முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தேர்தல் முறையொன்றினை உருவாக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றிணையுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் முஸ்லிம் சமூகம் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராகவே வாக்களித்தது. மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிப்பதற்கு பங்காளர்களாகி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிபீடமேற்றினார்கள்.
முஸ்லிம் சமூகம் அரசியல் யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றோ புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்பட வேண்டுமென்றோ வாக்களிக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே புதிய தேர்தல் முறையில் அதிக அக்கறை கொண்டுள்ளது.
புதிய தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் குறைவடையும் அதனால் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநித்துவம் பாதுகாக்கப்படும் வகையிலான தேர்தல் முறை மாற்றத்தையே வலியுறுத்தி நிற்கிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பல தடவைகள் கலந்துரையாடியிருக்கிறது. கட்சியின் நிலைப்பாட்டினை முன்வைத்திருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிமுடனும் கலந்துரையாடியுள்ளோம்.
புதிய தேர்தல் முறைமை சிறுகட்சிகளையும் சிறுபான்மைக் கட்சிகளையும் பாதிக்கும் என்பதால் பிரதிநிதித்துவங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இது தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளும் சிறு கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக் குழுவுக்கு ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ளார். அடுத்தமாதம் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது என்றார். விடிவெள்ளி
தேர்தல் முறை தொடர்பாக அன்மையில் சிகரம் வானொலியின் அரசியல் களம் நேரகாணல் நிகழ்வின் போதும் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கருத்து தெரிவித்தார் வீடியோ இங்கே...