”முஸ்லிம்களின் வாக்கு மஹிந்த பக்கம் குவிய ஆரம்பித்திருக்கின்றது” அஸ்வர்

எம்.எஸ்.எம்.சாஹிர்-

லங்கையில் முஸ்லிம்களது பிரச்சினைகள் உள்ளடக்கப்படாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் இளவரசர் செய்த் ஹுசைனின் அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு நிராகரிக்க வேண்டுமென முன்னாள் முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொடியாகும்பரையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிப்பதற்காக நடாத்தப்பட்ட இக்கூட்டத்தில் மேலும் பேசிய அவர் கூறியதாவது,

வடபகுதி முஸ்லிம்களுக்கு நடந்த மிக மோசமான விளைவுகளுக்கு இன்னும் தீர்வு இல்லை. யாழ்ப்பாணம், மன்னாரிலிருந்து சுமார் இரண்டு இலட்சம் முஸ்லிம்கள் ஒரே இரவில் புலிகளால் துரத்தியடிக்கப்பட்டார்கள். இலங்கையில் இதற்கு முன்பு முஸ்லிம்கள் குடியேறியதுக்குப் பின்பு இப்படியான இனச் சுத்திகரிப்பு இலங்கையின் எந்தப் பாகத்திலும் நடைபெற்றதில்லை. எனினும் யாழ்ப்பாணம், மன்னார் முஸ்லிம்களுடைய பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் எந்த விதமான தீர்வுத்திட்டமும் இந்த நாட்டிலே அமுல் செய்யப்பட முடியாது என்பதை ஐக்கியமாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

ஜோர்தானிலிருந்து இளவரசர் வந்தார். அவர் ஒரு முஸ்லிம். அவர் ஒரு உல்லாசப் பிரயாணியாக வந்தாரா என்ற கேள்வியை இப்போது நாம் கேட்க விரும்புகின்றோம். ஏனெனில், வடக்குப் பிரதேச முஸ்லிம்களைச் சந்திக்கவில்லை. மூர்வீதி முஸ்லிம்கள் வீடுகளை, பாடசாலைகளை இழந்தனர். அதாவது பேரறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ், (நீதிபதி)எம்.எம். அப்துல் காதர், காதியார் சுல்தான், போன்றவர்கள் வசித்த பகுதிக்குக் கூட அவர் சென்று பார்க்கவில்லை. இவ்வேளையில் நல்லூர் கோவிலுக்கு இளவரசர் ஹுசைன் வந்த செய்தி கேட்டு மூன்று பேர் முஸ்லிம்கள் பெண்மணி உட்பட அவரை வழிமறித்து வடபகுதி முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி ஒரு மகஜரை பலவந்தமாக அவர் கையில் கொடுத்தார்கள். ஆனால் இது விடயமாக அவர் ஜெனீவாவுக்கு அனுப்பியிருந்த அறிக்கையில், முஸ்லிம்களுடைய பிரச்சினை பற்றி எனக்குத் தெரியும். நான் வட பகுதிக்குச் சென்று பார்த்திருக்கின்றேன் என்று அப்பட்டமான பொய்யைச் சொல்லி இருக்கிறார். இளவரசருக்கு இது தகுமா? 

இந்த அறிக்கையை ஜெனீவா மனித உரிமை இயக்கம் முற்று முழுதாக நிராகரிக்க வேண்டுமென இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் வேண்டிக் கொள்கின்றனர். வடபகுதி முஸ்லிம்கள் இலங்கையிலுள்ள ஐ.நா சபைக்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற் கொண்டார்கள். இவரை ஏன் வடபகுதி முஸ்லிம் பிரதேசத்துக்கு வரவில்லை, அனுப்பவில்லை என்ற பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த போது, அங்குள்ள அதிகாரிகள் கூறினார்கள் இது நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. அந்த நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தவர் வெளிநாட்டு அமைச்சர் என்று சொன்னார்கள்.

