மஹிந்தவின் அவசரத்துக்கு காரணம் இதுதான் - ஜனாதிபதி மைத்திரி விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலம் நிறைவடைய இரு வருடங்கள் இருக்கும் போது ஏன் தேர்தலைப் பிரகடனப்படுத்தினார் என்பதற்கான விளக்கத்தை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

மக்கள் மத்தியில் காணப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இதற்கான காரணத்தை தெளிவு படுத்தினார்.

கேள்வி: ஜனாதிபதி அவர்களே! பௌத்த பிக்குகளை துன்புறுத்துவதாகவும் பௌத்த மதத்திற்கும் அதன் செயற்பாட்டிற்கும் பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் படைவீரர்களின் கீர்த்திக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கான உங்கள் பதில் என்ன?

ஜனாதிபதி: இவ்வேளையில் இந்நிகழ்ச்சியினை பார்த்துக்கொண்டிருக்கும் நாட்டு மக்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன். நானும் அமைச்சராகவிருந்த கடந்த ஆட்சியின் முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்த பின்னணியிலும் அவர் எதற்காக தேர்தலை பிரகடனப்படுத்தினார்.

நீங்கள் கேட்ட கேள்விக்கும் நான் இங்கே கூறிய விடயத்திற்கும் எந்தவொரு தொடர்புமே இல்லையே என ஒருவர் நினைக்கலாம். ஆனால் இன்றுவரை முன்னால் ஜனாதிபதியோ அவரை சார்ந்த பொறுப்புக்கூறத்தக்க ஒருவரோ தமது ஆட்சியை முன்னெடுப்பதற்காக மேலும் இரண்டு ஆண்டுகள் மிஞ்சியிருந்த நிலையில் எதற்காகத் தேர்தலை ஏன் பிரகடனப்படுத்தினார் என்பதற்கு இதுவரை விடைகூறவில்லை.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி தேர்தலை பிரகடனப்படுத்தாதிருந்தால் முன்னாள் ஜனாதிபதியே தற்போதும் ஜனாதிபதியாக இருந்திருப்பார். ஆயினும் முன்னைய அரசாங்கத்தின் பொறுப்புமிக்க ஒரு அமைச்சராக இருந்த நான் அறிந்தவகையில் முன்னாள் ஆட்சியாளருக்கும் அவரது சகாக்களுக்கும் நம் நாட்டுக்குள்ளும் சர்வதேசத்திலும் முகம் கொடுக்க நேர்ந்திருந்த சில முக்கிய சவால்களுக்கு முகம்கொடுக்கமுடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. விடைகாணமுடியாத அவ்வாறான பிரச்சினைகளுக்கு விடைகாணும் வகையில் அவசர தேர்தல் ஒன்றை பிரகடனப்படுத்தவேண்டும் என்ற தீர்மானம் அவர்களால் எடுக்கப்பட்டது.

முக்கிய பல சம்பவங்கள் பற்றி தற்போது சில விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எக்னலிகொட சம்பவம், லசந்த விக்ரமதுங்க கொலைச்சம்பவம், ரவிராஜின் கொலை, தாஜுதீன் கொலை ஆகிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

நான் ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு முன் பல வருடங்களாக மேற்கூறிய சம்பவங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பது பற்றி இந்நாட்டு மக்களால் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. நாட்டு மக்களால் எழுப்பபட்ட கேள்விகள் ஜெனீவா வரை சர்வதேச மையமானது. இவற்றுக்கான பதில் என்ன என சர்வதேசம் எம்மிடம் வினவியது. அத்தோடு யுத்தம் நிகழ்ந்த காலகட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டை எல் டீ டீ ஈ பயங்கரவாதத்திலிருந்து தப்பி வெளிநாடு சென்றிருந்த குழுவினர்கள் பல்வேறு வகையில் சர்வதேசமயப்படுத்தினர்.

அந்தகாலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தினால் தொடர்ந்தும் இதுபற்றி அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதேபோன்று பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடாத்தப்பட்ட போது அம்மகாநாட்டில் கலந்துகொள்ள பல வெளிநாட்டு தலைவர்கள் தயக்கம் காட்டினர்.

