காரைதீவு நிருபர் சகா-
வீடற்ற மக்களுக்காக 2224 வீடுகள் தேவைப்படுகின்ற போதும் எமக்கு இதுவரை 58 வீடுகளுக்கான அனுமதியே அரசஅதிபரனால் வழங்கப்பட்டுள்ளது. மீதி வீடுகளுக்கான அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் உங்களுக்கான வீட்டு பிரச்சினை தீர்த்துவைக்கப்படும் இதற்காக பிரதேச செயலாளரையோ, செயலாக அதிகாரிகளையோ குறைகூறுவதில் எந்தவித்திலும் நியாயம் அற்றது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் அவர்கள் தெரிவித்தார்.
மகிழூர் பிரதேசத்தில் கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட திவிநெகு வங்கிச் சங்கங்களை புனரமைப்பதற்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவிக்கையில்;
எமது பிரதேச செயலக பிரிவில் 45 கிராமசேவையாளர் பிரிவுகள் உள்ளன அவை அனைத்திற்கும் 2016 தகவலின்படி ஒட்டு மொத்தமாக 2224 வீடுகள் தேவைப்படுகின்றது அதற்கான அனுமதியைப் பெறுவதற்காக விபரங்கள் அனைத்தும் அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இருந்தும் எமக்கு இதுவரை 58 வீடுகளுக்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டிருக்கின்றது.
வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைவாக வீடுகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டு அதற்கான வேலைகளும் நிறைவடைந்துள்ளது, அதற்கான அறிக்கைகளும் எம்மிடம் உண்டு, மீதி வீடுகளுக்கான அனுமதி கிடைக்கப்பெறுகின்ற பட்சத்திலையே, உங்களுக்கான வீட்டுபிரச்சினையை என்னால் தீர்த்து வைக்கமுடியும். இதைத்தவிர என்னால் வேறொன்றும் செய்ய முடியாது. இதனை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு இருக்க நீங்கள் ஊடகங்களில் வீடு வழங்கப்படவில்லையென குறை கூறுவதில் எந்விதத்திலும் நியாயம் இல்லை.
திவிநெகும வங்கிகள் ஊடாக 3435 பயனாளிகளுக்கு இதுவரை பதின்மூன்றரைக் கோடி ரூபாவுக்கு மேல் வாழ்வாதாரக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதனை விட வாழ்வாதாரத்திற்கான சுழற்சி நிதிக்கடனாக 217 பயனாளிகளுக்கு 64 லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நுகர்வுக்கடன் 108 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரட்டவீரு வீட்டுக்கடன் 269 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக திவிநெகும வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் மூலம் 4029 பயனாளிக் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். இதற்கா ஒட்டு மொத்தமாக 20 கோடியே 60 லட்சத்தி 6 ஆயிரத்தி 360 ரூபாய் இதுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ் ஆண்டிற்கான வீதிகள், மின்சாரம், குடிநீர் போன்ற உட்கட்டடமைப்பு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிராமராட்சிய வேலைத்திட்டமானது ஒரு கிராமத்திற்கு 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்;பட்டு வேலைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினைப் பொறுத்தவரை அரசாங்க அதிபர், ஏனைய அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட தேவைகளுக்கு அனுமதி வழங்கினால் அதனை சரியாக செய்து முடிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் ஊடகங்கள் செய்தியை வெளியிடும் போது எமது அறிக்கையையும் பெற்றே செய்திகளை வெளியிட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.