எம்.வை.அமீர்-
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முதல் பயிலுனர் உத்தியோகத்தர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் வழங்கப்பட்ட 524 நியமனங்களைப் பெற்றவர்களும் இன்றுவரைக்கும் நிரந்தரமாக்கப்படாதவர்களாக இருப்பது கவலையளிப்பதாகவும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்க அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுப்பதாக நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் பொறியியல் முதுமானியும், பிரபல சமூக ஆர்வலருமான உதுமான்கண்டு நாபீர், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு எழுதியுள்ள திறந்த மடலில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பல்வேறு நிறுவனங்களிலும் இவ்வாறு பணியாற்றியவர்கள் காலப்போக்கில் நிரந்தரமாக்கப்படாமல் விடப்பட்ட அனுபவங்கள் இருப்பதாகவும் இவ்வாறான இக்கட்டான நிலைக்குள் குறித்த ஊழியர்களை தள்ளாமல் அவர்களை நிரந்தரமாக்குவதற்கு வேண்டிய செயற்பாடுகளில் அமைச்சர் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
குறித்த நியமனத்தைப் பெற்றோர் எந்த சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்படலாம் என சிலரால் கூறப்படும் அளவுக்கு அமைச்சர் இவர்கள் மீது கரிசனையற்று இருக்க மாட்டார் என்று தான் நம்புவதாகவும் பல நூறு கும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.