கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உக்கிரமடைந்துள்ள பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸ் திணைக்களம்விசேட திட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில், டி.ஈ.ரி. எனப்படும் 10 பிரதேச அமுலாக்கல் குழுக்கள் ஊடாக இந்த பாதாள உலக குழுக்களை களையெடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பாதாள உலகக் குழுக்கள் என அடையாளப்படுத்தப்படும் குழுக்களை முற்றாக ஒழிக்கும் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்துக்கு உட்பட்ட கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு, களுத்துறை, பாணதுறை, கல்கிஸை, நுகேகொட, களனி, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள விஷேட 10 குழுக்கள் இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
இந்த விசேட குழுக்கள் பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரி ஒருவரின் தலைமையில் இயங்கவுள்ளன. ஒவ்வொரு குழுவும் அந்தந்த பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சரின் நேரடி மேற்பார்வையில் செயற்படவுள்ளதுடன் குறித்த பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர்களும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களும் அதற்கான ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.
கடந்த ஒருவாரத்துக்குள் தலை நகர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இந் நிலையில், அதனை ஒடுக்க ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமையவும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் வழங்கிய விஷேட பணிப்புரைகளுக்கு அமைவாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு அது குறித்த பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள 102 பொலிஸ் நிலையங்கள் ஊடாக அந்த பொலிஸ் நிலையங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் திடீர் திடீரென வீதிச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரோந்து பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கைகள் நேற்று முன் தினம் முதல் மேல் மாகாணத்தில் அமுலுக்கு வந்துள்ளன. ரோந்து பணிகளில் ஆயுதம் தரித்த தலா குழுவுக்கு 8 பேர் கொண்ட பொலிஸ் படையணி ஈடுபடுத்தப்படுவதுடன் தேவை ஏற்படும் போது மேலதிக பொலிஸ் படையணியும் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதனிடையே சோதனை நடவடிக்கை மற்றும் பாதாள உலக கோஷ்டியினருக்கு எதிரான நடவடிக்கையின் போது விஷேட அதிரடிப்படையினர் மற்றும் உளவுப் பிரிவினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. உளவுப் பிரிவு வழங்கும் தகவல்கள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஊடாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர்களுக்கு நடவடிக்கைகள் நிமித்தம் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் அவசியமான போது விஷேட அதிரடிப்படையினரை அழைக்கும் அதிகாரம் ஒவ்வொரு நடவடிக்கை குழுக்களுக்கும் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரகாலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் நாடளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவங்களுடன்பாதாள உலக கோஷ்டியினரின் குழுக்களுக்கு நேரடியாக தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலைகளிலேயே அவற்றின் செயற்பாடுகளை ஒடுக்க இந்த விஷேட திட்டம் அமுல் செய்யப்படுவதாக பொலிஸ் தலைமையக உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தகவல் தருகையில்
‘உளவுத் தகவ்ல்களை சேகரித்து அதற்கமைய டி.ஈ.ரி. என்ற இந்த விஷேட விசாரணைக் குழுக்கள் போதைப் பொருள் வர்த்தகம் கொலைகள் கொள்ளைகள் என அனைத்து பாரிய குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தும் செயற்திட்டதை முன்னெடுக்கவுள்ளது. துப்பாக்கிச் சூடு அல்லது பாரிய குற்றச் செயல் ஒன்று பதிவாகும் இடத்துக்கு இந்த டி.ஈ.ரி. விசாரணைக் குழுவும் ஆஜராகி தனியாக விசாரணை செய்யும். அதன்படி குற்றக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்க முடியும் என நம்புகிறோம்’ என்றார்.
கடந்த செவ்வாயன்று முதல் அடுத்தடுத்து தலை நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பதிவாகின. தெமட்டகொட சமிந்த, கம்புறுபிட்டியே ஹர்ஷ போன்ற பாதாள உலக கோஷ்டியினரை இலக்கு வைத்ததாக அச்சம்பவங்கள் இருந்ததன. ஏனைய சம்பவங்கள் பாதாள உலக கோஷ்டியினர் ஊடாக வழி நடத்தப்படும் ஒப்பந்த அடிப்படையில் செய்த கொலைகளாக , இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
உளவுப் பிரிவு தகவல்களுக்கு அமைவாக மேல் மாகாணத்திலும் தெற்கிலும் 15 பாதாள உலகக் குழுக்கள் தற்போது தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. கொழும்பின் பிரபல குழுக்களும் இவ்வாறு ஒன்றுக்கொன்று மோதல்களை ஆரம்பித்துள்ள நிலையில் தெமட்டகொட சமிந்த, புளூமெண்டல் சங்க ஆகிய நிழல் உலக தாதாக்களின் குழுக்களின் மோதல் உச்சத்தை அடைந்துள்ளன. அதன் ஒரு பிரதிபலனாகவே தெமட்டகொட சமிந்தவை இலக்கு வைத்து கடந்த செவ்வாயன்று மாளிகாவத்தை பகுதியில் சிறைச்சாலை பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.