ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
அரசியல் அமைப்பு சட்டமாற்றம் பாகம் - 8 - வை.எல்.எஸ்.ஹமீட்
நாம் இது வரை ஜனாதிபதி ஆட்சி முறையின் சாதகத் தன்மை, தொகுதிமுறை தேர்தலில் உள்ள பாதகங்கள், விகிதாசார தேர்தல் முறையில் உள்ள சாதகங்கள் தொடர்பாக பார்த்தோம். தேர்தல் சீர்திருத்தத்தை பொறுத்தவரை ஆட்சியாளர்கள் முன் மொழியக் கூடிய சாத்தியமான முறைகள், நாம் முவைக்க கூடிய மாற்று யோசனைகள் தொடர்பாக இன்ஷா அல்லாஹ் அதிகார பங்கீடு தொடர்பாக ஆராய்ந்த பின்னர் பார்ப்போம்.
அதிகாரப்பங்கீட்டை பொறுத்தவரை எங்களுக்கு முன்னால் உள்ள கேள்விகள்...
01- முஸ்லிம்களை பொறுத்தவரை அதிகார பங்கீடு சாதகமா அல்லது பாதகமா?
02- பாதகமானால் மாற்று தீர்வு உண்டா? அவை எவை?
03- சாதகமானால் அது அதிகப்பட்ச அதிகாரப் பங்கீடா? அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பங்கீடா?
04- சமஷ்ட்டி ஆட்சி சாதகாமா அல்லது பாதகமா?
05- தலைப்பை `ஒற்றை ஆட்சி` என்று போட்டு விட்டு விடயதானங்களை சமஷ்ட்டியாக உள்வாங்கப்படுவதை நாங்கள் எவ்வாறு பார்க்கின்றோம்?
06- வடகிழக்கு இணைப்பு சாதகமா அல்லது பாதகமா?
07- தனி அலகு சாத்தியமா? அது சாதியமானால்? பாதகமா? அல்லது சாதகமா?
08- அதிகாரப்பகிர்வின் விடயங்களில் எவ்வகையான விடயங்கள் மத்தியிடம் இருக்க வேண்டும் ? எவ்வகையான விடயங்கள் மாகாணத்திடம் இருக்க வேண்டும்? என்பதில் எமது நிலைப்பாடு என்ன?
09- குறிப்பாக பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படுவதில் எமது நிலைப்பாடு என்ன?
10- ஆளுனரின் அதிகாரம் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன?
11- தமது சுய நிர்ணய உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று சம்பந்தன் ஐயா அடிக்கடி கூறுகின்றார். சுய நிர்ணய உரிமை என்றால் என்ன? அது அவர் கோருவது போல் அங்கீகரிக்கப்பட்டால் அது வடகிழக்கு முஸ்லிம்கள் மீது செலுத்தக் கூடிய தாக்கம் என்ன?
12- நாம் ஒருமித்து ஒரு தீர்வை முன்வைத்து அது சில வேளை அரசினால் ஏற்றுக்கொள்ளப்படாத விடத்து எமது அதிகுறைந்த நிலைப்பாடு ( FallBack Option) ஒன்று தயாரிப்பதில் நமது நிலைப்பாடு என்ன?
13- நாம் நமக்குரிய மேற்கூறிய வகையிலான நிலைப்பாடை தயாரித்து ஆட்சியாளர் முன்வைத்து அதனை உள்வாங்கும் விதத்தில் (pro active) ஆக செயற்பட்டப்போகின்றோமா? அல்லது ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் முடித்து ஒரு வரைபை முன்வைக்கும் பொழுது அப்பொழுது மட்டும் குரல் கொடுக்கின்றவர்களாக (reactive) ஆக செயற்படப்போகின்றோமா?
14- அவ்வாறு நாங்கள் pro achive ஆக இருக்க விரும்பினால் அரசியல், சமூக அமைப்புக்கள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து அதை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சந்தை படுத்த வேண்டியது அவசியமில்லையா?
