எம்.வை.அமீர் -
கல்முனை கரையோர பிரதேசங்களில் இருக்கும் ஓரிரு மாவட்ட அலுவலகங்கள் கூட அம்பாறைக்கு மாற்றப்பட்டுவரும் இவ்வேளையில் இது தொடர்பில் கல்முனைக்கான மக்கள் செயட்பாட்டுச் சபையின்” (PACK Sri Lanka) தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். ஏ. கலீலுர் ரஹுமானிடம் வினவிய போது கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை கரையோர மாவட்டகாரியாலயங்களின் திட்டமிடப்பட்டநகர்வும், செயற்திறனற்ற பிராந்திய முஸ்லிம் அரசியல் தலைமைகளின் தொடர்ச்சியான பலயீனங்களும்.
அம்பாறை மாவட்ட கரையோர மக்களால் நீண்ட காலமாக கோரப்பட்டு வருகின்ற, அம்பாறை மாவட்டத்தின் கரையோரமான தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழுகின்ற கல்முனை தொகுதி, சம்மாந்துறை தொகுதி மற்றும் பொத்துவில் தொகுதிகளை உள்ளடக்கியதான உத்தேச கல்முனை கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவத்தினை குறைக்கும் பொருட்டு இப்பிராந்தியத்தில் இயங்கி வருகின்ற அரச நிறுவனங்களை ஒவ்வொன்றாக மிகத் திட்டமிட்ட அடிப்படையில் பேரினவாத சக்திகள் அம்பாறை நகருக்கு நகர்த்தி வருவது யாவரும் அறிந்த விடயம்.
அந்த வகையில் அண்மையில் கல்முனை பிராந்தியத்தில் இயங்கி வந்ததேசிய தொழில் பயிற்சி அதிகாரசபை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகிய காரியாலயங்கள் அம்பாறைக்கு மாற்றப்பட்டது தொடர்பில், இந்த நிறுவனங்கள் இடம் மாற்றப்படாது அல்லது இடம் மாற்ற விடமாட்டோம் என்றல்லாம் வேறு வேறான அறிக்கைகளும் வெறும் வார்த்தை ஜாலங்களும் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் வெளியிடப்பட்டு வருவதையும் நாம் அறிவோம்.
இது தொடர்பாக “கல்முனைக்கானமக்கள்செயட்பாட்டுச் சபையின்” (PACK Sri Lanka) தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். ஏ. கலீலுர் ரஹுமான், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில் வணிபத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் உடனடி கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, அமைச்சர் இவ்விரு நிறுவனங்களும் தொடர்பான அமைச்சர்களை தொடர்புகொண்டு பேசியதோடு இரு வேறு கடிதங்களும் பெப்ரவரி 10, 2016 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இதன்போது சம்மந்தப்பட்ட அமைச்சர்களோடு தொடர்புகொண்டு பேசிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேவை உணரப்படுமிடத்து அம்பாறை மாவட்ட சிங்கள மக்களுக்காக வேறாக இந்நிறுவனங்களை மேலதிகமாக அம்பறையில் நிருமாணித்துக் கொள்ள எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் காலாகாலமாக இவ்விரு நிறுவனங்களும் இயங்கி வருகின்ற கல்முனை பிராந்தியத்தில் இருந்து நகர்த்தப் படுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மிகத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு NAITA தொழில் பயிற்ச்சி நிருவனத்திற்காக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக இருந்த சுனாமிக்குப் பிந்திய காலத்தில் சாய்ந்தமருது சுனாமி வீட்டுத்தொகுதிக்கு அருகாமையில் ஒதுக்கப்பட்டுள்ள சுமார் ஒரு ஏக்கர் நிலபரப்பில் நிரந்தர கட்டிடம் ஒன்றை கட்டித்தருமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும், மேலும் எதிர்வருகின்ற அமைச்சரவை கூட்டத்தில் இவிடயங்கள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களோடும் சமந்தப்பட்ட