சயோனிச வாதம் இனவாதமல்ல. என்ற பிரேரணை ஐக்கிய நாடுகள் சபைக்கு வந்த போது இந்த சமரவீரவிடம் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ சொன்னார் அந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று, அந்த வேளையில் இளைஞர் பிரதிநிதியை வாக்களிக்கும் நேரத்தில் வெளியேறுமாறு அங்கே பணித்திருந்தார். இதைக் கேள்வியுற்று அதிர்ச்சியுற்ற அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக மங்கள சமரவீரவை வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். அந்த கோபத்தை திணிப்பதற்காக வேண்டித்தான் இளவரசரை வரவழைத்து வடபுலத்துக்குச் சென்றும் அங்கே முஸ்லிம்களை சந்திக்காத ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரித்திருக்கின்றார் என்றால் இந்த அரசாங்கத்தின் போக்கு என்ன? முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட நல்லாட்சி எங்கே என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

அது மட்டுமல்ல, இளவரசர் ஜெர்மனியிலிருந்து, ஜோர்தானிலிருந்து வந்தார். அண்டைய நாடுகளான சிரியா, லெபனான், யெமன் போன்ற நாடுகள் சயோனிஷ வாதிகளால் அமெரிக்கவாதிகளால் ஏகாதிபத்திய வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளால் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணகான முஸ்லிம்கள் மேற்கு நாடுகளை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாக தன் சொந்த தாய் மண்ணை விட்டு ஓட்டம் பிடித்துள்ள அவலத்தை இந்த 21 ஆம் நூற்றாண்டில் கண்டு உலகமே கண்ணீர் வடிக்கின்றது. அவர்களுடைய மனித உரிமைகளைப்பற்றிப் பேசுவதற்கு இளவரசர் போகவும் இல்லை நேரமும் இல்லை. பலஸ்தீன மக்கள் கடந்த 60 ஆண்டு காலமாக சிறுவர்கள், வயதுவந்தவர்கள், பெண்கள் என்று கூடப்பார்க்காமல் ஈனஇரக்கமற்று கொள்ளப்படுகின்றார்கள். இரவும் பகலுமாக அங்கே மனித உரிமை மீறப்படுவதை கொஞ்சம் போய்ப் பார்க்க முடியாதா?

அவர்களும் தன்னுடைய இனம், மதத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரே! ஆனால் இலங்கை வந்து அவர் மனித உரிமை பற்றி சிலாகித்துச் சென்றிருக்கிறார். என்ன பரிதாபம். ஆகவே இந்த நாட்டிலே உண்மையான சமாதானம் ஏற்படுவதற்கு நாம் அனைவரும் ஒன்று பட்டு ஓரே மக்களாக, ஓரே இலங்கையர் என்ற ரீதியல் வாழவேண்டும். 3ஃ4 பங்கு முஸ்லிம்கள் 

சிங்களப் பகுதியில் வாழ்கின்றார்கள். இந்த நேரத்தில் கிழக்கிலிருந்து அதாவது ஒரு செத்த, மறித்த வேண்டுகோள் மீண்டும் எழுப்பப்படுகின்றது.

அதாவது தனி நாடு, தனி அலகு, தனி மாகாணம் கேட்கும் ஒரு குரல் இப்பொழுது மீண்டும் எழுகின்றது. இந்த வகையில் தனது அரசியல் பயணத்தை மேற் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் அஷ்ரப் இதே கோரிக்கையை முன் வைத்தார். தனி அலகு கேட்டார். எல்லாவற்றையும் கேட்கும் போது முஸ்லிம்கள் மத்தியிலே ஒரு விதமான ஏனையோரைப்பற்றி தீவிரவாதம் பரவுவதை உற்று நோக்கினார். சமயயோஷித தலைவர் அஷ்ரப். ஆகவேதான் நுஆ வை ஆரம்பித்தார். அதில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்று சேரக்கூடிய நிலையை உருவாக்கினார். வடக்கு, கிழக்கு, தெற்கு முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்த்துதான் அவர் பார்த்தார்.