15- அல்லது காண விழையப்படுகின்ற அரசியல் தீர்வு விடையத்தில் சர்வதேசத்தின் பங்கு இல்லை என்பது எமது நிலைப்பாடா?
16- அவ்வாறு சந்தைப்படுத்துவதற்கு ஒரு திட்டம் தேவையில்லையா ?என்பனவாகும்.
இக்கேள்விகள் தொடர்பாக இன்ஷா அல்லாஹ் சில தெளிவுகளை ஏற்படுத்த இத்தொடர் கட்டுரை முயற்சிக்கின்றது. இந்நோக்கம் வெற்றிபெற எல்லம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
அதிகார பங்கீடு......................
அதிகராப் பங்கீடு தொடர்பாக பேசும் பொழுது யாருடைய அதிகாரத்தினை பங்கிடுவது ; என்ற கேள்வி எழுகின்றது. பதில் மத்திய அரசினுடைய அதிகாரம் என்றால் ,அரசினுடைய அதிகாரம் என்ன? அதற்கு முன் 'அரசு' என்றால் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன.
இவற்றிற்குரிய விடை-
மூன்று துறைகள் சேர்ந்தது அரசு எனப்படும்
அவைகள்
01- சட்டவாக்கத் துறை
02- நிறைவேற்றுத் துறை
03- நீதித் துறை
இம்மூன்று துறைகளும் அதிகாரம் உள்ள துறைகளாகும்.இம்மூன்று துறைகளையும் சேர்த்து அரசு என அழைக்கப்படும் பொழுது இம்மூன்று துறைகளுக்குமுரிய அதிகாரங்களை சேர்த்து அரச அதிகாரம் என அழைக்கப்படும். எனவே அரச அதிகாரத்தினை பங்கிடுவது எனும் பொழுது இம்மூன்று துறைகளின் அதிகாரங்களை பங்கிடுவதினை குறிக்கும். ஆனால் எல்லா கட்டங்களிலும் இம்மூன்று துறைகளினதும் அதிகாரங்களை ஒன்றாக பங்கிடுவதில்லை.
சிலநேரம் ஒரு துறையினுடைய அதிகாரம் மட்டும் பங்கிடப்படும். சில நேரங்களில் இரண்டு துறைகளின் அதிகாரங்களும், சில நேரங்களில் இம்மூன்று துறைகளின் அதிகாரங்களும் பங்கிடப்படும்.
இவற்றில் சில துறைகளின் அதிகாரங்களை உபவிரிவுகளாக பிரித்து அந்த உப பிரிவுகளை மாத்திரம் பங்கிடுவதும் இந்த அதிகார பங்கீட்டில் உள்ளடக்கப்படும். அதாவது சட்டவாக்கத் துறை அதிகாரத்தினை சட்டவாக்க அதிகாரம் (power of lagislation) உப சட்டவாக்க அதிகாரம்.(power of subsidiary legislation) எனப் பிரிக்கப்படும். இந்த உப சட்டவாக்க அதிகாரத்திலும் படித்தரங்கள் இருக்கின்றன. உபவிதிகள் (By-laws) ஆக்குகின்ற அதிகாரமும் இவற்றில் அடங்கும்.
அதே போன்று நிறைவேற்று துறை அதிகாரத்தினை (Exacutive Power) நிறைவேற்றுத்துறை அதிகாரம். மற்றும் நிருவாக அதிகாரம் (Administrative Power) எனப் பிரிக்கப்படும். நீதிதுறை அதிகாரம் இவ்வாறு பிரிக்கப்படுவதில்லை.
எந்தெந்த துறையின் அதிகாரங்கள் பங்கிடப்படுகின்றன.அவை எவ்வளவு தூரத்திற்கு அல்லது அவற்றின் உப பிரிவுகளின் எந்த மட்டம் வரை பங்கிடப்படுகின்றன; என்பவற்றை பொறுத்து அவற்றின் பெயர்களும் தன்மைகளும் மாறுபடுகின்றன.
