பாதாள உலக கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு அஞ்சி பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள சம்பவம் நல்லாட்சியின் புகழை நாசம் செய்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அதிகாரத்துக்கு வந்தது தொடக்கம் கொழும்பு மற்றும் நாடு முழுவதிலும் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாதாள உலகக்கும்பல்கள் மீண்டும் தலைவிரித்து ஆடத்தொடங்கியுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலின் போது அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க களத்தில் இறங்கியிருந்த புளூமெண்டல் சங்க குழுவினரை நோக்கி தெமட்டகொட சமிந்த குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இலங்கையின் பாதாள உலகக் குழுவினரின் மீள் எழுச்சிக்கான எச்சரிக்கையாக அமைந்திருந்தது.
அதன் பின்னர் கடுவலை நீதிமன்றத் துப்பாக்கிச் சூடு, பலப்பிட்டிய நீதிமன்றம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை, தெமட்டகொட சமிந்தவை இலக்குவைத்து சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்று பாதாள உலகக்கும்பல்களின் ஆதிக்கமும் அட்டகாசமும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.
இந்நிலையில் இன்று பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு விளக்கமறியல் கைதிகளை அழைத்துவரும் சிறைச்சாலை பேருந்து மீது பாதாள உலகக்கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்தது. அதுவும் நீதிமன்ற வளாகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டு கைதிகள் இறங்கி நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பொலிசார் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு பாதாள உலகக்கும்பலின் அச்சுறுத்தலை முறியடித்துள்ளனர்.
சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் நீதிமன்றத்திற்கே பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் விடுக்கப்படும் நிலையில் இனிவரும் காலங்களில் நாட்டில் நல்லாட்சிக்குப் பதிலாக பாதாள உலகக்கும்பல்களின் காட்டாட்சிக்குத் தான் பொதுமக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக் கூடும் என்ற அச்சமும் இவ்வாறான சம்பவங்கள் மூலமாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.