‘‘French Corner’ எனது முதல் காட்சியறை. பதுளையில் இருந்து வந்து எனது தங்கை, மைத்துனர் ஆகியோருடன் இணைந்து அந்தப் பெயரில் புதியதொரு வியாபாரத்தை ஆரம்பித்தேன். ஆண் – பெண் – சிறுவர் என சகலருக்கும் ஏதாவதொரு பெஷன் வகையறாக்கள் அதில் இருந்தன. 1992 இல் இருந்து 2005 வரை வியாபாரமானது முன்னேற்றகரமானதாக இருந்தது. அக்காலப்பகுதியில் சில்லறை வணிகத் துறையில் பெஷன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தியது நாமே.
அப்படியாயின் French Corner – NOLIMIT ஆனது எவ்வாறு?
தங்கையும் மைத்துனரும் வியாபாரத்தை என்னிடம் ஒப்படைத்து அவர்களுக்குரிய பணத்தைப் பெற்றுக்கொண்டு விலகிச் சென்றனர். நான் புதிதாக ஆரம்பிப்பதற்கான பெயர் குறித்துச் சிந்தித்தேன். ‘எல்லையற்றது…’ என்ற அர்த்தத்தைக் கொண்டதும் எனது பெயரின் முதலெழுத்துக்களைக் கொண்டதுமான NOLIMIT என்ற பெயரைச் சூட்டினேன்.
NOLIMIT என்பதனுள் உங்களுடைய பெயர் எங்குள்ளது?
NLM என்ற சிவப்பு நிறத்திலான மூன்று எழுத்துக்கள் குறிப்பது ‘நூஹ் லெப்பை முஹம்மட்’ என்ற எனது தந்தையின் குடும்பப் பெயர். எனக்கு எப்பொழுதும் பெயர் உருவாக்குகின்றபோது பெஷனுக்கமைய சிந்திக்கின்ற ஒரு பழக்கம் உள்ளது. கஷ்டப்பட்டு உருவாக்கிய பெயரைப் போலவே, ஒவ்வோர் ஆண்டும் நான் புதிதான ஓரிடத்தை உருவாக்கினேன். எவ்வாறெனில், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ “கம் உதாவ”யை உருவாக்கியதைப் போன்று.
அதிகளவான காட்சியறைகளைக் கொண்ட வலையமைப்பொன்றை உருவாக்கும் கனவு உங்களுக்கு உண்டா?
சனத்தொகை மற்றும் கேள்வி என்பவற்றுக்கமையவே நாம் காட்சியறைகளைத் திறக்கின்றோம். கடன் பெற்று புதிய வியாபாரத்தைத் தொடங்குகின்ற பழக்கம் என்னிடம் இல்லை. பணம் இருந்தால் மாத்திரமே புதிய காட்சியறைகளைத் திறப்போம்.
இந்த நாட்டில் ‘செல்வந்த வர்த்தகர்களுக்குக் கைகொடுக்கவென’ வேண்டியளவு வங்கிகள் உள்ளனவே?
நான் எவரிடமும் கடன்கேட்டுச் செல்வதில்லை. ஒதுக்கீடு கேட்கின்ற அரசியல்வாதிகளின் பின்னால் செல்வதுமில்லை. அவைதான் எனது வாழ்க்கையின் பெறுமானங்கள்.
இந்த வியாபாரத்தை எவ்வளவு மூலதனத்துடன் ஆரம்பித்தீர்கள்?
பதுளையில் ஆரம்பித்தது இரண்டரை இலட்சங்களுடன். தெஹிவளை French Corner ஆரம்பித்தது பத்து இலட்சங்களுடன். அப்போது சகல வகையறாக்களும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தன. விற்பனைக்கேற்பவே நான் கொள்முதல் செய்தேன்.
ஆரம்பகாலத்தில் நாளொன்றுக்கு எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்தீர்கள்?
சில நாட்களில் 12 – 14 மணித்தியாலங்கள் வேலை செய்தேன். கொள்முதல் செய்ததும் நான்தான். விற்பனை செய்ததும் நான்தான். கணக்கு வழக்குகளைப் பார்த்ததும் நானே. மொத்தத்தில் சகல வேலைகளையும் நானே செய்தேன்.
வாழ்க்கையில் பெற்ற மிகப் பெரிய வெற்றி எது?
