ஹாசிப் யாஸீன்-
ஜோர்தான் - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜோர்தான் - இலங்கை பாராமன்ற நட்புறவு சங்கத்தின் கூட்டம் இன்று (09) புதன்கிழமை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் ஜோர்தான் - இலங்கை பாராமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இதன் பிரதித் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, சுரேஷ் வடிவேல், எம்.எச்.நபவி ஆகியாரும், பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பிரமான, பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் எட்வட் குணசேகர உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,
என் மீது நம்பிக்கை வைத்து ஜோர்தான் - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக தெரிவு செய்தமைக்கு சபையோருக்கு நன்றிகளை தெரிவித்ததோடு ஜோர்தான் - இலங்கை நாடுகளின் நட்புறவு, வர்த்தக செயற்பாடுகள், கலாச்சார விழுமியங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைவராக தெரிவு செய்யப்பட்டதையிட்டு சபாநாயகர் கருஜயசூரிய, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உள்ளிட்ட அமைச்சர், பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.