அமைச்சர்களோடும் நேரடியாகப் பேசி இந்நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கியவாறே கல்முனயில் இயங்குவதற்கான உத்தரவாதத்தை பெறுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கலீலுர் றஹுமான், மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் பிரயத்தனத்தால் இற்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வெளிநாடு செல்லும் இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காகவென இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை நிறுவினார் என்றும் அம்பாறை மாவட்ட அரச காரியாலயங்கள் மாவட்டம் பூராகவும் பரவலாக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில் குறிப்பாக உத்தேச கல்முனை கரையோர மாவட்ட முகவெற்றிலையான கல்முனை மாநகரில் அவைகள் அமைய வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் துரதிஷ்ட வசமாக இன்று மறைந்த தலைவர் அவர்கள் நிர்மாணித்த கட்சியின் பெயரை வைத்து காலாகாலமாக அரியாசனம் ஏறிவருகின்ற அம்பாறை மாவட்ட அரசியல்தலைமைகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக இன்றைய இரண்டு பிரதியமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் உள்ளிட்டஎனையோருமாக இந்த இரண்டு நிறுவனங்களையும் கோட்டை விட்டது போன்றல்லாது, மறைந்த தலைவருக்குப் பிந்திய பதினைந்து வருடமாககடைப்பிடித்து வருகின்ற நீண்ட தூக்கத்தை கலைத்து இனியாவது தங்களுக்கு வாக்களித்த மக்களின் அபிவிருத்தி மற்றும் அபிலாசைகள் தொடர்பாககடப்பாட்டுடன்கூடியகரிசனை செலுத்த முன்வரவேண்டும்.
கரையோர மக்களால் இவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவம் என்ற அமானிதத்தை சரிவர பாதுகாத்து, வெறும் பாராட்டு நிகழ்வுகளிலும், களியாட்ட நிகழ்வுகளிலும் மற்றும் கட்சி மாநாடுகளிலும் காலம் கடத்தாது நாளாந்தம் கஷ்டப்பட்டு வாழ்கின்ற இம்மக்களின் செழுமைக்காகவும் உத்தேச கல்முனை கரையோர மாவட்ட வலிமைக்காகவும் இறையச்சதுடனும் வினைத்திறனுடனும் செயற்பட முன்வரவேண்டும்.
இது தவிர கரையோரப் பிராந்திய முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளை “அரும்பாடுபட்டு” அம்பாறை தொகுதி பச்சை நிறக் கட்சியின் சிங்கள வேட்பாளர்களுக்கு பெற்றுக் கொடுத்து பாராளுமன்றம் அனுப்பிய கல்முனை நகர்வாழ் வேட்பாளர் அவர்கள் இந்த நிறுவனங்களின் நகர்வு தொடர்பாக தனது பொறுப்புக் கூறும் கடப்பாட்டை மறந்து வாய் மூடிமௌனமாக பார்த்துக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளதுடன் இவரது அரசியல்ஆளுமை தொடர்பில் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை உருவாக்கி இருகிறது.
மறைந்த தலைவருக்குப் பிந்திய பதினைந்து வருடமாக வறண்டு போய்க்கிடக்கும் இந்த மண்ணின் வளர்ச்சிக்காகவும் ஆயிரம் கனவுகளோடு தேர்தல் காலங்களில் வாக்களித்து விட்டு ஏமாந்து காத்துக் கிடக்கும் அப்பாவி மக்களின் முகமலர்ச்சிக்காகவும் இப்பிராந்திய மக்களால் அடையாளப் படுத்தப் பட்டுள்ள எந்த வகையிலும் புறக்கணிக்கப்பட முடியாத அபிவிருத்தி மற்றும் அபிலாசைகள் போன்ற நூற்றுகணக்கான அடைவுகளை எட்டுவதற்காக வேண்டி எமக்கிடையில் கணப்படுகின்ற சகல அரசியல் சமூக பேதங்களையும் மறந்து இந்த பிராந்தியத்தின் சமூக அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்று பட்டுச் செயற்படதயாராக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.