வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின் சமூக அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக தமிழ் முற்போக்கு கூட்டணியினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனை வரைபு விசேட அறிவோர் குழுவின் குழுவின் ஆரம்ப கட்ட பணிகள் பூர்த்தியாகிவிட்டன.
இந்த குழு தயாரித்துள்ள வரைபு, கூட்டணியின் செயற்குழுவில் பரிசீலிக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவையில் முன் வைக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறிதாவது,
நமது கூட்டணியினால் பதினாறு அங்கத்தவர்களை கொண்ட அறிவோர் குழு கடந்த மாதம் நியமிக்கப்பட்டது. இக்குழுவின் தவிசாளராக சமூக ஆய்வாளர் பி. முத்துலிங்கம், பேராசிரியர் எம். சின்னதம்பி, பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் டி. தனராஜ், பேராசிரியர் மூக்கையா,கலாநிதி எஸ். சந்திரபோஸ், விரிவுரையாளர் எஸ். விஜயசந்திரன், விரிவுரையாளர் கௌரி பழனியப்பன், சிரேஷ்ட அரச பணியாளர் எம். வாமதேவன், ஆய்வாளர் கௌதம் பாலசந்திரன்,விரிவுரையாளர் உமாதேவி துரைராஜ், தொழில் அதிபர் சந்திரா சாப்டர், சமூக ஆய்வாளர் ரமேஷ் நந்தகுமார், முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, கூட்டணி பொது செயலாளர் அன்டன் லோரன்ஸ், உப செயலாளர் சண். பிரபாகரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின், குறிப்பாக சமீபத்து இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் சமூக அரசியல் அபிலாஷைகளை ஆய்வு செய்து உரிய பிரேரணைகள் அடங்கிய வரைபை தயாரித்து தரும் பணி இந்த குழுவுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த பணி பூர்த்தியாகி உள்ளதாக குழுவின் தவிசாளர் பெ. முத்துலிங்கம் எனக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் இது கூட்டணியின் செயற்குழுவின் பரிசீலனைக்கு விரைவில் சமர்பிக்கப்படும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய அமைப்புகளின் கோரிக்கைகளுடன் எமது பிரேரணைகள் வாழ்நிலைமைகள் மற்றும் தளங்களுக்கு ஏற்ப வேறுபடலாம்.
ஆனால், இந்நாட்டின் அரசியல் அதிகார பகிர்வில் உரிய பங்கை நாமும் எதிர்பார்க்கின்றோம் என்பதை நாடு அறிந்துகொள்ளும் வகையில் எமது பிரேரணைகள் அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன். அத்துடன் நம் வரைபு தொடர்பாக சகோதார தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள கட்சிகளுடனும் கலந்துரையாட உத்தேசித்துள்ளோம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகார சபை, 25,000 பேருக்கு ஒரு பிரதேச சபை, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு, மத்திய-மேற்கு-ஊவா-சப்ரகமுவ மாகாணசபைகளின் ஐந்து பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரு அமைச்சு பொறுப்பு ஒதுக்கீட்டு கட்டாயம், பாராளுமன்றத்தில் இரண்டாம் சபை, சமஷ்டி-ஒற்றையாட்சி சொற்பிரயோகங்களை தவிர்த்து பூரண அதிகார பகிர்வு அம்சங்களை கொண்ட அரசியல் முறைமை, மதசார்பின்மை, தோட்ட தொழிலாளர் உட்பட நாட்டின் அனைத்து பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் விசேட வளர்ச்சி ஒதுக்கீடுகள் ஆகியவை உட்பட்ட பல்வேறு அம்சங்கள் எமது ஆலோசனைகளின் போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
இவை பற்றிய இறுதி முடிவுகள் செயற்குழுவில் எடுக்கப்பட்டு, அவை உரிய தளத்தில் சமர்பிக்கப்படும்.