வலம்புரி கவிதா வட்டத்தின் 26வது கவியரங்கு கடந்த பௌர்ணமி தினமான 22-03-2016 அன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைனின் தலைமையில் நடைபெற்றது. பாவலர் பஸீல் காரியப்பர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கவிஞரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் கலந்து கொண்டார்.
26வது கவியரங்கு கவிஞர் மட்டக்களப்பு கே. லோகநாதனின் தலைமையில் மிகவும் சுவாரஷியமாக நடைபெற்றது.
சர்வதேச ரீதியாக நடந்த செம்பியன் செல்வன் சிறுகதைப் போட்டியிலும், அவுஸ்திரேலிய ‘அக்கினி குஞ்சு’ இணையதள ஏற்பாட்டில் இடம்பற்ற எஸ்.பொ. நினைவு சிறுகதைப் போட்டியிலும் முதல் பரிசுகளைப் பெற்றுக்கொண்ட வகவ ஸ்தாபக உறுப்பினர் கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி அவர்களுக்கும், கலாசார அலுவல்கள் திணைக்கணத்தினால் நடாத்தப்பட்ட உலக கவிதை தின நிகழ்வில் “காவ்யாபிமானி” வாழ்நாள் சாதனையாளர் பட்டம் பெற்ற பல்கலை வேந்தன் கலைவாதி கலீல் அவர்களுக்கும், உலக கவிதை நிகழ்வில் இலங்கை தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை சிறப்பாக தொகுத்து “மானுடம் பாடும் கவிதைகள்” நூலினை சிறப்பாக வெளிக்கொணர்ந்த கவிஞர்கள் மேமன் கவி, வதிரி சி. ரவீந்திரன் ஆகியோருக்கும் வகவம் தனது பாராட்டினைத் தெரிவித்தது.
எம்மைவிட்டுப் பிரிந்த சாஹித்திய ரத்னா செங்கை ஆழியான், பன்னூலாசிரியர் பி.எம்.புன்னியாமின், மில்லேனியம் ஹுசைன் மௌலானா ஆகியோர் நினைவுக்கூரப்பட்டனர்.
பாவலர் பஸீல் காரியப்பர் அரங்கில் அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள்,
சம்மாந்துறையில் எத்தனை கோடீஸ்வரர்கள் வாழந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பற்றியெல்லாம் நாங்கள் இன்று பேசவில்லை. சாதாரண ஓர் ஆசிரியராக இருந்த அற்புதமான தமிழ்க் கவிஞனைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதுதான் கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கிடைத்த பெரும் வரம். 1986ம் ஆண்டு அளவில் தினகரனிலே அவரது கவிதையொன்று வெளிவந்திருந்தது. “
நெல்வயலுக்குள்ளே புல்லைப் பிடுங்கிவிட்டுப் போகின்ற பெண்ணாளின் கன்னத்தில் வெள்ளிக் காசுகள் போல் தேமல். என்னுள் வேதனையை ஏன் எழுத என்றதுவோ. மருந்தொன்றறிவேன் அம்மரு நீங்கச் செய்திடலாம். அறிந்ததனை சொல்லிவிட ஆவல் மிகச் கொள்ளுகிறேன். மெல்ல வழியிறங்கி மெதுவாக சொல்லுகையில் கொல்லென்று சிரித்தால் குளுமையுடன் தலை நிமிர்ந்து வருத்துவது எங்கள் வயிறே முகத்தேமல் உறுத்தவில்லை காக்கா” என்று அந்தக் கவிதையிலே யதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டினார்.
மிக எளிமையாக ஏழைப் பெண்ணின் பிரச்சினையை மிக அழகாக சொல்லியவர் பாவலர் அவர்கள்.