சிறந்த பிள்ளைகள் ஐவரைப் பெற்றமை. மூத்த மகன் ஹாபிஸ். அவர் இந்த வர்த்தகத்தின் பணிப்பாளர்களுள் ஒருவர். இரண்டாவது மகன் தீதாத். அவரும் பணிப்பாளர்களுள் ஒருவர். இவர்கள் இருவரும் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர். மூன்றாவதும் நான்காவதுமான புதல்வர்கள் மற்றும் இளைய மகள் ஆகியோர் உயர் கல்வியைத் தொடர்கின்றனர். எனது பிள்ளைகள் அனைவரும் சிறந்த முறையில் வளர்க்கப்பட்டுள்ளனர். உண்மையில் நான் வியாபார விடயங்களில் பெரும்பாலான காலத்தைச் செலவிட்ட போது, எனது மனைவி மக்கியா, பிள்ளைகளைச் சிறப்பாக வளர்த்தெடுத்தார். அவர் சிறந்ததொரு தாய் மட்டுமல்ல, சிறந்த முறையில் ஊக்குவிக்கக்கூடிய மனைவியும்தான்.
அப்படியெனில் NOLIMIT குடும்ப வர்த்தகம் ஒன்று?
ஆம். நான், மனைவி மற்றும் பிள்ளைகள் என்போரைக் கொண்ட குடும்ப வணிகம். அவர்கள் வணிகம் பற்றி சிறந்த முறையில் சிந்திக்கின்றனர்.
வாழ்க்கையில் பெற்ற தோல்விகள் எவை?
பதுளையில் இருந்த போது நான் விருந்தகம் ஒன்று நடத்தினேன். அதில் நட்டம் ஏற்பட்டு அதனை மூடிவிட்டேன். அதன் பிறகு ஏஜென்சி ஒன்று தொடங்கி அதுவும் வெற்றியளிக்கவில்லை. சரிவராது என எனக்கு விளங்கினால் அந்த வியாபாரத்தை நான் கைவிட்டு விடுவேன். அதனை நான் தோல்வியாக நினைப்பதில்லை. அதிலிருந்து விடுபடுவது அதனை விட நிம்மதியானதாகும்.
நீங்கள் சவால்களை எதிர்கொள்ள விரும்பும் ஒருவரா?
அனேகமானோர் வேண்டாமென்று கூறியபோதும் கல்கிஸ்ஸயிலுள்ள மயானத்திற்கு எதிரே நான் பெரியதொரு Glitz காட்சியறையைத் திறந்தேன். மயானம் பாழடைந்துள்ளது என்பதற்காக எனது வியாபாரமும் பாழடைந்ததா? இல்லை. அத்தகைய போலியான நம்பிக்கைகள் என்னிடமில்லை. கவர்ச்சிகரமாக முன்வைக்க முடியுமாயின் மயானத்திற்குள்ளே காட்சியறையைத் திறந்தாலும் வாடிக்கையாளர்கள் நாடி வருவர்.
உங்களுடைய பிரதேசம் கொழும்பா?
இல்லை, காத்தான்குடி. பன்னிரண்டு வயதுவரை நான் அங்கேயே கல்விகற்றேன். அதன் பின்னர் சாதாரணதரம் வரை கொழும்பு சாஹிறாக் கல்லூரியில் கற்றேன். பாடசாலை விடுதியில் தங்கியிருந்தேன். விடுமுறை காலங்களில்தான் வீட்டுக்குச் சென்றேன்.
காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு வந்து தனியாக சகலதையும் தாங்கிக்கொள்ளும் பிள்ளையாக இருப்பதற்கு உங்களால் முடிந்ததா?
எந்தவொரு நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்தவர் எனது தாய். சிறு வயதிலும் நான் மனவுறுதி மிக்க ஒரு பிள்ளை. தாய், தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட சிறந்த குணநலன்களும் அந்த மனவுறுதிக்கு மெருகூட்டின. மனிதர்களை மதிப்பதற்கு, தவறின் போது மன்னிப்பதற்கு, நேர்மையாக வாழ்வதற்கு, அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாதிருப்பதற்கு, தீயவர்களிடமிருந்து விலகியிருப்பதற்கு, நல்லவர்களுடன் உறவாடுவதற்கு, வீட்டுக்குச் சென்ற எல்லா நேரங்களிலும் தாயும், தந்தையும் எனக்குச் சொல்லிக்கொடுத்தனர். அடிக்கடி நினைவூட்டினர்.
சிக்கனமாக வாழ்வதற்கு அந்தப் பிள்ளைப் பருவத்தில் உங்களுக்குப் பழக்கம் இருந்ததா?
தந்தைக்கு மட்டக்களப்பில் துணிக்கடை ஒன்று இருந்தது. மீண்டும் செல்கின்ற போது எனது செலவுகளுக்குப் போதியளவு பணம் கிடைத்தது. அதனால் சொல்லுமளவுக்கு பணப் பற்றாக்குறை இருக்கவில்லை. குடும்பத்தில் பிள்ளைகள் எட்டுப் பேர். அவர்கள் அனைவரையும் விடுதியில் தங்கவைத்தே தந்தை கற்பித்திருந்தார்.
பிள்ளை என்ற வகையில் உங்களுக்கு இருந்த கனவு – குறிக்கோள் என்ன?
அவ்வாறு பெரியளவிலான கனவுகள் எவையும் இருக்கவில்லை. ஆனால், வீட்டில் இருந்தபோதும் விடுமுறைக்குச் சென்று வருகின்றபோதும் நான் எப்பொழுதும் தந்தையிடம் கேட்டது ‘எனக்குக் கொண்டுவந்த புதிய விடயங்கள்’ எவை என்றே. அந்தக் காலத்திலும் நான் அழகாக ஆடையணிந்தேன். புதிய விடயங்கள் பற்றி அதிக ஆர்வமும் ஆசையும் இருந்தது. அதனால் குறைந்தது புதிய கைக்கடிகாரம் – செருப்பு போன்றவைசரி எனக்குக் கிடைத்தன.
ஏதேனும் சுட்டித்தனம் புரிந்து அடிவாங்கிய அனுபவம் உண்டா?
நான் றகர் விளையாடினேன். கிரிக்கட் விளையாடினேன். மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் ஈடுபட்டேன். நான் றகர் விளையாடிய அந்த வருடத்தில்தான் சாஹிறாக் கல்லூரி முதன்முறையாக புனித தோமஸ் கல்லூரியைத் தோற்கடித்து வெற்றியீட்டியது. சிறந்த விளையாட்டு வீரரிடத்தில் இருக்க வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் என்னிடத்தில் இருந்தன. அதனால் சண்டை சச்சரவுகளுக்கு நான் போனதுமில்லை. அடிவாங்கியதுமில்லை.
சாதாரணதரப் பரீட்சையானது உங்களது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் தீர்மானித்தது எனக் கூறினால்?
நான் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடையவில்லை. சிறந்த தொழில்கள் எனக்குக் கிடைக்காதென்பதை நான் புரிந்துகொண்டேன். நான் முடிவெடுத்தேன். ஹோட்டல் தொழிலுக்குச் சென்றேன். இல்லாமற்போன ஒன்றுக்காகக் கவலைப்படவேண்டிய தேவை எனக்கில்லை. இருக்கின்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கின்ற முறைதான் எனக்கு முக்கியம்.
உங்களுடைய முயற்சிமிக்க வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு தொலைதூரத்திலுள்ள கிராமத்தின் இளைஞர் யுவதிகள் இந்த நேர்காணலின் பின்னர் NOLIMIT மூலம் வாழ்க்கையை ஆரம்பிக்க எண்ணினால் உதவி செய்வீர்களா?
ஒவ்வொரு மாதமும் நாம் ஆட்சேர்ப்புச் செய்கின்றோம். தூரப் பிரதேசங்களில் இருந்து வருகின்றவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்களையும் உணவுகளையும் வழங்குகின்றோம். கொழும்புக்கு வந்தாலும் தவறான வாழ்க்கையொன்றினுள் விழாமல் இருப்பதற்காகவே நாம் அவ்வாறான பாதுகாப்பை வழங்குகின்றோம். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பதவியுயர்வுகளைப் பெற்று வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கான சிறந்த வழியொன்று அவர்களுக்கு உள்ளது. அதற்கு உற்சாகம், அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி என்பவை மாத்திரமே அவர்களுக்குத் தேவை.
நீங்கள் வாழ்க்கையை வாழ்வது எவ்வாறு?
மனிதன் என்ற அடிப்படையில் நான் சிறப்புடன் வாழ்கின்றேன். உலகம் பூராகவும் செல்கின்றேன். வைத்தியசாலைகளில் நலன்புரிச் செயற்பாடுகள், தலதா பெரஹர அனுசரணை, சிறுவர் மேம்பாட்டுச் செயற்பாடுகள் போன்ற சகல சமயத்தவர்களும் இனத்தவர்களும் மகிழ்ச்சியடைகின்ற வகையில் ஒரு நிறுவனம் என்ற வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். அது எனக்கும் மகிழ்ச்சியளிக்கின்றது.
