க.கிஷாந்தன்-
கடவுளின் மக்கள் என கருதப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நடுவீதியில் விடப்பட்டுள்ளனர். ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று தொழிலாளர்களை கண்டுகொள்வதேயில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அட்டன் - வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில் 06.03.2016 அன்று ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கானஅடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
எனது ஆட்சியின்போது மலையக மக்களுக்காக பல அபிவிருத்தித் திட்;டங்களை நான் முன்னெடுத்தேன். வீதி அமைப்பு, பாடசாலை அமைப்பு என உட்கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கப்பட்டன. இவ்வளவு செய்தும் மக்கள் மத்தியில் போலிக் கதைகளை கட்விழ்த்துவிட்டு சதிகாரர்கள் அவர்களை திசை திருப்பிவிட்டனர்.
மலையக மக்கள் கடவுளின் மக்களென சிங்கள கவிஞர் ஒருவர் கவிபாடியுள்ளார். ஆன்மீக வழிபாடுகளில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இறைவழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இதன் ஊடாக மேற்படி கூற்று உறுதியாகின்றது.
எனது ஆட்சியின்போது தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தேன். ஆனால், இன்று என்ன நடக்கின்றது. 1000 ரூபா தரப்படும் என்றனர். 2500 ரூபா வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் அறிவித்தனர். இவை நடந்துள்ளனவா?
மலையக இளைஞர்களுக்கு கொழும்புக்கு செல்லமுடியாதநிலை காணப்பட்டது. பாதுகாப்பு கெடுபிடிகள் உச்சமட்டத்தில் இருந்தன. ஆனால், போரை முடித்து வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதி மக்களுக்கும் நாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். வடக்கு,கிழக்கிலும் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தோம்.
ஆனால் அவர்களின் இதயங்களை வென்றெடுக்கமுடியவில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதன்போது தமிழில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். தேயிலைக்கு சரியான விலை கிடைப்பதும் இல்லை, தொழிலாளர்களுக்கு சம்பளமும் கிடைப்பது இல்லை, பொய் சொல்லி வாக்குகளை பெற்ற அரசாங்கம் உங்களை கவனிப்பதும் இல்லை என்றார்.