சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் சர்வாதிகார ஆட்சியே இடம்பெறுகிறது - புர்கான்

எம்.வை.அமீர்-
நீண்ட பல வருட காலமாக சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நிருவாகத்தை குறிப்பிட்ட குழுவினரே தங்களது இரும்புப்பிடிக்குள் வைத்துக்கொண்டு, பல்லாண்டு வரலாற்றைக்கொண்ட இவ்வூரின் நலனிலோ அல்லது பள்ளிவாசல்களின் நிருவாகங்களிலோ காத்திரமான முன்னேற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாது காலத்தை வீணடித்து வருவதாகவும் இங்கு இடம்பெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்க முனையும் குரல்களை அடக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபை உபதலைவர் ஏ.எல்.எம்.ரசீத் (புர்கான்) ஊடகங்களுக்கு வழங்கிய பிரத்தியோக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பரிபாலன சபையினரினால் மேற்கொள்ளப்படும் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக தான் செயற்பட்டதன் காரணமாகவும், பள்ளிவாசலின் செயற்பாடுகளை காத்திரமான முறையில் கொண்டு செல்வதற்காக ஏற்கனவே இருக்கும் யாப்பில் சில திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததன் காரணமாகவும், எனது நடவடிக்கைகளை முடக்குவதற்கும், நான் வகித்துவந்த உப தலைவர் பதவியில் இருந்து கடந்த 2016-03-11 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் நான் சமூகமளித்திருந்த நிலையில் நீக்கினர் அத்துடன் கூட்டங்களுக்கு அழைப்பதில்லை என்றும் முடிவெடுத்தனர் ஆனால் இதுவிடயமாக எழுத்து மூலம் எவ்விதமான அறிவித்தல்களும் இதுவரை வழங்கப்படவில்லை.

நியாயங்களை கூறியதன் காரணமாக அவைகளை பொறுத்துக்கொள்ளாத சர்வாதிகார சபையின் நடவடிக்கையாகவே தான் தனது உபதலைவர் பதவியில் இருந்து நீக்கியதை கருதுவதாகவும் புர்கான் தெரிவித்தார்.

பல்லாண்டு வரலாற்றைக்கொண்ட சாய்ந்தமருதின், தற்போதைய பரிபாலன சபையினரின் திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகம், மற்று முறைகேடுகள் தொடர்பில் கவனம் செலுத்தாது சாய்ந்தமருது மக்கள் மௌனமாக இருப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.

வினைத்திறன் அற்ற தற்போதைய சாய்ந்தமருது பள்ளிவாசல் பரிபாலன சபையில் மூன்று வருடங்களுக்கு முன்பிருந்த 99 மரைக்காயர்களில் 42 பேரே மீதியாக காட்டப்பட்டது. இங்கு எனயோர்களைப் பற்றி ஏதாவது ஆராயப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. இதேநேரம் இப்போதுள்ள சபையில் கூட 30 பேருக்கு மேல் சபைக்கு சமூகமளிப்பதில்லை. இதுவிடயமாகவாவது சிந்தித்தார்களா? என்பதும் புதிராகவுள்ளது. ஏன் நீங்கள் வருவதில்லை என்று வினவினால் சபையின் மீது அதிர்ப்தியடந்த நிலையே அவர்களுடாக புலப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

மேற்கூறப்பட்டவர்களைப்போல் இல்லது நான் நல்ல விடயங்களுக்காக செயற்பட்டதன் காரணமாவே போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதாவது சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தில் உள்ள குறைகளை திணைக்களத்துக்கு அறிவித்ததன் காரணமாகவும், நான் தலைவராக பிரதிநிதித்துவப்படுத்தும் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் அவர்களே குற்றங்களை உருவாக்கி பின்னர் குறித்த குற்றம் தொடர்பில் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட குழுவினரால் தீர்வுகள் காணப்பட்டதன் பின்னரும் ஏதாவது ஒன்றை கூறவேண்டும் என்பதற்காக பழையதை போஸ்மட்டம் செய்து குற்றச்சாட்டாக முன்வைத்தனர். (ஆதாரம் இபத்துள் கரீம்)

இலங்கையில் உள்ள பள்ளிவாசல் பரிபாலன சபைகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள சாய்ந்தமருது பரிபாலன சபையில் இருக்கும் அநேக உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 20 தொடக்கம் 35 வருடங்களுக்கு மேலாக அங்கம் வகிப்பதாகவும் பரிபாலன சபையின் உறுப்புரிமையை தங்களது குடும்ப சொத்தாகவும் கருதி வருகின்றனர் என்றும், தந்தைக்காக மகனும், மாமனுக்காக மருமகனும், தனக்கு நெருங்கிய அவரவர் குடும்ப உறவினர்களுமே அதாவது வாய்மூடி மௌனிகளுமே சபையில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார். இவ்வாறான நிலை இந்த ஊரில் குறிப்பிட்ட குழுவினரை விட்டால் நிருவாகத்தைக்கொண்டுசெல்ல வேறு யாரும் இல்லையோ என ஏனைய ஊரவர்களை கேட்க தூண்டுவதாகவும் தெரிவித்தார்.

“சந்துக்கில் போகும் மட்டும் மரைக்காயர்களாவே இருக்கவேண்டும் என்றே பலர் விரும்புகின்றனர். தற்போதுள்ள சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் யாப்பு திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாததாகவே உள்ளது”

அயல் ஊர்ககளான 48 பள்ளிகளை பரிபாலிக்கும் சம்மாந்துறை மற்று காத்தான்குடி பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்களின் ஆயுட்காலம் 3 வருடங்கள் என யாப்பின் ஊடாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் நமது ஊரில் மட்டும் அவர்களது ஆயுள் இருக்குமட்டும் இருந்து மரணித்ததன் பின்னர் மீண்டும் அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்படும் நிலையானது குடும்ப ஆட்சி ஒன்றை நடத்துவது போல் இருப்பதாகவும் ஊரில் வாழும் ஏனையோர் ஆள லாயக்கற்றவர்கள் என பறைசாற்றுவதாகவும் தெரிவித்தார்.

8500 குடும்பங்கள் உள்ள சாய்ந்தமருதில் குறைந்தது 500 பேராவது ஊரை தலைமை வகிக்கக் கூடியவர்கள் இல்லையா? இம்மக்கள் பள்ளிவாசல் போன்ற உயர் சபைகளுக்கு எவ்வாறு செல்வது என்று கேள்வியெழுப்பினார்.

தான் வசிக்கும் முஹல்லாஹ் வாசிகளால் ஜனநாயகமான முறையில் தெரிவு செய்யப்பட்ட தன்னை குறைகளை கேட்பதன் காரணமாக இடைநிறுத்த முயற்சிப்பதாகவும் அது தொடர்பில் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும்பரிபாலன சபை உப தலைவர் ஏ.எல்.எம்.ரசீத் புர்கான் தெரிவித்தார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்

சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாயல் பரிபாலண சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி, சபையின் உபதலவர்களுள் ஒருவராக செயற்பட்டு வருகின்றவன் என்கின்ற அடிப்படையில் பரிபாலன சபையின்முறைகேடான நிதிக்கையாள்கை, ஒருதலைப்பட்சமான செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை வக்பு சபை,முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் என்பனவற்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டமை, வெளிப்படைதன்மையை பேணுதலை உறுதிப்படுத்துவதற்காக பரிபாலனசபை யாப்பு சீர்திருத்தம் செயப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து நான் கடந்த பல வருடங்களாகப் போராடி வருவதனை முடக்குவதனை நோக்கமாக வைத்து கடந்த பல மாதங்களாக இப்பள்ளிவாயல் பரிபாலன சபையின் ஒரு சிலமுக்கிய நிர்வாகிகளினால் எனக்கு எதிராக மேற்கொள்ளபட்டு வருகின்ற, அநீதியான,திட்டமிட்ட செயல்கள் தொடர்பாக தாங்களின் கவனத்திற்குக் கொண்டுவர முனைவதாகவும்.

அவை தொடர்பாக கீழ்வரும் விடயங்களை குறிப்பிடதாகவும் தெரிவித்தார்.

1. கடந்த மூன்று மாத காலங்களுக்கு மேலாக நடைபெற்ற- அதாவது 28.02.2016ம் திகதி நடைபெற்ற பொதுச்சபை கூட்டம் தவிர அனைத்து நிர்வாக, பொதுச் சபை சபைகூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை எனது அடிப்படை உரிமையை மீறப்படுகின்ற செயலாகும். (இது தொடர்பான கடிதம் முஸ்லிம் சமய காலாசரத்திணைக்களத்துக்கு ஜனவரி 5 ம் திகதி என்னால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது)

2. 28.02.2016 ம் திகதியக் கூட்டதிற்கான அழைப்பிதல் திணைக்களத்தின் அம்பாரை மாவட்டப் பிரதிநிதியின் அறிவுறுத்தலுக்கமய எனக்கு அனுப்பபட்டது. எனினும் இக்கூட்டமானது திட்டமிடப்பட்டு பிற்போடப்பட்டது.

3. 07.03.2016 ம் திகதி பொதுச்சபைக் கூட்டமானது வழமை போன்று எனக்கு அழைப்பிதல் அனுப்பப்படாமல் நடைபெறுகின்றமை அறிந்து நான் அதில் கலந்து கொண்டேன்.

4. மேற்குறிப்பிட்ட கூட்டத்தில் தாங்களும், ஏனைய சில உறுப்பினர்களும் இணைந்து என்னை வெளியேற்ற முயற்சித்தமையும் எனது கருத்துக்களை பேச விடாமல் தடுத்தமையுமானது அப்பட்டமான மனித உரிமை மீறலும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒரு பிரசைக்கான கருத்து வெளியிடும் சுதந்திரம் மறுக்கப்பட்ட சந்தர்ப்பமுமாகும்.

5. கடந்த காலங்களில் பொதுச் சபை, நிர்வாக சபைக் கூட்டங்களில் எனது கருத்துக்களை தெரிவிப்பதற்கு தடைகளை ஏற்படுத்தி வந்தமை பள்ளிவாயலில் இடம்பெற்ற முறைகேடுகள் வெளிவந்து விடும் என்பதன் அச்ச வெளிப்பாடேயாகும் என்பதுடன், இது ஜனநாயக விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதும் அடக்கு முறையானதுமாகும்.

6. எனக்கெதிராகவும், என்னை இப்பதவியில் இருந்து விலக்குவதற்கும், எனது போராட்டத்தை முடக்குவதற்கும்,ஒரு விசாரனைக் குழுவை அமைத்தும் உள்ளீர்கள். நான் வக்பு சபையில் இப்பள்ளிவாயல் பரிபாலன சபையின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாக முறையிட்டதே அடிப்படைக் காரணமென அறிகிறேன். உங்களால், உள்ளேஉள்ளவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இவ்விசாரனைக் குழுவின் சுயாதீனத் தன்மை தொடர்பான உத்தரவாதம் என்ன? குற்றம் சாட்டப் பட்டவர்களால், குற்றம் சாட்டியவரை எவ்வாறு விசாரணை செய்ய முடியும்? 

இதற்காக வக்பு சபை, கலாசாரத் தினைக்களத்திளிருந்தோ கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இவ்விசாரணை சுயாதினத்தன்மயானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதா? அங்கீகரிக்கப்படாத ஒரு யாப்பினை வைத்துக் கொண்டு, எச்சட்டத்தினை அடிப்படையாக வைத்து இவ்விசாரனைக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டது?

7. சபையில் என்னை மன்னிப்பு கேட்குமாறு பல முறை தலைவரால் வேண்டப்பட்டது. அவ்வாறு மன்னிப்பு கேட்பதாயின், எனக் கெதிரான குற்றச்சாட்டுக்கள் என்ன? அவ்வாறு நான் மன்னிப்பு கேட்பதாயின் ஜும்மாதொழுகையின் பின்னர் பொதுமக்கள் மத்தியில் ஏன் நான் மன்னிப்பு கேட்கேவேண்டும் என்பதை நீங்கள்விளக்கவேண்டும். அதேநேரத்தில் நான் ஏன் மன்னிப்பு கேட்கிறேன் என்பதை பொதுமக்களுக்கு விளங்கப்படுத்த 30நிமிடங்களை ஒதுக்கித்தருமாறு பணிவுடன் வேண்டிகொள்கிறேன்.

8. எனவே, தேவையற்ற குற்றச்சாட்டுக்களை என் மீது சுமத்துவதில் இருந்து விடுபட்டு, ஜனநாயகத்தையும்,நிர்வாகத்தில் வெளிப்படைதன்மையையும் உறுதிப்படுத்த முன்வருமாறு வேண்டியதாகவும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் கௌரவம் இன்னும் உயர்ந்து செல்வதற்கு அதன் நிருவாகம் அறிவுள்ள மற்றும் துடிப்புள்ளவர்களின் கைகளில் போய் சேரவேண்டும் என்றும் சாய்ந்தமருது மக்களின், பொது நிறுவனத்தில் அநியாயங்கள் இடம்பெறுவதை தடுத்து அதனை செயற்திறன் மிக்கதாக மாற்ற ஊரிலும் பள்ளிவாசல்களிலும் அக்கரையுள்ள அனைவரும் ஒன்றுதிரண்டு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -