முஸ்லிம் அரசியல் அபிலாஷைகளுக்கும், அவர்களது வாழ்வுரிமைகளுக்கும் மாற்றமான எந்த முயற்சிகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று அக்கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் இன்று (26/03/2016) தெரிவித்தார்.
முள்ளிப்பொத்தானை அல்/ஹிஜ்ரா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, எம்.எச்.எம்.நவவி எம்.பி, கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்டீன் ஹாஜியார், முன்னால் உபவேந்த்தர் இஸ்மாயில், கிண்ணியா பிரதேச சபை முன்னால் தலைவர் டாக்டர். ஹில்மி மற்றும் பிரதேச சபை முன்னால் உறுப்பினர்களான தாலிப்,வாஹிட், ரம்சான் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் இங்கு உரையாற்றும்போது கூறியதாவது,
இந்த நல்லாட்சியை உருவாக்குவதில் நூற்றுக்கு நூறு வீதம் பங்களிப்பு செய்தவர்கள் முஸ்லிம் சமூகத்தினர். ஜனாதிபதி மஹிந்த, அந்த சமூகத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை, கொடுமைகளை, அச்சுறுத்தல்களை பார்த்தும் பாராதிருந்த மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜனாதிபதி மைத்திரியையும், பிரதமர் ரணிலையும் ஆட்சிக்கதிரையில் அமர்த்துவதற்கு பாடுபட்டவர்கள் நாங்கள்.
அதே போன்று தமிழ் மக்களும், அவர்கள் சார்ந்த கட்சிகளும் இந்த நல்லாட்சியைக் கொண்டு வருவதற்கு பெரிதும் துணை புரிந்திருக்கின்றனர். இந்த நாட்டிலே போர் முடிவுற்று, பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டு சிறுபான்மை மக்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதில் புதிய அரசு முனைப்புக் காட்டி வருகின்றது. தமிழர் தரப்பு தமக்குத் தேவையான தீர்வுத்திட்ட வடிவங்களை கட்சிகளின் சார்பிலும், அமைப்புக்களின் சார்பிலும், டயஸ் போராக்களின் ஊடாகவும் அழுத்தம் கொடுத்து வருகின்றது. அதே போன்று சர்வதேசமும் இந்தத் தீர்வு திட்டத்தில் தமது ஆர்வத்தை செலுத்தியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில், அதிகாரப் பகிர்விலோ, தேர்தல் முறை மாற்றத்திலோ, உள்ளுராட்சித் தேர்தல் முறைகளிலோ எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படக் கூடாது என்பதில் நாம் அக்கறைகொண்டு உழைக்கின்றோம். தற்போது இருக்கும் முறைமைகளில் முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் பலாபலன்கள், அவர்களுக்குக் கிடைக்கும் பங்குகள், அவர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதங்கள் இனிவரும் காலங்களில் இழக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ள போதும், அவ்வாறு நடக்கமாட்டாது என்ற உறுதிமொழியை பல தடவைகள் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் பெற்றிருக்கின்றோம்.
இனப்பிரச்சினை தீர்விலும், ஏனைய விடயங்களிலும் ஜனாதிபதியும், பிரதமரும் எமக்கான உரிய பங்கை செய்து தருவார்கள் என நாங்கள் இன்னும் நம்புகின்றோம். அவர்கள் தருவதாக எம்மிடம் பலமுறை உறுதியளித்துள்ளார்கள் என்பதை மீண்டும் இந்த இடத்தில் நான் அழுத்தமாகக் கூற விரும்புகின்றேன்.
நாங்கள் நாட்டுப் பற்றுள்ள ஒரு சமூகம். இந்த நாட்டின் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராட்டங்களில் ஈடுபட்ட போது, தேசப்பற்றை நாம் முன்னிறுத்திக் கொண்டதனால், நடுநிலைச் சமூகமாக வாழ்ந்துகாட்டி இருக்கின்றோம். இப்போதும் அவ்வாறே.
முஸ்லிம் சமூகம் ஆயுதப் போராட்டத்தில் இறங்கி அழிவுகளுக்குத் துணை போகக் கூடாது என்ற காரணத்துக்காகவே, மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரசை தோற்றுவித்தார். அதனை ஒரு தனித்துவமான கட்சியாக வளர்த்தெடுத்தார். எனினும் அக்கட்சியின் போக்கிலே, சமூகத்துக்கான அதன் பயணத்திலே மாற்றங்களைக் கண்டோம். எனவேதான். புதுக் கட்சி ஒன்றை ஆரம்பித்து, சமூகப் பயணத்திலே இணைந்துகொண்டுள்ளோம். யாரையும் வீழ்த்துவதற்காகவோ, பிறருடைய கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவோ நாம் கட்சியை ஆரம்பிக்கவில்லை.
நாம் கட்சியை ஆரம்பித்த காலங்களில் எமக்கெதிராக துரோகிப் பட்டம் சூட்டினார்கள். எனினும் இறைவனின் நாட்டத்தால் எமது கட்சி வளர்ந்து விருட்சமாகி இருக்கின்றது. எந்தத் தடை வரினும், நாம் எமது பயணத்தை நிறுத்தப் போவதில்லை. எங்களை நம்பி இருக்கும் மக்களையும் நாம் கைவிடமாட்டோம். இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.