சுஐப் எம்.காசிம்-
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில், இன்று (25/04/2016 ) இடபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இன்னும் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வெகு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
யாழ் கச்சேரியில் இந்த உயர்மட்ட மாநாடு நடந்து முடிந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர், மாநாட்டில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள், சூழலியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களின் கருத்துக்களை உள்வாங்கி அதனடிப்படையில் இந்தத் தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படும் என்றார்.
சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்பாட்டாலும் இந்தப் பிரதேசத்தில் சுண்ணாம்புக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படமாட்டது. அத்துடன் வேலைவாய்ப்பு வழங்கும்போது காங்கேசன்துறை மக்களுக்கும், அதன் பின்னர் யாழ்ப்பாண மக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுமென உறுதியளித்தார்.
இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மாகாண சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் முழுமையான அறிக்கைகளும், சூழல்தாக்க அறிக்கை, சமூகத்தாக்க அறிக்கை ஆகியவையும் பெறப்படுமென்று அமைச்சர் கூறினார். அத்துடன் வடமாகாண சபையின் ஆலோசனைகளும், எம்பிக்களின் கருத்துக்களும் பெறப்பட்ட பின்னரே அமைச்சரவைக்கு இது தொடர்பில் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
வடமாகாணத்தில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதன் மூலம், பல்லாயிரக்கணக்கானோர்க்கு தொழில் வழங்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் எம்பிக்களான அங்கஜன் இராமநாதன், சித்தார்த்தன், ஸ்ரீதரன், சரவணபவன், மாகாண சபை அமைச்சர்காளான குருகுல ராசா, ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர்களான ஜனூபர், இராஜலிங்கம், சீமெந்து கூட்டுத்தாபனத் தலைவர் ஹுசைன் பைலா ஆகியோரும் பங்கேற்று கருத்துத் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்தோர்கள் பங்கேற்ற போதும், வெளிப்படையாகவும், மனந்திறந்தும் அவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தமைக் குறித்து அமைச்சர் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.