உங்களுக்கு இயற்கையை இரசிப்பதற்கு நேரம் இருக்கின்றதா?
எனக்கு சீதுவையில் பண்ணை ஒன்று உள்ளது. அங்கு நான் நீண்ட செவிகளையுடைய ஆடுகளையும் ‘அரொவானா’ (Arowanas) வகையைச் சேர்ந்த மீன்களையும் வளர்க்கின்றேன். நான் உயிரினங்களை நேசிப்பவன். அவற்றைப் போஷித்து அவை வளர்கின்ற விதத்தைப் பார்த்து ரசித்து சந்தோஷமடைகின்றேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் அங்கு செல்வேன். பெஷனை நேசிப்பது போலவே செடிகொடிகளையும், உயிரினங்களையும் நான் நேசிக்கின்றேன்.
ஆடையொன்றை விற்றவுடன் நீங்கள் மகிழ்ச்சியடைவது அதன் இலாபத்தை நினைத்தா?
இல்லை. எனது காட்சியறையின் ஆடைகளை இந்த நாட்டிலுள்ள அனைவரும் அணிவதைப் பார்க்கவே நான் விரும்புகின்றேன். வெளிநாடொன்றில் ஒருவர் எனது காட்சியறை ஆடையை அணிந்து செல்வதை நான் கண்டேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
புதிய யோசனைகள் (Ideas) பற்றிய எண்ணங்கள் உங்களை வதைக்கின்றதா?
நான் அடிக்கடி புதியவற்றைத் தேடுகின்றேன். பார்க்கின்றேன். சிந்திக்கின்றேன். தருவிக்கின்றேன். என்னைப்போலவேதான் எனது குழுவினரும். அவர்களது புதிய எண்ணங்களும் கருத்துக்களும் இந்த நிறுவனத்தினுள் செயல் வடிவம் பெறுகின்றன.
முழு நாட்டிற்கும் பெஷனை வழங்கிய நீங்கள், பெஷனாக இல்லையே?
நான் போதியளவு பெஷனாக இருந்த ஒருவன். அவ்வாறு உடுத்திய பெறுமதிமிக்க கழுத்துப்பட்டி, மேலங்கி, – சேர்ட் ,- காற்சட்டை – சப்பாத்து என்பன வேண்டியளவுக்கு இருந்தன. கடந்த நாட்களில் சுமார் 5000 அளவிலான எனது பெஷன் புகைப்படங்களை நான் அழித்துவிட்டேன். எட்டு வருடங்களாக நான் அணிவது எனது இந்த எளிமையான உடையையே. இந்த ஆடையில் அதிகளவான ஒழுக்கம் இருக்கின்றது. நான் தற்பொழுது விழாக்களில் கலந்து கொள்வதும் இந்த ஆடையுடன்தான். இதுதான் எனது அடையாளம்.
இலகுவானதெனக் கருதியா இந்த ஆடைக்கு மாறினீர்கள்?
இப்போதும் நான் நினைத்த மாத்திரத்தில் பேரூந்தில் செல்கின்றேன். நினைத்த மாத்திரத்தில் முச்சக்கர வண்டியிலும் செல்கின்றேன். எவரும் என்னை அடையாளம் காண்பதில்லை. அது எனக்கு மிகவும் சௌகரியமாக உள்ளது.
உங்களது வாழ்க்கையில் தாங்க முடியாத கஷ்டம் ஏற்பட்ட காலப்பகுதி நினைவுள்ளதா?
இறைவன் எமக்குக் கஷ்டங்களைத் தருவது எம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே. நாம் அவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டும். எனது பாணந்துறைக் காட்சியறை எரிந்து சாம்பலானது. சுமார் 300 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. நான் கவலைப்படுவதால் பயனுள்ளதா? இறைவன் கொடுத்தான். அவனே எடுத்துக்கொண்டான். ஆடையின்றி இந்த உலகத்திற்கு வந்த நான் நிறையவே சம்பாதித்தேன். சில நேரங்களில் அவற்றில் கொஞ்சம் குறைந்தது. அதனால், ஐயோ! எனக்குப் பிரச்சினை அதிகம் என கவலைப்படுவது எதற்கு? அதுதான் வாழ்க்கையின் நியதி. எந்தவொரு கஷ்டகாலத்திலும் நடுநிலையாக இருப்பதுதான் முக்கியம்.
