69வருடங்களின் பின் இன்று சுவாமி விபுலானந்தருக்கு மீண்டும் காரைதீவில் திருவுருவச்சிலை திறப்புவிழா!

சிலை திறப்புவிழாவையொட்டிய சிறுகட்டுரை! 21.04.2016.

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாருக்கு இன்று அவர்பிறந்த காரைதீவு மண்ணில் திருவுருவச்சிலை திறந்துவைக்கப்படுகிறது.

அடிகளார் இவ்வவனியில் பிறந்து 124வருடங்களாகின்றன. அவர் பிறந்தது 1892.03.27 இல். 20ஆம் நூற்றாண்டின் ஈடிணையற்ற பேரறிஞர் சுவாமி விபுலாநந்த அடிகளாhர் ஆவார்.

அவரது எல்லையற்ற மேதாவிலாசம் காரணமாக உலகின் பல பாகங்களிலும் அவருக்கு சிலை எழுப்பப்பட்டிருக்கின்றன. அவர் பெயரில் பல பாடசாலைகள் பல அமைப்புகள் இயங்கிவருகின்றன.அவருக்காக பல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பல ஆய்வரங்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன.

அவர் சிவபதமடைந்தது 1947இல். அதன்பிறகு அவருக்கு பரவலாக திருவுருவச்சிலைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

காரைதீவில்...
அடிகளார் பிறந்தது கிழக்கிலங்கையின் பழம்பெரும் காரைதீவு மண்ணில் என்பது பலரும் அறிந்ததே.

அந்த மண்ணில் அவர் சிவபதமடைந்து 22வருடங்களின் பின்னர் அதாவது 1969இல் பிரதானவீதியிலுள்ள விபுலாநந்த பொது நூலகத்தின் முன்றலில் சுவாமியின் திருவுருவச்சிலை டாக்டர் மா.பரசுராமன் தலைமையில் நிறுவப்பட்டது.

இந்தியாவிலிருந்து வருகைதந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரால் அச்சிலை 08.10.1969இல் திறந்துவைக்கப்பட்டது.அப்போது எழுத்தாளர் மா.சற்குணம் எம்.ஏ. தொகுத்த 'அடிகளார் படிவமலர்' எனும் சிலைதிறப்புவிழாமலர் வெளியிட்டுவைக்கப்பட்டது.

அச்சிலை 1990 இனக்கலவரத்தின்போது சில விசமிகளால் சுக்குநூறாக உடைத்தெறியப்பட்டது. அதன்பின்பு 1999 இல் சுவாமி பிறந்த வீட்டிற்கு அருகில் அதாவது மணிமண்டப சூழலில் மற்றுமொரு அழகான சிலை வெ.ஜெயநாதன் தலைமையில்; நிருமாணிக்கப்பட்டது.

அதனை இராமகிருஸ்ணமிசனின் இலங்கைக்கான அப்போதைய தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்த மஹராஜ் 26.06.199இல் திறந்துவைத்தார். அத்தருணம் எழுத்தாளர் வி.ரி.சகாதேவராஜா எம்.எட். தொகுத்த 'அடிகளார் நினைவாலய மலர் 'எனும் சிலைதிறப்புவிழா மலர் வெளியிட்டுவைக்கப்பட்டது.

இவ்விருசிலைகளையும் பழம்பெரும் சிற்பி மட்டக்களப்பு புல்லுமலை நல்லரெத்தினம் அவர்களே செய்திருந்தார்கள்.

இன்று சித்ராபௌர்ணமியன்று..

அடிகளார் சிவபதமடைந்து 69வருடங்களின் பின்னர் இன்று காரைதீவின் பிரதான முற்சந்தியில் அதாவது விபுலாநந்த சதுக்கத்தில் அழகான திருவுருவச்சிலை திறந்துவைக்கப்படுகிறது.

இச்சிலையை இன்று காலை 10.30மணியளவில் இந்துமத அலுவலல்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்துவைக்கவுள்ளார்.

ஆன்மீக அதிதிகளாக இராமகிருஸ்ணமிசன் மட்டு.பொறுப்பாளர் சுவாமி பிரபுபிரேமானந்தா அம்பாறை பௌத்த விகாரையின் விகாராதிபதி வண.ரந்தின்திரிய ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கௌரவ அதிதிகளாக இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி இரா.இராதாகிருஸ்ணன் ஜீ இலங்கை இந்துசம்மேளனத்தலைவர் என்.அருண்காந் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம் த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் ஆகியோருடன் சிறப்பதிதிகள் நட்சத்திரஅதிதிகள் எனப்பலரும் கலந்துகொள்வார்கள்.

சுவாமியின் சிறப்புகள்.

சுவாமி விபுலாநந்த அடிகளார் இலங்கையின் முதலாவது மதுரைத்த தமிழ்ச்சங்கப்பண்டிதராவார். அதேவேளை உலகின் முதலாவது தமிழ்ப்பேராசிரியராவார். இத்தகைய சிறப்புகள் யாருக்கும் கிடைக்கவில்லை.
உலகில் ஆசிரியராக அதிபராக பேராசிரியராக எழுத்தாளராக திறனாய்வாளராக கலைஞராக கவிஞராக மேடைப்பேச்சாளராக மொழிபெயர்ப்பாளராக பத்திரிகையாசிரியராக பல நடிபங்குகளை வகித்தவர்.

இ.கி.மிசனின் 26 பாடசாலைகளுக்கு முகாமையாளராகவிருந்து பரிபாலனம் செய்ததோடு சிவானந்த வித்தியாலயம் போன்ற பாடசாலைகளை ஸ்தாபித்தவர். வண்ணார்பண்ணையிலும் கல்லடியிலும் காரைதீவிலும் சிறுவர் இல்லங்களை ஸ்தாபித்து குடபுலவியனார் கூறிடும் அன்னதானத்தினையும் பாரதியார் கூறிடும் வித்தியாதானத்தினையும் ஒருங்கே அளித்தவர்.

சுவாமியின் பிறப்பில் இனியாவது தெளிவு காண்போம்!

ஓர் ஆண்டு சித்திரையில் தொடங்கி அடுத்த பங்குனியில் நிறைவடைகிறது. நடைமுறையிலுள்ள மன்மத வருடம் பங்குனி 31ஆம் திகதி அதாவது 13.04.2016 முன்னிரவோடு நிறைவுக்கு வர புதிய தமிழ்ஆண்டான துர்முகி வருடம் பிறந்திருக்கின்றது. 

அகிலம் போற்றும் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த கரவருடம் பங்குனித்திங்கள் 16ஆம் நாளுக்கு நேரொத்த ஆங்கிலத்திகதி 27.03.1892 என கணிப்பிடப்படுகிறது. சுவாமியின் தந்தையாhர் பிந்திபதிவுவைத்த காரணத்தினால் பெற்ற பிறப்பத்தாட்சிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு சிலர் சுவாமி 5ஆம் மாதம் 03ஆம் திகதி பிறந்ததாக கூறுவதை முற்றாக மறுக்கின்றேன். 

ஏனெனில் தமிழ்சித்திரைப்புத்தாண்டு பிறப்பது சித்திரை மாதம் 1ஆம் திகதி அதாவது ஏப்ரல் 14ஆம் திகதி. அப்படி 5ஆம் மாதம் எனின் கரவருடத்தில் சுவாமி பிறக்கவில்லை.மாறாக நந்தன வருடத்தில் பிறந்திருக்கவேண்டுமே. எந்த ஒரு இடத்திலும் சுவாமி பிறந்தது கரவருடத்திற்குப்பதிலாக நந்தன வருடம் என்று குறிப்பிட்டிருக்கவில்லை.

எனவே சுவாமி பிறந்தது 27.03.1892இல்தான் என்பது நிருபணமாகிறது. 1892இல்தான் இரகுநாதையர் வாக்கியப்பஞ்சாங்கம் முதன்முதலில் அச்சில்வெளிவந்தது. அதில் சுவாமியின் பிறந்த திகதிக்கு விடைகாணமுடியும். அதன்பிரதி என்னிடமுள்ளது.

எனவே இனியாவது தமிழ்கூறு நல்லுலகம் சுவாமியின் பிறந்த திகதி விடயத்தில் ஒற்றுமை காப்போம்.


இலங்கை எதிர்பார்க்கும் தேசியநல்லிணக்கம்! 

இலங்கையில் கல்விமுறைமை எப்படி அமையவேண்டும்? இனநல்லிணக்கம் தேசியநல்லிணக்கம் எவ்வாறு அமையவேண்டும்? என்பதை இற்றைக்கு 100வருடங்களுக்கு முன்பே ஓரு தீர்க்கதரிசி சொல்லியிருந்தார்.

அவர்தான் அகிலம் போற்றும் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகன் சுவாமி விபுலாநந்த அடிகளார். ஆம் உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி.

அவர் அன்று சொன்னது:
' பலமொழிக்கல்வி தேசிய ஒருமைப்பாட்டையும் நாட்டினுள்ளும் நாடுகளிடையேயும் ஜக்கியத்தையும் உறுதிப்படுத்துகின்றது. சர்வதேச நல்லுறவையும் நன்முறையில் விருத்திசெய்வதற்குப் பல மொழிகளை ஆண்களும் பெண்களும் கற்றல் வேண்டும்' என்றார்.

பலதரப்பட்ட பாசைகளைக் கற்பதனால் அறிவு விசாலிக்கும் என்றுகூறிய அவர் 

பாடசாலைகளில் கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு அப்பால் தொழிற்கல்வியையும் வழங்குவதே விரிவுக்கல்வியாகும். நல்லதிடகாத்திரமான உடல்நிலை உவப்பான உளவளர்ச்சி பன்பனவும் கட்டாயமானது என 1941இல் கூறினார்.

அதனால்தான் 1970களில் ஜேவிபி புட்சி அதனைத்தொடர்ந்து பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையார் இலங்கைமக்களை நாட்டுப்பற்றுடைய மக்களாக மாற்றவேண்டுமெனின் புதிய கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டுமென்றெண்ணி க.பொ.த. சா.த பரிட்சை நிறுத்தப்பட்டு பதிலாக தேசிய கல்விச்சான்றிதழ் எனும் புதிய பரிட்சை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

முக்கிய பாடங்களுடன் தொழிற்கல்வியும் உடற்கல்வியும் கவின்கலைகளும் கட்டாயபாடமாக்கப்பட்டன. இம்மாற்றம் முழுக்கமுழுக்க விபுலானந்த அடிகளாரின் கல்விச்சிந்தனையில் எழுந்ததே என்பதை யாரும் மறக்கமுடியாது.

விரிவுக்கல்வியில் பெரிதும் நாட்டமுள்ள தாகூர் காந்தி பிறந்த நாட்டினில் இன்னும் விரிவுக்கல்வி நடைமுறையில் இல்லையென்பது இவ்வண் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

அப்படி இனங்கள் ஒன்றாக நல்லிணக்கத்துடனும் இனசௌயன்யத்துடனிருக்கவேண்டும் என்பதை அன்றே சிந்தித்தவர் சுவாமிகள். சிங்களமும் இஸ்லாமும் அறபும் சமஸ்கிருதமும் அவர் தோற்றுவித்த கல்லடி சிவானந்தாவில் கற்பிக்க ஏற்பாடுசெய்தவர். காத்தான்குடி முஸ்லிம்மாணவர்களும் பயிலவேண்டுமென்பதற்காக அவர் சிவானந்தாவை கல்லடியில் அமைத்தார்.

சுவாமியின் சிலைதிறப்புவிழா சிறப்பாகஅமைய இறைவனைப்பிரார்த்திப்போமாக
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா (M.Ed.) A.D.E..
காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -