ந.குகதர்சன்-
வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை சமூக குடி நீர் வழங்கல் திட்டத்தினூடாக நடாத்தப்பட்ட போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது.
வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்குட்ட மதுரங்கேணிக்குளம் மற்றும் ஆலங்குளம் ஆகிய பிரதேசங்களில் சமூக குடி நீர் வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஆலங்குளம் சமூக குடி நீர் வழங்கல் திட்டம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் நடாத்தப்பட்ட கிராமிய குடிநீர் வழங்கல் செயற்றிட்டங்களிடையேயான போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நிறுவனங்கள் போட்டியிட்ட போதிலும் இப்பிரதேச சபை மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.
ஆலங்குளம் சமூக குடி நீர் வழங்கல் திட்டம் வெற்றி பெற்றதை முன்னிட்டு பிராந்திய மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் குறித்த விடயம் தொடர்பில் வாகரை பிரதேச சபை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வாகரை பிரதேச சபை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் செயலாளர் சி.இந்திரகுமார், முன்னின்று செயற்பட்ட சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாருன் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து அனுப்பி இருந்தார்.
அத்தோடு இவ்வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாக பிரதேச சபை செயலாளர் சி.இந்திரகுமார் தெரிவித்தார்.