NOLIMIT மற்றும் Glitz என்பன இந்த நாட்டில் இன்னும் எத்தனை வருடங்களுக்கு இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
அதனைத் தீர்மானிப்பது வாடிக்கையாளர்களே. நாம் அவர்களுக்கு பெஷன் பற்றி வழங்குகின்ற ஒரு முற்பகர்வு, வரவேற்பு, பணத்திற்கான பெறுமானம் மற்றும் கவனக்குவிவு ஆகியன தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பவர்கள் வாடிக்கையாளர்களே. எனது பணி கவனக்குவிவைச் (focus) செலுத்துவதே. எனக்கு முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதும் முக்கியமானது கவனக்குவிவுதான்.
தந்தையிடமிருந்து புதல்வர்களுக்குச் செல்கின்ற வர்த்தகத்தினுள் அத்தகைய சிறந்த குணநலன்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுமா?
அதற்காக சரியான நபர்களை, சரியான முறையில் பழக்கப்படுத்திப் பயிற்றுவிப்பது எனது கடமை. Boss என்று ஒருபுறமாக ஒதுங்கியிருக்க என்னால் முடியாது. சிறந்த மனப்பாங்குகளுடன் முன்னோக்கி வருகின்ற அடுத்த சந்ததியொன்று எனக்குத் தென்படுகின்றது என்பதைச் சொல்வதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
நீங்கள் சமயத்தைச் சிறப்பாகப் பின்பற்றி வாழ்பவரா?
ஆம். அவ்வாறு இல்லையெனில் மறுவுலகில் நான் இறைவன் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டி ஏற்படும். அதனால் வியாபாரம் செய்கின்ற போதும் நாம் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் இருக்கின்றன. நாம் சம்பாதிக்கின்ற சொத்துக்களில் இருந்து நூற்றுக்கு இரண்டரை வீதம் இந்த சமூகத்திற்கு வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதனால்தான் எமக்கு மீண்டும் அவை கிடைக்கின்றன.
மீண்டும் பெஷனாக ஆடை அணி வதற்கு நினைத்துப் பார்ப்பதில் லையா?
ஒவ்வொரு நாடுகளினதும் ஷொப்பிங் மோல்களுக்குச் சென்று ஆடைகளைத் தொட்டுப் பார்க்க இன்னும் எனக்கு ஆசைதான். ஆனாலும், அவ்வாறு அழகாக அணிந்து இரசித்த வாழ்க்கைக்கு நான் விடை கொடுத்துவிட்டேன்.
தற்போது உங்களுடைய வயது என்ன?
62. உடல் முதுமையடைந்தாலும் பெஷன் பற்றிய எனது எண்ணங்கள் முதுமை யடையவில்லை. அதனால் வயது எனக்கொரு பிரச்சினையல்ல. மென்மேலும் வேலை செய்யவே நான் விரும்புகின்றேன்.
உங்களுக்குள் இருந்த விளையாட்டு வீரன் எங்கே?
சகல விளையாட்டுக்களிலும் ஈடுபட்ட போதிலும் நீச்சலில் ஈடுபட முடியாமற் போய்விட்டது. நான் தற்போதுதான் நீச்சல் கற்றுக்கொண்டிருக்கின்றேன். 62 வயதல்ல, இன்னும் முதுமையடைந்தாலும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்வதற்கே நான் விரும்புகின்றேன். அதாவது என்னுள் அந்த விளையாட்டு வீரன் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றான்.
சொல்லுமளவுக்கு உயரமோ பருமனோ இல்லாத ஒருவர். என்றாலும் நீங்கள் உன்னதமான ஒரு பாத்திரம். முதன் முறையாகத்தானே ஊடகம் ஒன்றில் தோன்றியுள்ளீர்கள்?
ஆம். இந்த 25 வருட காலத்திற்கும் எனது புகைப்படம் ஒன்றேனும் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கவில்லை. அவ்விதம் பிரசுரமாவது நான் விரும்பாத ஒன்று. எனினும் நீங்களும் விடவில்லையே. அதனால் முதன் முறையாக நான் எனது வாழ்க்கை பற்றி ஊடகமொன்றில் கதைத்திருக்கின்றேன். அதிலிருந்து யாரேனும் ஏதேனுமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியு மாக இருந்தால் அதுவே போதுமானது.
நன்றி: சிலுமின + விடிவெள்ளி