்திற் கொண்டு சுகாதார வைத்திய சேவையை முன்னெடுப்பதில் முழு முயற்சியுடன் செயலாற்றியுள்ளேன். அந்தவகையில் இப்பகுதியிலும் என்னால் வைத்திய சாலை நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுக்க முடிந்துள்ளன.
இந்நிகழ்வில் குவைட் நாட்டின் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப ஆய்வு கற்கை நெறியின் பணிப்பாளர் கலாநிதி இசாம் அல் உமைரா, இலங்கைக்கான குவைட் நாட்டுத் தூதராலயத்தின் கலாச்சாரப் பிரிவு அதிகாரி, அமூத் அல் ஜப்ரி, கட்டிடத்தை வழங்கிய குவைட் முஸ்லிம் கலாசார அமைச்சின் பிரதான இமாம் கலாநிதி மன்சூர் ஜப்ரா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அம்ஜத், தொழிலதிபர் வை.எம். இப்ராஹீம் உள்ளிட்ட முக்கிய பலர் கலந்து கொண்டனர்.