எப்.முபாரக்-
திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை நீண்ட காலமாக காதலித்து கூட்டிச் சென்ற சந்தேக நபரான காதலனை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் புதன்கிழமை (20) உத்தரவிட்டார். சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே திருமணம் முடித்து ஒரு குழந்தையின் தந்தை என்பதோடு மனைவியை விட்டு பிரிந்த நிலையிலே பதினைந்து வயதுடைய சிறுமியை காதலித்து ஏமாற்றி மட்டக்களப்பிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டின் இரண்டு நாட்களாக சந்தேக நபர் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை மட்டக்களப்பு பொலிஸார் ஊடாக சந்தேக நபரை செவ்வாய்கிழமை (19)மாலையில் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த சிறுமி சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.