தாராக்குடிவில்லு பிரதான பாதையில் காப்பற் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழா..!

சுஐப் எம் காசிம்-
“எமது பிள்ளைகள் தூய வெள்ளை உடையுடனேயே பாடசாலை செல்கின்றனர். பின்னர் அவர்கள் செம்மண் நிற உடையுடனேயே வீடு வந்து சேர்கின்றனர். இந்த அவலம் காலா காலமாக தொடந்து இருக்கின்றது என்று தாராக்குடிவில்லு பிரதேச மக்கள் அமைச்சர் ரிஷாட்டிடம் முறையிட்டனர்.”

தாராக்குடிவில்லு பிரதான பாதையில் காப்பற் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின்னர் அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போதே ஊர்ப்பிரமுகர்களும், பொதுமக்களும் தாம் எதிர்நோக்கும் கஷ்டங்களை எடுத்துரைத்தனர்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எச் எம் நவவியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் காப்பற் பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது. இந்த நிகழ்வு தாராக்குடிவில்லு ஊர்ப்பிரமுகர் ஜே எம் கியாஸின் தலைமையிலான இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான சி எம் எம் ஷரீப், நிஜாம், ராமனாயக்க ஆகியோரும் பங்கேற்று இங்கு உரையாற்றினர். தாராக்குடிவில்லு பிரமுகர் ராபியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வை ஜுனைத் எம் ஹாரீஸ் நெறிப்படுத்தினார்.

இந்தப்பகுதியில் தாராக்குடி வில்லு, சிசில் பவன, அக்கரவெளி ஆகிய மூன்று முஸ்லிம் கிராமங்களும் ராஜமணிவத்த, போஹாஹந்தி, வில்பொத்த ஆகிய மூன்று சிங்களக் கிராமங்களுமாக ஆறு கிராமங்கள் இருக்கின்றன. 

முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்து வருபவர்கள் புளிச்சாக்குளத்தின் பூர்வீக மக்கள். அக்கரவெளியில் மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த பள்ளிவாசல்பிட்டி மக்களுடன் அந்த ஊரைச்சேர்ந்தவர்களும் தற்போது வாழ்கின்றனர்.

இந்தப் பிரதேசம் 1956ம் ஆண்டு முன்னாள் பிரதமர் அமரர் பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்திலலேயே உருவாக்கப்பட்டது. சிங்கள, முஸ்லிம் கிராமங்கள் இற்றை வரை எந்தப் பேதமுமின்றி ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். பிரதேச மக்களின் பிரதான தொழில் தெங்குச் செய்கையே. கூலித்தொழிலாளர்கள் அதிகம். குளிப்பதற்கும் குடிப்பதற்கும் கிணற்று நீரே பயன்படுத்தப்படுகின்றது. கோடை காலங்களில் படுகின்ற கஷ்டங்கள் சொல்லமுடியாதவை. இவ்வாறு ஊர்ப்பிரமுகர்கள் தெரிவித்தனர்..

இந்த ஆறு ஊர்களையும் இணைக்கும் பிரதான பாதைக்கு எழுபதாம் ஆண்டு அளவில் முன்னாள் சபாநாயகர் எச் எஸ் இஸ்மாயில் பொறல் பாதை இட நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் நைனா மரைக்காரும் பாதை செப்பனிட உதவினார். எனினும் பின்னர் குண்டும் குழியுமாக மாறிய இந்தப் பாதையை முன்னாள் மாகாண அமைச்சர் நவவி 2000ம் ஆண்டளவில் பொறல் போட்டுத்தந்தார். 

இருந்த போதும் பாதை மீண்டும் சீரழிந்ததால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர். அக்கரவெளி எல்லையில் அமைந்துள்ள தாராக்குடிவில்லு முஸ்லிம் மகா வித்தியலய மாணவர்களும் பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு செல்லும் சிங்கள மாணவர்களும் சுமார் ஒன்றரை கிலோமீற்றர் நடந்தே செல்ல வேண்டியுள்ளது. உள்ளக வீதிகள் அனைத்தும் செம்மண் பாதைகளாக இருப்பதால் மாணவர்கள் படுகின்ற அவஸ்தைகள் ஒரு புறம் இருக்க இங்கு வாழும் மக்களும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். 

திருமண வைபவங்கள், கலாசார நிகழ்வுகள் மற்றும் இன்னோரன்ன நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்தப்பிரதேச மக்கள், பழைய ஆடைகளுடனேயே பிரதான வீதிக்குச் சென்று எங்கேயாவது ஒரிடத்தில் புதிய ஆடைகளை அணிந்து செல்ல வேண்டிய துர்ப்பக்கியமான நிலை இற்றைவரை தொடர்கின்றது. 

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நாம் பட்ட அவலங்களை அடுத்து இங்கு வந்த உங்கள் கட்சியை சார்ந்த நவவி எம்பியிடம் இந்தப் பிரச்சினைகளை எடுத்துரைத்த போது அவர் பாதையை செப்பனிடுவதாக உறுதியளித்தார். அதற்கு இன்று அடித்தளம் போடப்பட்டுள்ளது.

எத்தனையோ தடைகளுக்கு மத்தியில் நவவி அவர்களை தேசியப்பட்டியலில் எம்பியாக்கினீர்கள் அதற்காக என்றுமே நாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு கடன்பட்டுள்ளோம் என்றும் அவர்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.

இந்தக்கிராமத்தில் உள்ளவர்கள் பல்வேறு சிரமங்களின் மத்தியில் கற்றுள்ள போதும் அவர்களுக்கு அரச தொழில் கிடைப்பது அரிதாக இருக்கின்றது இதனை அமைச்சர் நிவர்த்திக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தனர். 

அமைச்சர் ஒருவர் நீண்ட காலத்திற்குப் பிறகு எங்கள் பிரதேசத்திற்கு வந்து உதவ முன்வந்தமை இதுவே முதற்தடவை என்றும் புத்தளம் மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் தம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -