எம்.ஏ.றமீஸ்-
மஹிந்த ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளையும் மக்களின் புலம்பல்களையும் ஜெனீவாவிற்கு நாம் கொண்டு செல்ல முற்பட்டபோது எமக்கெதிராக செயற்பட்டு வசை பாடியவர்கள் இன்று நாட்டில் நடக்கும் சின்னச் சின்னப் பிரச்சினைகளை ஜெனீவா கொண்டு செல்லப் போகின்றோம் என்பது நகைச்சுவையாக உள்ளது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
காணாமல் ஆக்குவதை காணாமல் ஆக்குவோம் என்னும் தொனிப் பொருளில் நேற்று (30) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்ற விஷேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது அமைச்சர் மனோ கணேசன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள் துறைசார்ந்தோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் தற்போது இலங்கை முழுவதும் சென்று இனவாதத்தினையும் மத வாதத்தினையும் தூண்டி கள்ளத்தனமாக கடவுளுக்கு தேங்காய் உடைக்கும் படலத்தினை கொண்டு வந்திருக்கின்றார்கள். இவர்களின் கள்ளத் தன தேங்காய் உடைப்பு பூஜிப்பு தற்போது சரிவராத காரணத்தினால் ஜெனீவாவில் உள்ள வெள்ளை நிற கடவுள்களைத் தேடியலைய தொடங்கி விட்டார்கள்.
கடந்த ஆட்சியாளர்களைப்போல் நாமும் வெறும் வாக்குறுதிகளை மட்டும் வழங்குபவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இவர்களும் எம்மை ஏமாற்றுவெதற்கென்றே ஆட்சி பீடம் ஏறியவர்கள் என நீங்கள் எண்ணலாம். ஆடிப்படை வாதிகளினதும் இனவாதிகளினதும் அச்சுறுத்தல்களுக்கு இந்த அரசாங்கம் அடிபணிந்து மௌனித்து விடும் என்று மக்கள் நினைக்கலாம். ஆனால் இந்த நாட்டிலுள்ள எந்த விதமான அடிப்படைவாதிகளின் அடிப்படை வாதத்திற்கும் அடிபணியாது தொடர்ச்சியாக மக்களின் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொடுக்காமல் நாம் ஒருபோதும் நின்றுவிட மாட்டோம்.
அரசியல் ரீதியாக இந்த நாட்டில் ஒதுக்கப்பட்டவர்கள் எமது செயற்பாடுகளை இல்லாமல் செய்வதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் முனைகின்றார்கள். இவர்களின் சதி முயற்சிக்கு நாம் ஒருபோதும் அஞ்சிவிட மாட்டோம். இவர்களின் சூழ்ச்சிகளுக்கு சோரம் போகாமல் நாம் மக்களின் நன்மைக்கான பயணத்தினை எத்தடை வரினும் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம்.
இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிக் கொடுப்பதற்கும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதன் உண்மையை வெளிப்படுத்துவதற்கும் அவ்வாறு காணாமல் போனவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கும் நாம் பாரிய செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதுமட்டுமல்லாமல் இந்நாட்டில் இனிவரும் காலங்களில் ஒருவர்கூட காணாமல் ஆக்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தினை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம்.
இந்த நாட்டில் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல் பெறும் செயலணியினை நாம் தற்போது உருவாக்கியுள்ளோம். அவர்கள் உங்களை நாடி வரும்போது காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான அனைத்துக் கருத்துக்களையும் அவர்களிடம் தெரியப்படுத்துங்கள். அதன் மூலம் நியாயமான தீர்வினை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.
அதுமட்டுமல்லாமல், இந்நாட்டில் இனிமேல் காணாமல் ஆக்கப்படும் விடயம் இடம்பெறக் கூடாது என்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தினரோடு இணைந்து இலங்கையில் இவ்விடயத்திற்கென தனிக் காரியாலயம் ஒன்றை நிறுவுவதற்கான சட்ட திட்டங்களை தயாரித்து வருகின்றோம். அதனை மிக விரைவில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ளோம்.
இந்நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீதான உண்மையினை தேடுவதற்கான புதிய பொறிமுறையொன்றை அமைப்பதற்காக தென் ஆபிரிக்க நிபுணத்துவக் குழுவுடன் கலந்துரையாடியுள்ளோம். எதிர்காலத்தில் இவர்களின் நடைமுறையினை அடிப்படையாகக் கொண்டு செயற்படவுள்ளோம். இதனால் நாம் தேடியலைந்த பல விடயங்களுக்கு தீர்வுகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
கடந்த டிசம்மர் மாதம் 10ஆம் திகதி மனித உரிமைகள் தினத்தின்போது காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான சமவாயத்தில் நாம் கைச்சாத்திட்டிருக்கின்றோம். இனிமேல் இந்நாட்டில் வெள்ளை வேன் கடத்தல் இடம்பெறக் கூடாது தேவையற்ற கொலைச் சம்பவங்கள் ஏற்படக் கூடாது என்பதற்கான வரலாற்றினை படைப்பதற்கு இது ஒரு நல்ல தருணமாக நாம் இதனைப் பார்க்கின்றோம்.
எமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இந்நாட்டிலுள்ள பல்வேறுபட்ட மதத் தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டார்கள். ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் இவர்களது ஒற்றுமை மொழி ரீதியாகவும் இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிளவு பட்டது. இதன் மூலம் 1970 மற்றும் 1980களில் தென்னிலங்கையில் போராட்டங்கள் ஆரம்பித்தன.
இதனைத் தொடர்ந்து மூன்று தசாப்த காலமாக இந்நாட்டின் வடக்கில் மாபெரும் யுத்தம் இடம்பெற்றது. இவ்வாறான காரணத்தினால் நாம் தொடர்ந்தும் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டதுடன் எமது நாட்டுக்கு பின் இருந்த சிங்கப்பூர் கொரியா போன்ற நாடுகள் தற்போது எமது நாட்டினைப் பார்க்கிலும் முன்னேற்றமடைந்திருக்கின்றன.
எம் நாட்டில் கடந்த 68 வருடங்களாக இருந்த நிலைமையினை நாம் தற்போது மாற்றியமைத்திருக்கின்றோம். அணைத்துக் கட்சிகளும் இணைந்து மக்களின் நலனுக்காக செயற்படும் அரசாங்கத்தினை தோற்றுவித்திருக்கின்றோம். இதனடிப்படையில் சுதந்திரக் கட்சியின் தலைவர் நாட்டின் ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாட்டின் பிரதமராகவும் தமிழ் மக்களின் குரலாகவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க் கட்சித் தலைவராகவும் செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.