கிழக்கிலங்கையிலிருந்து முஸ்லிம் தலைவர்கள் அகில இலங்கை லீக்குக்குதான் வருவார்கள். டாக்டர் டி.பி.ஜாயா, எம்.சீ.எம்.கலீல் போன்றவர்கள் தலைமையில் சென்று முஸ்லிம் சமூகத்தின் சார்பாக வடகிழக்கு அனைத்து முஸ்லிம்கள் சார்பாக கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.

அதனை அந்த ஆணைக்குழுக்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்றுக் கொண்டிருக்கின்ற வரலாறுகள் உண்டு. கேட் முதலியார் எம்.எஸ் காரியப்பர், முதலியார் இப்றாஹிம் லெப்பை, முதலியார் சித்திலெப்பை. மூதூர் ஏ.ஆர்.ஏ.அபூபக்கர், புத்தளம் எச்.எஸ்.இஸ்மாயில் போன்றோர்கள் எல்லோரும் சேர்ந்து இவர்களுடைய தலைமையிலே எத்தனையோ விடயங்கள் செய்து அவர்களுடைய கோரிக்கையை அவர்கள் பெற்றார்கள். ஆகவே, கொழும்பில் இருக்கின்ற அன்றைய முஸ்லிம்கள் ஒரு காலமும் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களுடைய பிரச்சினையை தட்டிக்கழிக்கவில்லை. அதற்கு முன்னுரிமை கொடுத்தார்கள். எந்த விடயத்திலும் கிழக்கு மாகாணத்துக்கு முதன்மை கொடுத்து கவனிக்கச் சொன்னார்கள். ஆனால் வேறு அலகு, தனி அலகு இவர்கள் கேட்கிறார்கள். அப்படியாயின் இதனால் வடகிழக்குக்கும் இங்கே தெற்கிலே உள்ள முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு புதிய திண்டாடட்டம் ஏற்படும்.

எனவே, அன்று எங்கள் மதியுகம் படைத்த தலைவர்கள் ஒரே இனமாக இலங்கையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சிங்களவர்களிடம் பேசுவதற்கு ஏதும் பிரச்சினைகள் இருந்தால் சிங்கள சகோதரர்களிடம் போய் பேசி தீர்த்துக் கொள்வோம்.

இன்று கூட குறிப்பாக சிங்களப் பகுதிகளிலே அமைதியாக, அந்நியோன்யமாக பழகுகின்றோம். போர்த்துச்கீசுக் காரர்கள் முஸ்லிம்களை அடித்து விரட்டிய போது, கரையிலிருந்து மலைநாடு வரை அங்கே இருந்த மன்னர்கள், இருக்க இடங்கள் வழங்கினார்கள். பள்ளிவாசல்களை கட்டுவதற்கு இடம் கொடுத்தர்கள். முஸ்லிம்கள் வைத்தியம் செய்தார்கள், வைத்தியர்களாக மாறினார்கள்.

இல்லாத பிரச்சினையை உருவாக்காது. நாம் அனைவரும் சிந்தித்து செயற்படவேண்டும். ஆகவே இந்த நாட்டிலே தெற்கிலே இருக்கின்ற உணர்வுகளைப்பார்க்கின்ற போது முன்னாள் ஜனாதிபதிக்கு நல்ல ஒரு எதிர்காலம் பிறந்திருக்கின்றது என்பதை அறியக் கூடியவாறு இருக்கின்றோம்.ஆகவேதான் இந்த பிரதேச சபைத் தேர்தலை ஒன்றுக் கொன்று முரணாகப் பேசி தடுத்து வருகின்றார்கள். 

அண்மையில் மள்வானையில் நடந்த மஹிந்த ராஜபக்ஷ கூட்டம் இதற்கு சான்று. மள்வானை ஐக்கிய தேசிய கட்சிக் கோட்டை அங்கே கூட்டதில் பெரும் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டது பெரும் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கின்றது. வர வர முஸ்லிம்களின் வாக்கு மஹிந்த பக்கம் குவிய ஆரம்பித்திருக்கின்றது.. என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -