“பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்” எனும் தலைப்பில் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் தென்னிலங்கையில் இருந்து வடக்கு நோக்கி பயணித்த ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் கிளிநொச்சி ஊடகவியலாளர்களை இன்று பிற்பகல் மூன்று மணிக்கு சந்தித்துள்ளனர்.
புகையிரதம் மூலம் கிளிநொச்சிக்கு வருகை தந்த அமைச்சர் உட்பட ஊடகவியலாளர்களை கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வரவேற்கப்பட்டதோடு, கிளிநொச்சி ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி, செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாவட்ட ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்குகொண்டு சென்றனர்.
குறிப்பாக யுத்தத்தின் நேரடியான பாதிப்புக்களை அதிகம் சுமந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு ஊடகவியலாளர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை ரீதியிலான மேம்பாட்டுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஊடகவியலாளர்களுக்கு என அரசினால் அறிவிக்கப்படுகின்ற உதவி திட்டங்களில் மேற்படி மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுகொள்ளப்பட்டதோடு, கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பதிலளித்த ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக பிரதேச ஊடகவியலாளர்களுக்கான தகவல் திணைக்களத்தின் ஊடக அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அதனைப்பெற்றுக்கொள்வதற்கு தான் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 வீடுகள் என்ற அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, நல்லிணக்க நோக்கில் தென்னிலங்கை கலாச்சார உணவுவகைளும் கிளிநொச்சி ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.