பழுலுல்லாஹ் பர்ஹான்-
வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால்; தொழில் உரிமைப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
அகில இலங்கை ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி போராட்டம் இன்று 31வியாழக்கிழமை காலை 10.30மணியளவில் மட்டக்களப்பு காந்திப்பூங்காவுக்கு முன்னால் இடம்பெற்றது.
தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு உரிய நிரந்தர நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அரசே! ஊடனடியாக வேலைவாய்ப்பை வழங்கு,தொழில் உரிமை எமது சுதந்திரம்,நாங்கள் பெற்ற பட்டம் காற்றில் பறக்கவிடும் பட்டமா?,பட்டதாரிகளுக்கான தேசிய கொள்ளையை தயாரி,நல்லாட்சி அரசில் பட்டதாரிகள் தொடர்ந்தும் ஏமாறுவதுதான் நிலையா? உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை ஒண்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் தம்மிக முணசிங்க,மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் தெ.கிஷாந்த்,மதகுருமார்கள்,ஆசிரியர் சங்கங்கள்,மாதர் சங்கங்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,ஒண்றிணைந்த பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள், மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமை தொடர்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை வழங்குவதை துரிதப்படுத்துவதுடன், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.