எப்.முபாரக்-
திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக நாளை செவ்வாய்க்கிழமை(8) காலை எட்டு மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பெற்றோர்களும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினரும் இணைந்து முன்னெடுக்கவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சிறந்த தீர்வு கிடைக்காவிடின் நாளை மறுதினம் புதன்கிழமை திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக அந்நூரியா கனிஷ்ட பாடசாலை அபிவிருத்திச் சங்கசட செயலாளர் என்.எம்.நளீம் தெரிவித்தார்.
குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 18 ஆசிரியர்களுக்கும்; அந்நூரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் நான்கு ஆசிரியர்களுக்கும் இலந்தைக்குளம் வித்தியாலயத்தில் நான்கு ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை காணப்படுகின்றன.
இப்பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பிலும் அதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும்; கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கும் பல தடவைகள் கடிதம் மூலமாகவும் பெற்றோர்கள் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருப்பினும், இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பெற்றோர் தெரிவித்தனர்.