அவரது கவிதை பாணியே தனி. பாவலரது கவிதை குறித்து ஒரு பார்வை இருக்கிறது. அவரது கவிதைகள் புதுக்கவிதையாகவும் இருக்காது. ஓசைக்கவிதையாகவும் இருக்காது. ஆனால் அது கவிதையாக இருக்கும். இவ் அழகினை பஸீல் கரியப்பரையன்றி வேறு யாரிடமும் நாம் காண முடியாது. பாவலருக்கும் எனக்குமுள்ள நட்புக்கு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் தயாரிப்பாளர் காலஞ்சென்ற எம்.எம். இர்பான் காரணமாக இருந்தார்.
ஆத்மாவின் அலைகள்” அவரது கவிதை தொகுப்பு. அது மீண்டும் வெளியிடப்படவேண்டும். அவரது கவிதைகள் தத்துவம்சார் கவிதைகள்.
பாவலரின் பெயரைச் சொன்னவுடன் உடனே பலருக்கு நினைவுக்கு வருவது “அழகான ஒரு சோடி கண்கள்” எனும் அவரது பிரபல்யமான மெல்லிசைப் பாடலாகும். அது போன்றே தொட்டிலில் ஆடும் குழந்தையயைப் பார்த்து அவர் பாடும் “கயிற்றோசை கேள் மகளே…. “ என்ற பாடல். யாருமே சிந்திக்காத வகையில் “கயிற்றோசை கேள்….” என்று பாடுகிறார். கிழக்கிலங்கையின் வறுமைப்பட்ட முஸ்லிம், தமிழ் பெண்ணின் நிலை பற்றி மிக உணர்வுப்பூர்வமான கவிதை பாடியவர்.
இலங்கையின் சிறப்பான கவிஞர்கள் பட்டியலில் பாவலர் பஸீல் காரியப்பரும் இடம்பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்” என்றார்.
நிகழ்வில பாவலர் பஸீல் காரியப்பர் அவர்களின் மகனான தாரிக் காரியப்பரும் கலந்து கொண்டு தனது தந்தை பற்றிய சில நினைவுகளை பகிர்ந்துகொண்டார். காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களும் பாவலர் பற்றி சில குறிப்புகளைத் தெரிவித்தார்.
கவிஞர் கே. லோகநாதனின் தலைமையில் சிறப்பாக நடந்த கவியரங்கில் கவிஞர்கள் டாக்டர் தாஸிம் அகமது, சாய்ந்தமருது மருதநிலா நியாஸ், வெளிமடை ஜஹாங்கீர், பஸ்லி ஹமீத், ப.க.மகாதேவா, புல்மோடை யாஸிர் எம். அனிபா, காத்தான்குடி மதியன்பன் மஜீத், பிரேம்நாஜ், இளநெஞ்சன் முர்ஷிதீன், ச. தனபாலன், பாணந்துறை நிஸ்வான் அட்டாளச்சேனை ரிஸ்லி சம்சாட், அப்துல் லத்தீப், இப்னு அஸ்மத் ஆகியோர் கவி மழை பொழிந்தனர்.
வீ. ஏ. திருஞானசுந்தரம், உடுவை எஸ். தில்லை நடராஜா, த.மணி, எம்.எஸ்.எம் ஜின்னா, அலி அக்பர், கவிக்கமல், ரவூப் ஹசீர், முஸ்டீன், வெலிப்பன்னை அத்தாஸ், எஸ்.எச்.எம். இத்ரீஸ், சனா எம். யெஹ்யா, எம்.எஸ்.எம்.ராஸிக், ஏ.எம்.எஸ்.உதுமான், எம்.ஐ.எம். அஸ்மி, எஸ்.பரீனா, ரஷீத் எம். ஹாயிஸ், பர்ஷானா ஷாகிர், உவைஸ் ஷரீப், எம்.எச்.எம்.நவ்சர், கே.சிவா பிரதீபன், கலையழகி வரதராணி போன்றோர் சபையை அலங்கரித்தனர்.
ஏப்ரல் மாத கவியரங்கு பத்திரிகை உலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் அரங்கில் நடைபெறும் என்றும், சிறப்பதிதியாக கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி கலந்து கொள்ள, கவியரங்கு வெளிமடை ஜஹாங்கீரின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.