இந்தவருடம் கட்சிச்செயலாளர்களுக்கு துரதிஷ்டம் நிறைந்த ஆண்டாகவே உள்ளது. சி.ல.சு. கட்சி, ஐ.தே.க., ஐ.ம.சு.மு., அ.இ.ம.கா, சி.ல.முகா என ஒவ்வொரு கட்சியினதும் செயலாளர்கள் புதியவர்களாகவே தெரிவு செய்யப்பட்டதும், பலர் நீக்கப்பட்டதும் கடந்த வருட இறுதிப்பகுதி தொடக்கம் இவ்வருட ஆரம்பம் வரை நிகழ்ந்துவருவது ஒரு தேசியப்பிரச்சினையாகவே நோக்கவேண்டியுள்ளது. இதன் ஆரம்பம் ஐ.தே.கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவில் இருந்தே ஆரம்பமாகியுள்ளது.அத்தனைக்கும் மூலகாரணம் ஒன்றுதான்.
அதாவது கட்சியின் தலைவேராடு - செயலாளர்கள் முரண்பட்டுக்கொண்ட சந்தர்ப்பங்கள். கட்சித்தலைவரை விட செயலாளர்களே கட்சியின் அநேக விடயங்களை நன்கறிந்தவர்கள். சிலவேளைகளில் தங்களது சுயவிருப்பத்தின் பேரில் செயலாளர்கள் விலைபோவதும், பலரின் அழுத்தங்களுக்கு சோரம்போவதும், அல்லது சமூக நலனுக்காக தான் ஒரு செயலாளர் என்ற வகையில் செயற்படவருவதும் தலைவர் - செயலாளர் பிளவுகளை ஏற்படுத்துகின்றது.
அரசியல் களத்தில் கருத்துமுரண்பாடுகள் சகஜம்தான் உட்கட்சியில் ஏற்படும் குழப்பங்களை வெளியிலுள்ள கட்சித்தொண்டர்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடிவதில்லை. முதலில் போராளிகள் ஊடாக சிறுகச்சிறுக கசிந்து ஊடகங்களின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்ட பின்பே இருதரப்பு விவாதங்களையும் அறிந்துகொள்ள முடிவது வழமை.
பேரினக்கட்சிகளின் பிரச்சினை நாம் அறிந்த விடயமே. அதேவேளை அ.இ.ம.கா. கட்சியின் செயலாளர் நாயகமாகவிருந்த வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் தலைவர் கௌரவ அமைச்சர் றிசாட் அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டு (தெரிந்தவிடயம்) கட்சியை பிளவுபடுத்த முற்பட்டபோது, குருணாகலையில் அண்மையில் நடைபெற்ற பேராளர் மகாநாட்டில் முறைப்படி அவர் அகற்றப்பட்டு புதிய செயலாளர் தெரிவாகியுள்ள விடயமும் நாமறிந்ததே.
எமது முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை தாய்க்கட்சியான மு.கா. வில் செயலாளர் முரண்பாடு என்பது கண்டியில் நடைபெற்ற கட்சியின் பேராளர் மகாநாட்டுடன் ஆரம்பமானதாக தெரிகின்றது.
அங்குதான் செயலாளரின் அதிகாரம் பிடுங்கப்பட்டதாக ஊடக அறிக்கைமூலம் அறியக்கிடைக்கின்றது. கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ எம்.ரி; ஹஸன் அலி அவர்கள் கட்சியின் ஆரம்பகாலப்போராளி என்பதுடன் கட்சியின் பொருளாளராக, பொறுமையுடன் செயற்பட்டு செயலாளர் அந்தஸ்த்துவரை உயர்ந்தவர். முஸ்லிம்களின் அனைத்து விடயங்களிலும் மிக அக்கறையுடன் ஆராய்ச்சியுடன் புள்ளிவிபரத் தரவுகளை செவ்வனே வைத்துக்கொண்டு அவ்வப்போது தலைவரோடு இனைந்தும், தனிப்பட்ட முறையிலும் குரல்கொடுத்துவந்த ஒருவர் என்பதை யாராலும் மறுத்துரைக்கமுடியாது.
ஏனெனில் அவர் புலிகளின் உயிர் அச்சுறுத்தல் தொடக்கம் கட்சி உறுப்பினர்களின் அச்சுறுத்தல், பிரித்தெடுத்தல் போன்ற சவால்களையும் தாண்டி கட்சியை வளர்த்தெடுத்த ஒரு தலைவர். மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்றப் அவர்களின் வலதுகையாக செயற்பட்டவர். தலைவரின் கொள்கை, சிந்தனைகளை தன்னகத்தே கொண்டவர், கட்சியின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் நன்றாக அறிந்தவர் என்றால் மிகையாகாது.
மனிதரில் தவறுகள் இல்லாவர்கள் எவருமில்லை என்ற விதிவிலக்குக்கு அமைய அரசியல், அபிவிருத்தி ரீதியாக அவரும் பல தவறுகளை விட்டிருக்கலாம் அதற்காக மரத்தின் ஆணிவேர்களில் ஒருவராகத் திகழும் கௌரவ எம்.ரி.ஹஸன் அலி அவர்களை வயதாகிவிட்டது வழிவிடுங்கள் என பலர் கூவித்திரிவது அவருக்கும் தெரியாமலில்லை.
ஆனால் யதார்த்தம் இன்று கட்சியிலுள்ள மூத்தபோராளிகள் எத்தனை பேர் என்ற வினாவைத் தொடுத்தால் விரல்விட்டு எண்ணினாலும் விரல்கள் மிஞ்சும்.
புதிதாக இணைந்தவர்கள், கட்சியை எதிர்த்து வசைபாடியர்கள், முகா வை விமர்சித்தவர்கள் தலைவர் அஷ்றப் இருக்கும்போது இக்கட்சி தேவையில்லை என்றவர்கள் இன்று கட்சியில் இடம்பிடித்து தலைவர் ஹக்கீமை தாரக மந்திரமாகக் கொண்டு செயற்பட முடிந்தவர்கள்தான் உள்ளனர். ஆயினும் அவர்களையும் நாம் போராளிகள் என்றுதான் அழைக்கின்றோம்.
மக்களும் அவர்களின் உணர்வலைகளை ஏற்று வாக்களித்து ஏற்றுக்கொண்டு தோள்களில் சுமக்கின்றனர். தோள்களில் சுமக்கும் போராளிகளுக்கு அவர்களும் பணத்தை தினமும் செலவு செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இங்கு பணமும் - ஆரதவும் ஒரு நாணயத்தின் இருபக்கம்போல் ஆகியவிட்டது. பணமில்லாவிட்டால் ஆதரவும் இல்லை வாக்கும் இல்லை! இது எமது மூன்றாலம் உலகநாட்டின் அரசியல் சாபக்கேடு!!!!!!
இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் யாதெனில், எமது சமூகப்பாரம்பரியப்படி ஒரு கூட்டுக்குடும்பத்தில் வயதுமுதிர்ந்தவரின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வது வழமை.
நவீன யுகம் என்பதற்காக வயது முதிர்ந்தவரை ஒரு அறையில் பூட்டி முடக்கிவிட்டு அவரது கருத்துக்களுக்கு செவிசாய்க்காது செயற்படும்போது எத்தனையோ பிரச்சினைகள் ஏற்படுவதை பார்த்திருக்கின்றோம். ஏன் ஒரு போடியார் கூட தனது வயல் விசயத்தில் வயற்காரனின் கருத்துக்களை செவிசாய்த்தே நடப்பது வழமை. ஏனெனில் வயலின் குறைபாடு, நிறைகள், வேளான்மையின் நிலை போன்றவற்றை போடியாரை விட அனுபவம்மிக்க வயற்காரன்தான் நன்கறிந்தவன் என்பதால்.
கற்றோர் சிறந்துவாழும் சமூகத்தில் நமது மனக்கண்ணை திறந்துபார்க்கும்போது மூத்தபோராளியின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளமுடியும். என்னைப்பொறுத்தவரை நான் புத்திதெரிந்து முதற்கண்ட கட்சிகள் இரண்டுதான் சுதந்திரக்கட்சியும் கைச் சின்னமும், முஸ்லிம் காங்கிரசும் மரச்சின்னமும்.