பொதுவாக உலகில் பின்வரும் வகையான அதிகார பங்கீடுகள் காணப்படுகின்றன.
01- Division of power அதிகார பிரிப்பு/ வேறாக்கம்
02- Devolution of power அதிகார பகிர்வு
03- Power of local govermennt உள்ளூராட்சி அதிகாரம்
04- decentralization of power பன்முகப்படுத்தப்பட்ட அதிகார பரவலாக்கம்
05- de concentration of power அதிகாரப் பரவலாக்கம்/ அதிகார செறிவு நீக்கம்
(முடிந்தளவு ஆங்கிலப்பதங்களோடு பொருந்தக் கூடிய, ஆங்கிலப் பதங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய தமிழ் பதங்கள் தரப்படுகின்றன. ஆனாலும் இவற்றின் சரியான பதங்களை ஆங்கில பதங்களை கொண்டு அடையாளம் காண்பது சிறந்தது.)
மேற்கூறப்பட்ட அதிகாரங்களை இரண்டு பிரதான பிரிவுகளாக பிரிக்கலாம்........
01- கிடையான அதிகார பங்கீடு (Horizontal Distribution of power)
02- செங்குத்தான அதிகார பங்கீடு( Vertical Distribution of power)
முதலாவது பிரிவான கிடையான பகிர்வின் கீழ், decentralization of power (பன்முகப்படுத்தப்பட்ட அதிகார பரவலாக்கம்) மற்றும் de concentration of power (அதிகார பரவலாக்கம் )என்பன உள்ளடங்கும்.
இரண்டாவது பிரிவான செங்குத்தான அதிகார பங்கீட்டின் கீழ்
01- Division of power அதிகார பிரிப்பு
02- Devolution of power அதிகார பகிர்வு
03- Power of local goverment உள்ளூராட்சி அதிகாரம் ஆகியன உள்ளடங்கும்.
இக்கட்டுரை தொடரின் பிரதான இலக்கு செங்குத்தான அதிகார பங்கீட்டைப்பற்றி, குறிப்பாக Division of power (அதிகாரப்பிரிப்பு), Devolution of power (அதிகாரப்பகிர்வு )ஆகியவற்றை ஆராய்வதாகும். தெளிவிற்காக ஏனையவற்றை மேலோட்டமாக பார்த்துவிட்டு குறித்த இரண்டு பிரிவுகளையும் ஆழமாக ஆராயலாம். ஏனெனில் இவை தொடர்பான சிறிய தெளிவு ஏனைய இரண்டையும் விரிவாக பார்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
செங்குத்தான மற்றும் கிடையான அதிகார பங்கீடுகளுக்கிடையான அடிப்படை வித்தியாசம் என்னவெனில், செங்குத்தான அதிகார பங்கீடு பிராந்தியங்கள் (territory) குறித்தான அதிகார பங்கீடாக இருக்கின்ற அதே வேளை கிடையான அதிகாரப் பங்கீடு நிர்வாகத்தை இலகுவாக்க, நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்களை பிரித்து கீழ் மட்டத்திற்கு வழங்குவதாகும்.
De concentration of power (அதிகார பரவலாக்கம்/ செறிவு நீக்கம் )
இங்கு நிறைவேற்று அதிகாரத்தின் (Executive power ) ஒரு உப பிரிவான நிர்வாக அதிகாரம் administrative power நாட்டின் நாலா பகுதிகளிலுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்றது.இறுதி பொறுப்புகூறல் அத்திணைக்கள /நிறுவன தலைவருடைய கடமையாகும்.
இவ்வாறு நிர்வாக அதிகாரம் பகிர்ந்தளிக்கபடுகின்ற பிரதேச நிர்வாகம் அப்பிரதேசத்தினை சேர்ந்த எந்தவொரு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபைக்கும் பொறுப்புகூற வேண்டிய கடப்பாடு இல்லை. மாறாக மத்திய ஆட்சிக்கே பதில் சொல்ல கடமைபட்டவர்கள்.
