இந்நாட்டிலுள்ள பிக்குகளை கைது செய்வதன் மூலம், தொடர்ந்தும் தொந்தரவு கொடுக்குமாக இருந்தால், அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மகா சங்கத்தினரை வீதியில் இறக்குவோம் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அரசாங்கமொன்றை அமைப்பதும், அதனை மாற்றுவதும் மகா சங்கத்தினராவர். மாதுலுவாவே சோபித்த தேரர் நாட்டில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு முன்னெடுத்த முறைமை, அவரது எதிர்பார்ப்பு, நோக்கம் என்பவற்றை இந்த அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை.
ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்திலாவது இந்த அரசாங்கத்தில் போன்று பிக்குகள் கைது செய்யப்படவில்லை. இது பௌத்தர்களுக்கு செய்யும் ஒரு நிந்தனையாகும். இதற்கு எதிரான பௌத்த மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியாது எனவும் தேரர் கூறியுனார்.
நாடு எந்த திசையை நோக்கிப் பயணிக்கின்றது என்பதை தன்னால் விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது. மக்கள் நாளுக்கு நாள் பாதாலத்தை நோக்கி தள்ளப்படுகின்றனர். அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல், ஒவ்வொருவருடைய குப்பைகளை கிளறிக் கொண்டிருப்பதை விடுத்து, அபிவிருத்திப் பணிகள் எதனையும் செய்யவில்லை.
இப்படியான ஒரு அரசாங்கம் இந்நாட்டுக்குத் தேவையில்லையெனவும் இதனை துரத்தியடிக்க மகா சங்கத்தினர் தயாராகவுள்ளதாகவும் நேற்று அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் குறிப்பிட்டார்.