பொதுநலவாய நாடுகளின் சில தலைவர்கள் தமது வருகையை தவிர்த்துக்கொண்டனர். இந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. ஜனநாயகம் இல்லாத நிலை தோன்றியுள்ளது. ஊழல் மிக்க ஆட்சி நிலவுகின்றது. சுதந்திரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது போன்ற காரணங்களை முன்வைத்த சில அரச தலைவர்கள் நமது நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதை தவிர்த்துக்கொண்டனர்.

சில முக்கிய சர்வதேச தலைவர்கள் நமது நாட்டுக்கு வருகைதந்த போதிலும், நம்நாட்டு பொதுமக்கள் பலரை சந்தித்து விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட அவர்கள் நமது நாட்டில் பாரிய பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றை துரிதமாக தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கோரினார்கள். 

ஆக அன்றைய அரசுக்கு நம்நாட்டு மக்களாலும் சர்வதேச சமூக்தினாலும் முன்வைக்கப்பட்ட வினாக்களுக்கு விடைகூறமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையிலேயே அவசர அவசரமாக நடாத்தப்பட்ட தேர்தலில் 42 நாட்களில் ஆட்சியிலிருந்த ஆட்சியை மாற்றி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நாம் ஆட்சிக்கு வந்தோம்.

அப்படி ஆட்சிக்கு வந்த நாம் கடந்த அரசாங்கத்தினால் விடைகூறமுடியாதிருந்த வினாக்களுக்கு விடையளித்ததுடன், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நல்ல முறையில் நிறைவேற்றுவதற்காகவே நாம் ஆட்சியமைத்தோம். இதன்போது நாம் எமது அரசியல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்தவற்றை நிறைவேற்றுவதே எமது கடமையாகும்.

படைவீரர்களுக்கு பங்கம் விளைவிக்கப்படுகிறது என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால், சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டுமாயின் எமது நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு உரிய முறையில் விசாரணைகள் நடாத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்தி அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள வேண்டும்.

அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து மீளும் வகையில் ஏதேனும் ஒரு இடத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்கு உரிய தண்டனையை வழங்குவது சரியா? அல்லது எமது நாட்டுக்காக பாடுபாட்ட நாட்டின் நற்பெயரை காப்பாற்றிய அனுபவமும் ஆற்றலும் மிக்க எமது படையினர் மீது அவதூறுகளை சுமத்துவதற்கு இடமளிப்பது சரியா? அல்லது சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் தரமான கீர்த்திமிக்க முப்படைகளாக எமது படைகளின் பெயர்களை தக்கவைத்துக்கொள்வதா?

யுத்தகாலம் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாக எமது படையினருக்கு எத்தனை பயிற்சி வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. பல தசாப்தங்களாக அமெரிக்காவால் எமது படையினருக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சியினை இழக்க நேரிட்டது. இந்தியா உட்பட இன்னும் பல நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற பல பயிற்சிகளை இழக்க நேர்ந்தது.

எமது புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின் அவ்வாறு இழக்க நேர்ந்த வாய்ப்புகளை மீண்டும் எமது படையினருக்கு பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. உலக தரத்திலான பயிற்சிகளை அனுபவங்களை அறிவினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இப்போது எமது படையினருக்கு கிடைக்கப்பெற்றுவருகிறது. முதலில் நான் குறிப்பிட்ட அந்த சம்வங்கள் தொடர்பான விசாரணைகள் எந்த ஒரு விசாரணையும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஆரம்பிக்கப்பட்டவையல்ல.

எக்னலிகொட சம்பவத்தை எடுத்துக்கொண்டால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த ஒரு சம்பவமாகும். ஆகையால் அதன் உண்மை நிலையை அறிவதற்காக விசாரணையினை ஆரம்பிக்க நேர்ந்தது. விசாரணை அவ்வாறு முன்னோக்கி செல்லும் போதே அச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றவகையில் சில அரச படையினர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டிவந்துள்ளது. 

விசாரணை முடிவில் அப்படைவீரர்கள் குற்றவாளிகளா? சுத்தவாளிகளா? என்பது நிரூபனமாகும். இவ்வாறான சம்பவங்கள் பற்றி நியாயமான விசாரணைகளைக் கோரும் உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் பதிலளிக்கவேண்டியது அரசின் கடமையாகும். அவ்வாறு பதிலளிப்பதன் மூலம் கலங்கமற்ற தன்மையை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமே ஒரு நாடு என்ற வகையில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும்.

