மலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு 10.03.2016 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு இடம்பெறவிருக்கிறது.
கடந்த காலங்களில் மலையக பெருந்தோட்டப்புறங்களில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் சமச்சீரான அபிவிருத்திப் பணிகள் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை.
அபிவிருத்திப்பணிகளை சரியான விதத்தில் முன்னெடுப்பதற்காக கடந்த காலங்களில் ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்ட நிலையத்தின் அனுசரணையுடன் பத்தாண்டு திட்டம் வரையப்பட்டிருந்தாலும் அது முன்னெடுக்கப்படவில்லை.
நல்லாட்சிக்கான அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பழனி திகாம்பரம் அவர்கள் கிடப்பில் போடப்பட்ட பத்தாண்டு திட்டத்தினை ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்ட நிலையத்துடன் இணைந்து மீளாய்வு செய்து நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
அவரது தலைமையில் அதற்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டு இருப்பிடம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலாசாரம் என அனைத்து துறைசரர்ந்து வௌ;வேறாக மாவட்ட பிரதேச மட்டங்களில் கலந்துரையாடல்கள் முன்மொழிவுகள் இடம்பெற்று பத்தாண்டு திட்டம் தயாரிக்கப்பட்டது.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது.
பத்தாண்டு திட்டத்தினை ஐந்தாண்டு திட்டமாக வரையறை செய்யுமாறு எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த ஆலோசனைக்கு அமைய இத்திட்டம் ஐந்தாண்டு திட்டமாக வரையறை செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்டு பிரதமர் முன்னிலையில் 10.03.2016 தினம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.