ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
சம்மாந்துறை தாறுஸ் ஸலாம் மகா வித்தியாலயத்தில் இருமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது.
ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் சிவில் இராணுவ ஆதரவுக்குழுவினரின் மனிதாபிமான உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 'பசுபிக் கொமாண்ட் நிறுவனத்தின்' ரூபா 07 கோடி நிதியுதவியோடு இக்கட்டிடம்
அமைக்கப்படவிருக்கிறது.
கல்லூரி அதிபர் இஸ்மாயில் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் உதவிப் பணிப்பாளர் ஹமண்ட் டெமிட் றியட், ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பொறியியலாளர் குழுத் தலைவர் லெரின் பைப், ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகளான கெப்டன் மே கைல், மைக்மெக்லன், வுட்லிவை,பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர் எனப் பலரும் இதில் பங்கு கொண்டனர்.
வெளிநாட்டு, உள்நாட்டு அதிதிகள் அனைவரும், சம்மாந்துறைக் கல்விச் சமூகத்தினரால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதோடு, இவர்களின் சமூகப் பணி தொடரவும், அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் துஆப்பிரார்த்தனை ஒன்றும் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-
'எம்மிடமிருந்து எந்த வித பிரதிபலனையும் எதிர்பார்க்காது, நமது கல்வி வளர்ச்சிக்காக ஜாதி,மத பேதம் பாராது உதவிவருகின்ற நல்லுள்ளங்களுக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் சிறப்பான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.