இவாறான கட்டமைப்புக்கள் விஷேட சட்டங்கள் எதன் முலமும் உருவாக்கப்படுவதில்லை. மாறாக நிறைவேற்று /நிர்வாக அதிகாரங்களை கொண்டே உருவாக்கப்படுகின்றன.
இங்கு நிறைவேற்று அதிகாரத்திற்கும் (Executive power) நிர்வாக அதிகாரத்திற்கும் (administrative power) இடையில் உள்ள வித்தியாசத்தினை புரிந்து கொள்ள வேண்டும்.கொள்கை தீர்மானம் (policy decisions )எடுக்கின்ற அதிகாரம் நிறைவெற்று துறையாகும். அக்கொள்கை தீர்மானத்தினை அமுல்படுத்துகின்ற பொறுப்பு நிர்வாகத்துறைக்கு உரியது.
இவ்வகையான அதிகார பரவலாக்கம் (de concentration of power) இற்கான உதரணமாக அரசாங்க அதிபர் காரியாலையம், காணி பதிவாளர் காரியாலையம் போன்றவற்றை குறிப்பிடலாம்.
Decentralization of power (பன்முகப்படுத்தப்பட்ட அதிகார பகிர்வு).......
இதன் பிரதான அம்சங்கள்..
இங்கு நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்கள் பங்கிடப்படுகின்றன. நிறைவேற்று அதிகாரம் என்கின்ற பொழுது பாரிய கொள்கை தீர்மானம் (major policy decisions) எடுக்கின்ற அதிகாரமல்ல. மாறாக சிறிய கொள்கை தீர்மானம் ( minor policy decisions ) எடுக்கின்ற அதிகாரம் மற்றும் நிர்வாக அதிகாரம் வழங்கப்படும்.
இந்த வகை அதிகாரத்தினை பயன் படுத்துபவர்களும் தமது செயற்பாடுகள் தொடர்பாக மத்திய அரசிற்கு பதில் கூற கடமை பட்டவர்களே. இவ்வதிகார கட்டமைப்பில் சில வேளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபை இருக்கலாம்.( அவ்வாறு இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை) ஆனால் இவ்வாறான சபைகள் ஆலோசனைகள் வழங்குகின்ற அல்லது விடயதானங்களை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுகின்ற பணிகளை தவிர நிதியை சுயமாக பெற்றுக்கொள்ளும் விடையத்திலோ அல்லது ஏனைய விடயங்களிலோ குறிப்பிடத்தக்க அதிகாரமில்லை.
சில நேரங்களில் சிறிய சட்டவாக்க அதிகாரம் (marginal legislative power) குறிப்பாக உபவிதிகளை ஆக்குகின்ற விடயங்களில் அதிகாரம் வழங்கப்படலாம். அறிஞர்கள் 1980ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபையை (District Development Council )ஐ இதற்கு உதாரணமாக குறிப்பிடுகின்றார்கள்.
குறிப்பு 1 மாவட்ட அபிவிருத்தி சபை பாராளுமன்ற சட்டத்தினால் உருவாக்கப் பட்டது.
குறிப்பு-2 மாவட்ட அபிவிருத்தி சபையும் பிராந்தியங்கள் தொடர்பானது தானே! ஏன் அதனை செங்குத்தான அதிகாரப் பகிர்வின் கீழ் கொண்டு வரமுடியாது; என்ற ஒரு கேள்வி எழலாம் . வெளிப்படையில் அவ்வாறு தோற்றினாலும் மாவட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரமும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அச்சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள செய்யப் பட்டமையுமே அதனை கிடையான பங்கீட்டின் கீழ் கொண்டுவரக் காரணம் .
