“அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலமே தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும்” என கொழும்பு கம்பன் கழகத்தில் உரையாற்றிய என் இனிய நண்பர் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். தமிழர்களை நோக்கி ஜேவிபி இன்று நகர்வுகளை மேற்கொள்வதையும் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.
ஆனால், தமிழ் மக்களை பொறுத்தவரையில், அடிப்படை உரிமை வரிசை பட்டியலில் அதிகாரப்பகிர்வு என்பதுவே எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதற்காகத்தான் தமிழர்கள் சொல்லொணா துன்பங்களை சந்தித்து சளைக்காமல் கடந்த 68 வருட கால சுதந்திர இலங்கையிலே பல்வேறு விதமாக போராடி வருகிறார்கள்.
எனவே தமிழ் மக்களை அணுகும் எந்த ஒரு கட்சியும் அதிகாரப்பகிர்வு என்ற விடயம் பற்றிய தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும். இது இன்று தமிழ் மக்களை நோக்கி நகரும் மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபிக்கும் பொருந்தும் என்பதை நண்பருக்கு எடுத்துக்கூற நான் கடமைப்பட்டுள்ளேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
தாய்மார்களின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் இன, மத வேறுபாடுகளுடன் பிறப்பதில்லை என்ற கருத்து உயரியது. ஆனால், இத்தகைய கருத்துகளை ஜேஆர் முதல் ராஜபக்ச வரை சொல்லக்கேட்டு கைதட்டி, கைதட்டி தமிழ் சமூகம் சலித்து போயுள்ளது. நண்பர் அனுரவும் இதை சொல்லும் போது தமிழர்கள் மீண்டும் ஒருமுறை கைத்தட்டுவார்கள்.
முஸ்லிம்களும் கூடவே கை தட்டுவார்கள். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் நடக்காது. நடக்க வேண்டும் என்றால் ஒரே நாடு என்ற வரையறைக்குள் அதிகாரப்பகிர்வு என்ற புதிய அத்தியாயத்தை ஜேவிபி திறக்க வேண்டும்.
இனமோதல்களுக்கு இனி ஜேவிபி ஒருபோதும் இடந்தராது என்ற நண்பரின் உறுதிமொழியையும் நான் மதித்து வரவேற்கிறேன். ஆனால், சமகாலத்தில் நடைபெற்ற பாரிய யுத்தத்துக்கும், அதற்கு வழிகோலிய, அதிகாரங்களை பகிர்ந்து தரமறுக்கும் பிடிவாத இனவாதத்துக்கும் ஜேவிபியின் மருந்து என்ன என்பது பற்றி ஜேவிபியிடம் தெளிவான நிலைப்பாடுகளை நாம் காணவில்லை. இன்னமும் சொல்லப்போனால் குழப்பமான நிலைப்பாடுகளையே நாம் காண்கிறோம்.
இங்கே அனுர அடிப்படை உரிமை பற்றியும், ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் பற்றியும் பேசும் போது, இன்னொரு இடத்தில் ஜேவிபி பொதுசெயலாளர் நண்பர் டில்வின் சில்வா மற்றும் பிரசார செயலாளர் நண்பர் விஜித ஹேரத் போன்றோர் புதிய அரசியலமைப்பு முயற்சிகளையே நிராகரிகின்றார்கள் அல்லது எள்ளி நகையாடுகிறார்கள். அதிகாரப்பகிர்வா?, பேசவே கூடாது என பயமுறுத்துகிறார்கள்.
யுத்தத்தை மகிந்தவுடன் சேர்ந்து கைதட்டி ஆதரித்து விசிலடித்து நடத்திவிட்டார்கள். இனி யுத்தம் பற்றிய உண்மைகளை கண்டறிந்து. தவறுகளை திருத்திக்கொண்டு, அதிகாரத்தை பகிர்ந்து, தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் போக்கையும் நிராகரிக்கின்றார்கள். ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்று இன்று மகிந்தவை மீண்டும் கொண்டுவர உழைக்கும் நண்பர் விமல் வீரவன்சவின் நிலைப்பாடுகளும் இந்த விடயங்களில் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கின்றன.
எனவே நாம் என்ன செய்வது? குழப்பத்தை தீர்த்து விடு நண்பா அனுரா, என்று உரக்க கத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. எனது இந்த உரையை அப்படியே சிங்கள மொழியில் மொழிபெயர்த்து நண்பர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கும்படி ஜனநாயக இளைஞர் இணைய செயலாளருக்கு கூறுகிறேன்.