பாகிஸ்தான் நாட்டில் 14 வயது சிறுமி ஒருவர் வாலிபர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்ட குற்றத்திற்காக சிறுமியின் தந்தைக்கு 1,200 கிலோ கோதுமை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் Sindh என்ற மாகாணத்தில் உள்ள Umerkot என்ற பகுதியில் தான் இந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே பகுதியில் வசித்து வந்த பெயர் வெளியிடப்படாத 14 வயது சிறுமியை வாலிபர்கள் சிலர் சில தினங்களுக்கு முன்னர் கூட்டாக கற்பழித்துள்ளனர்.
தங்கைக்கு நடந்த கொடூரத்தை கண்டு ஆத்திரம் அடைந்த சகோதரரான குலாம் நபி ஷா என்பவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து சிறுமியை கற்பழித்த வாலிபர்களில் ஒருவரை பொலிசார் கைது செய்தனர். ஆனால், இதற்கு பின்னர் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் குடிமக்களின் சம்பிரதாயப்படி ’jirga’ என்ற வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.
இந்த கற்பழிப்பு குற்றத்தையும் இதே நடைமுறையில் தீர்த்து வைக்க உள்ளூர் பெரியவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தந்தை பேசியபோது, ‘என்னுடைய மகள் கற்பழிக்கப்பட்டது தொடர்பான பொலிஸ் புகாரை திரும்ப பெறுமாரு உள்ளூர்வாசிகள் என்னை கட்டாயப்படுத்தினர்.
இந்த குற்றத்திற்காக எங்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக 1,200 கிலோ கோதுமை வழங்குவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
உள்ளூர்வாசிகளின் இந்த உத்தரவை மீறினால், எங்கள் குடும்பத்துடன் இந்த பகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என மிரட்டியதாக’ அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
jirga என்ற அந்த வழக்கம் உள்ளூர் தலைவரால் பின்பற்றப்படுவதால், அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும், கிராமத்தை விட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தால், அவர் 1,200 கிலோ கோதுமையை இழப்பீடாக பெற்றுக்கொண்டு வழக்கை திரும்ப பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.