உள்ளூராட்சி அதிகாரம்( Power of local government )
நாம் ஏற்கனவே பார்த்த இரண்டு வகையும் கிடையான அதிகார பகிர்வாகும். உள்ளூராட்சி அதிகாரம் என்பது செங்குத்தான அதிகார பகிர்வாகும்.
இதன் பிரதான அம்சங்கள்....
• பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இது உருவாக்கப்படுகின்றது.
• அதிகாரம், பிரதேசங்களுக்கு வழங்கப்படுகின்றது. ( territorial distribution of power)
•ஒரு சிறிய அளவு சுய ஆட்சி (self government)தன்மையை வெளிப்படுத்துகின்றது.
• மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபையினை கட்டாயமாக கொண்டது.
• அச்சபை மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டது.
• முன்கூறிய இரு வகையைப்போன்று மத்திய அரசாங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டியதாக இல்லாவிட்டாலும் மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தக் கூடியது.
• அதிகார பகிர்வு உள்ள நாடுகளில் சில வேளைகளில் பிராந்திய அலகுகளால் கட்டுப்படுத்தப் படலாம்.
• மத்திய அரசாங்கம் விரும்பும் போது உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களை சுயமாக மீளப்பெறலாம் அல்லது மாற்றலாம். அதிகார பகிர்வு உள்ள நாடுகளில் (devolution or division of power) அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரத்தின் தன்மையை பொறுத்து சுயமாக என்ற பதத்தில் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.
• தங்களுக்குறிய நிதியை பெற்றுக்கொள்வதில் ஓரளவு சுதந்திரமும் அதிகாகாரமும் இருக்கின்றது. இருந்தாலும் மத்திய அல்லது பிராந்திய அரசுகளின் நிதியிலும் கணிசமான அளவு தங்கியிருக்கின்றது.
• அதே நேரம் சில தற்துணிவு அதிகாரங்களும் இருக்கின்றன.
• சட்டவாக்க அதிகாரத்தின் (உப விதிகளை உருவாக்க கூடிய அதிகாரம் By laws )ஒரு சிறு பகுதியும் நிறை வேற்று அதிகாகாரத்தின் சிறு பகுதியும் வழங்கப்படுகின்றது.
• அவர்களுக்கு வழங்கபடும் உப விதிகளை ஆக்கக்கூடிய சட்டவாக்க அதிகாரம் மத்திய அல்லது மாகாண அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குட்பட்டது.
மேற்படி மூன்று வகையான அதிகார பகிர்வுகளையும் பார்த்தால் ஒன்றில் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு சிறுபகுதி அல்லது நிறைவேற்று மற்றும் சட்டவாக்க அதிகாரத்தின் ஒரு சிறு பகுதி ஆகியனதான் இங்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. ஒரு விடயத்திலாவது முழுமையான சட்டவாக்க அதிகாரமோ அல்லது நிறைவேற்று அதிகாரமோ வழங்கப்படுவதில்லை என்பதனை கவனிக்கலாம்.
மறுபுறத்தில் இம்மூன்று வகையான அதிகார பங்கீடும் ஒன்றில் சாதாரண சட்டத்தின் மூலம் அல்லது நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரத்தின் மூலமே செய்யப்படுகின்றன.இவற்றில் எதுவும் அரசியல் அமைப்பு சட்டத்தினூடாக செய்யப்படுவதில்லை.
அதே நேரம் நாங்கள் ஆழமாக பார்க்க இருக்கின்ற இருவகை அதிகார பங்கீடும் அரசியல் அமைப்பு சட்டத்தினூடாக வழங்கப்படுபவையாகும்.
குறிப்பு:- உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் சில நாடுகளில் அரசியல் அமைப்பு சட்டத்தினால் அவரையறை செய்யப்படுகின்றன. இலங்கையிலும் அவ்வாறு அரசியல் அமைப்பு சட்டத்தினால் வரையறை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருக்கின்றன.