யானைச்சின்னத்தை கண்ட ஞாபகம்கு குறைவு. செயலாளர் அவர்களை 1991 இல் இருந்து அறிந்திருக்கின்றேன். அதற்காக நான் கட்சிசார்பாகவோ செயலாளர் சார்பாகவோ இங்கு வாதிடவில்லை. யதார்த்தம் என அறிந்துள்ளதையே இங்கு குறிப்பிடுகின்றேன்.
இன்னும் இன்றுள்ள நிலையில் சகல அரசியல்வாதிகளும் எனது நண்பர் (கவிஞர். ஹி.மீர்சா) குறிப்பிடுவதுபோன்று அரசியல் வாசிகள்தான். அவர்களது வாசிக்காக காய்நகர்த்துவதும், சீட் கிழிப்பதும், பணத்தை இறைத்து தேர்தல்களில் வெற்றிபெறுவதும் வழமையாகிவிட்டது.
ஆனால் ஹஸன் அலி விவகாரத்தில் எனக்கென்னவோ உட்கட்சியில் அவருக்கெதிராக சக்திகள் செயற்படுவதும், கௌரவ அமைச்சர் ஹக்கீமின் எல்லா கருத்துக்களும் செயலாளர் நாயகம் செவிசாய்க்காமல் இருப்பதும்தான் அவரின் இந்நிலைக்கான காரணம் என பொதுமக்கள் பேசிக்கொள்வது உண்மைபோல் தோனுகின்றது.
எவ்வாறாயினும் இன்றுள்ள இளம் அரசியல் தலைமைகள் மூத்தபோராளிக்கு இடமளித்து அவரின் ஆலோசனைகளை செவிமடுத்து செயற்படுவதும், எதிர்கால அரசியல் இருப்பு, உரிமைக்கான தீர்வுத்திட்டங்களை அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை அலசி ஆராய்ந்து , இம்முஸ்லிம் சமூகத்தின் விடியலுக்காக உருவாக்கப்பட்ட கட்சியின் நோக்கங்களை செவ்வனே கொண்டுசெல்வதும்தான் மிகவும் சிறந்த முடிவாக அமையும் எனத்தோன்றுகின்றது.
அதைவிடுத்து வந்த காகம் இருந்த காகத்தை விரட்டிய கதையாக வந்தால் அது மீண்டும் முஸ்லிம் சமூகத்தை மலினப்படுத்துவதாகவே அமையும்.
இதையெல்லாம் சொன்னதற்காக அ.இ.ம.கா தேவையில்லை என்ற அர்த்தமில்லை.
போட்டிக்கு ஒரு கட்சி இருக்கவேண்டும். மு.கா. தவறுவிட்டால் அ.இ.ம.க. ஆவது திருத்தி செயற்படவேண்டும் கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள். குறிப்பாக அ.இ.ம.காவின் அம்பாறை மாவட்டத்துக்கான வருகை இங்குள்ள அரசியல்வாதிகளை உசுப்பேற்றி விட்டதுடன் ஹக்கீமின் உறக்கத்தையும் குறைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.
இன்று வடபுலபிரச்சினைகளை றிசாட் பேச, கிழக்குப்புல பிரச்சினையை பேவுதற்காக ஹக்கீம் முன்வரவேண்டும். உதாரணமாக தேய்ந்துபோக இருக்கும் சிந்தனைபோல் தோற்றமளிக்கும் கரையோர மாவட்டம் மு.கா.வினால் இன்னும் பெற்றுக்கொள்ளமுடியாமல் இருப்பது எந்நோக்கத்துக்காக என்ற கேள்வியும் உண்டு.
எனவே, இருகட்சிகளும் பிரிந்துநின்று வேறு வேறு திட்டங்களைப் பற்றி பேசுவதைவிட விட்டுக்கொடுப்புடன் வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்காக ஒன்றுநின்று குரல்கொடுப்பதை புத்திஜீவிகள் சமூகம் விரும்புகின்றது.
எஸ்.எம். சஹாப்தீன்
நிந்தவூர்.