இங்கே பௌத்த பிக்குகள் பற்றி நீங்கள் எழுப்பிய வினாவைப் பார்ப்போம் சில பௌத்த பிக்குமார்கள் நீதிமன்றம் செல்ல நேர்ந்த போது அங்கே அவர்கள் நடந்துகொண்ட விதம் காரணமாக அவர்களை கைதுசெய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டமைக்கு அரசாங்கமா குற்றவாளி?.

அடுத்ததாக சட்டவிரோதமாக யானைகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பௌத்த பிக்கு உட்பட இன்னும் பலர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமையை எடுத்துக்கொண்டால் ஒரு கனம் இந்த பிக்குமார்கள் பற்றிய பிரச்சினையை வைத்துவிட்டு இப்பிரச்சினை எங்கிருந்து வந்தது என்பது பற்றி சற்று பார்ப்போம்.

யானை திருட்டுக்கள் எவ்வாறு ஏற்பட்டன. இன்று இந்த நிகழ்ச்சிக்கு வந்துகொண்டிருக்கும் போது கூட திருட்டு யானைகளை வைத்திருந்த இரு நபர்கள் விசாரணைசெய்யப்பட்டு யானைகள் மீட்டெடுக்கப்பட்டதாக வானொலியில் கூறக் கேட்டேன்.

காடுகளில் வாழ்ந்துவந்த இந்த யானைகளை திருடியவர்கள் யார்? அத்திருட்டுக்கு உதவியவர்கள் யார் அதற்கு ஒத்துழைத்தவர்கள் யார்? அவற்றுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்? வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் படி வனவிலங்குகளை வேட்டையாடுதல், திருடுதல், சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருத்தல் ஆகிய அனைத்துமே குற்றமாகும்.

கடந்த காலங்களில் பெருமளவில் யானைகள் திருடப்பட்டதாக செய்திகள் வெளிந்த பின்னணியிலேயே அவ்வாறு திருடி தம்வசம் வைத்திருந்த 37 யானைகள் பல்வேறு நபர்களிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றன.

ஒருபோதும் நமது நாட்டில் நடக்காத சம்பவங்கள் கூட நடந்தன. வனவிலங்கு அத்தியட்சகர்களிடமிருந்த யானைப் பதிவேடும் காட்டு யானைகளும் கூட திருடப்பட்டன. நான் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக பதவியேற்ற நேரம் வரை இந்த ஜனாதிபதி மாளிகையில் கூட இரண்டு யானைகள் இருந்ததே. இவ்வாறான செயல்கள் எந்தளவு சட்டபூர்வமானவை? எந்தளவு நியாயமான செயல்?.

நான் இந்நாட்டில் ஜனாதிபதியாக இருக்கும் காலப்பகுதியில் பௌத்த மதம், பௌத்த விகாரைகளை பலப்படுத்தும் எல்லா விடயங்களையும் மேற்கொள்வேன். பௌத்த தேரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்ளது உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன்.

நம் நாட்டின் வசதி குறைந்த தூரப் பிரதேசங்களில் சில நேரங்களில் தமது தானத்தைக் கூட பெற்றுக்கொள்ள வழியில்லாத தங்குமிட வசதிகளற்ற பிக்குமார்கள் கூட உள்ளார்கள். ஆகையால் எமது அரசாங்கம் கொள்கை ரீதியாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட சில மிக குறைந்த எண்ணிக்கையிலான பௌத்த பிக்குமார்களுக்கு சகல வசதிகளையும் வழங்குவதற்குப் பதிலாக இந்நாட்டில் வசிக்கின்ற அத்தனை பிக்குமார்களுக்கும் அவர்களது நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது.

அத்தோடு வேறு விகாரைகளை பாதுகாக்கும் புதியதோர் அரச நிதியினையும் ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கென கலாநிதி பட்டங்களையும் பேராசிரியர் பட்டங்களையும் பெற்றிருக்கும் பௌத்த பிக்குமார்களைக் கொண்ட தேசிய பிக்கு அறிஞர் மன்றம் ஒன்றையும் அமைத்துள்ளேன்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தலைமை பிக்குமார்களை உள்வாங்கிய பிக்குமார்களையும் ஏனைய மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய ஆலோசகர் சபையொன்றையும் உருவாக்கியுள்ளோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திசாநாயக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அரச தொழின்முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -