சீன - இலங்கை உறவுகள் மேலும் வலுவடையும் - அமைச்சர் றிசாத் நம்பிக்கை

சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி வீதம் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது தற்போது பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக பரிவர்த்தனை மற்றும் பரஸ்பர பண்டமாற்று ரீதியிலான உறவுகள், நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவை எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். 

சீனாவின் யூணான் மாநிலத்தின் தூதுக்குழு ஒன்று அமைச்சர் றிசாத் பதியுதீனை கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய கேட்போர் கூடத்தில் சந்தித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கை, சீனாவுக்கு 2016 ஆம் ஆண்டு 173 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது. 2015 ஆம் ஆண்டு 293 மில்லியன் அமெரிக்க டொலராக அது அதிகரித்துள்ளமை, ஒரு சிறப்பான விடயமாகும். அதேபோன்று இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தக தொடர்புகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான சுயாதீன வர்த்தக உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்து, அதனை மேலும் வலுவாக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பீஜிங்கில் 2014 நவம்பரில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றதையும், இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகின்றேன். 

இருதரப்பு வர்த்தகத்தை முன்னேற்றுவதற்காகவும், வர்த்தக தீர்வை விடுவிப்பதற்காகவும் இரண்டு நாடுகளும் கலந்துரையாடி வருகின்றன. புடவை, ஆடைகள், தும்புப் பொருட்கள், தேயிலை, இறப்பர் உற்பத்திப் பொருட்கள், தெங்குப் பொருட்கள், இரத்தினக்கற்களாலான ஆபரணங்கள், பழ வகைகள், மரமுந்திரிகை, வாசனைத் திரவியங்கள், கைப்பணிப் பொருட்கள் போன்றவற்றை நாம் பிரதானமாக ஏற்றுமதி செய்து வருகின்றோம். அதே போன்று சீனாவிடம் இருந்து இலத்திரனியல் பொருட்கள், இயந்திராதிகள், பசளைகள், இரும்பு உருக்குப் பொருட்கள், வாகனங்கள், இரசாயனப் பொருட்கள் ஆகியவற்றை பிரதானமாக இறக்குமதி செய்து வருகிறோம். 

குறிப்பிடத்தக்க சீன வர்த்தக தூதுக் குழுக்கள் அடிக்கடி இலங்கைக்கு விஜயங்களை மேற்கொண்டு வர்த்தக, முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். இரண்டு நாடுகளின் தனியார் துறை வர்த்தகத் தூதுக் குழுக்கள், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காகப் பிரதான பங்களிப்பை நல்கி வருகின்றனர். 

சீனாவில் இடம்பெற்ற கிட்டத்தட்ட 40 வர்த்தக பொருட்காட்சிகளில் இலங்கையர்கள் பங்கேற்றுள்ளனர். சீன சந்தையில், இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் பிரபல்யம் பெற்று விளங்குவதை நான் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன். குறிப்பாக, இலங்கையின் தேயிலை சீனர்களால் பெரிதும் விரும்பி வாங்கப்படுகின்றது. 

இலங்கைக்கு வருகை தரும் சீன உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை, அண்மைக் காலங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான பொருளாதார வர்த்தக உறவுகள் மேலும் பலமடையும் என நான் பெரிதும் நபுகின்றேன் என அமைச்சர் தெரிவித்தார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -